Published : 06 Jul 2015 09:18 AM
Last Updated : 06 Jul 2015 09:18 AM

எய்ட்ஸ் அற்ற குழந்தைகள்: கியூபாவின் சாதனை

எய்ட்ஸ் பாதிப்புள்ள தாயின் கருவறையிலிருக்கும் சிசுவுக்கு எய்ட்ஸ் பாதிப்பு மற்றும் பிற பால்வினை நோய்கள் பரவுவதை முற்றிலுமாக அகற்றி, மருத்துவ உலகில் சாதனை படைத்திருக்கிறது கியூபா. உலக சுகாதார நிறுவனம் இதை அறிவித்திருக்கிறது.

எய்ட்ஸ் அகற்றப்பட்ட ஒரு புதிய தலைமுறை உருவாகும் வாய்ப்பை இந்த மருத்துவக் கண்டுபிடிப்பு சாத்தியமாக்கியுள்ளது. 2013-ல் கியூபாவில் இரண்டு குழந்தைகள் மட்டுமே ஹெச்.ஐ.வி. பாதிப்புடன் பிறந்தன. ஐந்து குழந்தைகள் மட்டுமே பால்வினை நோய்க்கூறுகளோடு பிறந்தன. அப்படியிருக்க எய்ட்ஸ் அற்ற சமூகத்தை கியூபா 2013-லேயே உருவாக்கிவிட்டது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற கடந்த ஒரு வருடம் கியூபா பல முயற்சிகளைச் செய்ய வேண்டியிருந்தது.

எய்ட்ஸ் பாதிப்புகளைக் களைவது சர்வதேச அமைப்புகளின் குறிக்கோளாக இருந்தாலும் கடந்த 2010-ல்தான் வட அமெரிக்காவில் மட்டுமல்லாமல் தென் அமெரிக்காவிலும் முற்றிலுமாக எய்ட்ஸ் அகற்றுவதற்கான செயல்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டன. அதன் பிறகு உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து 2015-ல் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தாய்மார்களை உயிருடன் காக்க வேண்டும் என முடிவெடுத்தது. அதன் ஒரு கட்ட நடவடிக்கையாகக் கர்ப்பிணிப் பெண்களும் அவர்களுடைய கணவர்களும் பால்வினை நோய் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நோய் கண்டுபிடிக்கப்பட்ட பெண்களுக்குக் கட்டாயம் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவம் செய்யப்பட்டது. அவ்வாறு பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்கான மாற்று உணவு பரிந்துரைக்கப்பட்டது.

அனைவருக்கும் சமமான, அனைவரையும் சென்றடையக்கூடிய சுகாதார அமைப்பை ஏற்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம். இந்தக் கோணத்தில் பார்க்கும்போது கியூபாவின் சுகாதாரத் துறை பிற நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. அண்டை நாடான கயானாவில் பால்வினை நோய்களை அகற்ற அதன் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தபோதும் பயனில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு 80 % சிறப்பான மருத்துவச் சேவைகளை வழங்கும் தென் அமெரிக்க நாடுகள் பார்படோஸ், ஜமைக்கா மற்றும் கியூபா மட்டுமே என்று ‘அன்எய்ட்ஸ்’ (UNAIDS) மற்றும் உலக சுகாதார நிறுவனத்தோடு இணைந்து யூனிசெஃப் நிறுவனம் கடந்த 2008-ல் அறிவித்தபோது, அன்றைய கயானாவின் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் லெஸ்லீ ராம்சாமி அதை முற்றிலுமாக மறுத்தார்.

சர்வதேச நிறுவனங்கள் எதற்காக கயானாவை அவமதிக்கின்றன என்பது புரியவில்லை என்று வெளிப்படையாக எதிர்த்தார். அதன் விளைவாக அவர் சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, வேளாண்மை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல், பால்வினை நோய்களை அகற்றச் சர்வதேச நிறுவனங்கள் கயானாவில் அளித்துவந்த சேவைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டன.

அதேசமயம், டாக்டர் லெஸ்லீ ராம்சாமி ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மையும் உள்ளது. உள்ளூர் மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்துவரும் நாடான கயானாவில் 80% பால்வினை நோய்களைத் தீர்ப்பது எளிதல்ல. அதிலும் ஜார்ஜ்டவுன் அரசு மருத்துவமனை தவிர, கயானாவின் பிற ஊர்களில் உள்ள பொது மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களோ, மருந்தோ, மருத்துவ உபகரணங்களோ இல்லாத நிலை உள்ளதால் ஜார்ஜ்டவுன் அரசு மருத்துவமனை நோயாளிகளால் நிரம்பிவழிகிறது. இந்நிலையில், கயானா மற்றும் பிற நாடுகள் கியூபாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சமத்துவமான சுகாதாரச் சேவை அளிப்பதன் மூலமாக இவ்வுலகை மாற்ற முடியும் என்பதே. ‘அன்எய்ட்ஸ்’ நிர்வாக இயக்குநர் மிஷேல் சிடிபே கூறியதைப் போல இது கியூபாவின் வெற்றி மட்டுமல்ல; உலகெங்கிலும் உள்ள குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாட வேண்டிய மருத்துவச் சாதனை.

கியூப நாளிதழ்

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x