Published : 04 Jul 2015 09:06 AM
Last Updated : 04 Jul 2015 09:06 AM

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்

நெருக்கடிநிலை தொடர்பான நினைவலைகளில் தவிர்க்க முடியாதது ராஜன் கொலை வழக்கு. கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர் டி.வி. ஈச்சரவாரியரின் மகன் ராஜன். பொறியியல் கல்லூரி மாணவரான ராஜன், ஒருநாள் திடீரென்று காவல் துறையால் பிடித்துச் செல்லப்பட்டார். சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், அவருக்கு என்ன ஆனது என்பதைக் காவல் துறையும் அரச அமைப்புகளும் ஒருபோதும் வாய் திறக்கவில்லை. தன் செல்ல மகன் ராஜனைத் தேடி அலைந்த பிரச்சினைகளினூடேயும், தொடர்ந்து நீதி கேட்டுச் சட்டரீதியிலான போராட்டங்களினூடேயும் அலைந்துகொண்டிருந்த பேராசிரியர் ஈச்சரவாரியர் பின்னாளில் தன் மகனின் கதையை எழுதினார். ஒரு சாமானியக் குடும்பம் நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் அரசப் பயங்கரவாதத்தால் எப்படிச் சூறையாடப்பட்டது என்பதை அது சொன்னது. தமிழில் குளச்சல் மு.யூசுப் மொழிபெயர்ப்பில் ‘காலச்சுவடு’ வெளியீடாக வந்திருக்கும் ‘ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்’ மலையாளத்தில் இதுவரை வெளியான சுயசரிதைகளில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவது. நெருக்கடிநிலை தொடர்பான முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகவும் கருதப்படும் அந்நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை ‘தி இந்து’ தன் வாசகர்களுக்கு வழங்குகிறது.

கக்கயம் முகாம்

1976 பிப்ரவரி 28-ல் ஒரு கும்பல் காயண்ண போலீஸ் ஸ்டேஷனைத் தாக்கி அங்கிருந்து ஒரு துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. இந்தக் கும்பல் நக்ஸல்பாரிகள்தான் என்ற முடிவுக்கு மிக சீக்கிரமாகவே வந்துவிட்டார்கள் அதிகாரிகள். இது சம்பந்தமான விசாரணைக்கென அமைக்கப்பட்டதுதான் கக்கயம் முகாம். கக்கயம் மலையடிவாரத்தில் தகர ஷீட்டுகள் வேயப்பட்ட, சற்று நீள் வடிவ ஒரு ஷெட் அது. காயண்ண, கூராச்சுண்டு, கக்கயம் போன்ற பகுதிகளில் நூற்றுக் கணக்கான இளைஞர்களை போலீஸார் பிடித்துக்கொண்டு வந்து சித்திரவதை செய்யத் தொடங்கினார்கள். வேனில் கொள்ளும் அளவுக்குக் கொண்டுவந்து இறக்குவதும் மீண்டும் போய்ப் பிடித்துவருவதுமான இந்த நடவடிக்கை நீடித்தது.

இங்கிலாந்தின் ஸ்காட்லாண்டு யார்டிலிருந்து குற்றவியல் விசாரணை சம்பந்தமான நவீன உத்திகளைக் கற்றுத் திரும்பிய கிரைம் பிராஞ்ச் டி.ஐ.ஜி. ஜெயராம் படிக்கல்தான் விசாரணை செய்வதற்கான தலைமைப் பொறுப்பில் இருந்தார். இந்த வழக்கின் முழு விவரமும் அவர் கைக்குள்தானிருந்தது.

இவர்களது குற்றவியல் விசாரணை முறைகளைப் பற்றியும் இங்கே சிறிது சொல்லிவிடுகிறேன். குற்றத்தை நிரூபிப்பதற்கான நவீன அறிவியல் முறைகளை இவர்கள் கையாள்வதில்லை. அடி, உதை ஒன்றுதான் இவர்களின் ஒரேயொரு உத்தி. இம்முறையைக் கணிசமான முறையில் கையாளவும் செய்தனர்.

மார்ச் 1-ம் தேதி குற்றவாளிகளைப் பிடிக்க சாத்தமங்கலம் ரீஜனல் இன்ஜினீயரிங் காலேஜுக்கு போலீஸ் ஜீப் புறப்பட்டது. அதற்கு முந்திய நாள் ஃபாரூக் கல்லூரியில் காலிகட் பல்கலைக்கழக ‘டி’மண்டல யூத்ஃபெஸ்டிவல் நடந்தது. என் மகன் ராஜன் அந்த விழாவில் முக்கியமான பங்கு வகித்தான். 28-ம் தேதி இரவு முழுவதும் ராஜன் அந்தக் கல்லூரியில்தான் இருந்தான். கல்லூரியிலிருந்து 29-ம் தேதி காலையில் ஆர்.இ.சி-யின் தங்கும் விடுதியின் முன் வந்து கல்லூரி பஸ்ஸிலிருந்து நண்பர்களுடன் இறங்கவும் உடனே போலீஸ் அவனைக் கைது செய்தது.

ராஜன் குற்றவாளிதானா என்பதை அறிய ஃபாரூக் கல்லூரியில் விசாரித்திருந்தாலே போதும். காயண்ண போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்படும்போது அவன் கல்லூரி விழாவில் கலந்துகொண்டிருந்ததை அறிந்திருக்க முடியும். அவனுடன் பஸ்ஸில் வந்திறங்கிய ஆசிரியர்களும் மாணவர்களும் அதற்குச் சாட்சிகள்.

ஆனால், போலீஸார் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. போலீஸ் ஸ்டேஷன் மீதான தாக்குதலில் யார் யார் பங்கெடுத்தார்கள், அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பன போன்ற எதையுமே விசாரணை செய்து நிரூபிக்கும் எண்ணம் அவர்களிடமில்லை. அவர்கள் எந்தவிதமான சட்டவிதிகளையும் கடைப்பிடிக்காமல் ராஜனை முதலில் கோழிக்கோட்டுக்கும் பிறகு கக்கயத்துக்கும் கொண்டுசென்றார்கள்.

கக்கயம் முகாமுக்குள் என் மகன் அனுபவித்த சித்திரவதைகளைப் பற்றி எழுத என்னால் இயலுமா என்று தெரியவில்லை. கக்கயம் முகாமில் ஹிட்லரின் கான்ஸென்ட்ரேஷன் முகாமை நினைவுபடுத்தும் விதமான வதைகள் அரங்கேற்றப்பட்டன. ஒரு தலைமுறையின் ஆழ்ந்த சிந்தனைகளை இரும்புக் கரங்களால் தகர்க்க முயலுகின்ற, ஜனநாயக விரோதமான, இதயமே இல்லாத ஒரு பரிசோதனை முறை அங்கே அரங்கேற்றப்பட்டது. ஜெயராம் படிக்கல் என்ற போலீஸ் அதிகாரி அதில் எந்த அளவுக்கு வெற்றிபெற்றார் என்பதை வரலாறுதான் முடிவு செய்ய வேண்டும்.

உடம்பு முழுவதும் ஊசிகளின் சித்திரவதை

போலீஸ் பிடித்துக்கொண்டுபோன என் மகனைப் பற்றிய எந்தத் தகவல்களையும் அளிக்க முதல்வர் அச்சுத மேனன் முதல் காயண்ண சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தரன் வரை யாருமே தயாராக இல்லை. ராஜனை ஆஜர்படுத்தக் கோரும் (ஆட்கொணர்வு) என் மனுவின் மீதான சட்ட விதியின்படி அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் விஷயத்தில் அரசு தோல்வி அடைந்தபோதுதான் உண்மையில் ராஜன் என்ன ஆனான் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இந்த விஷயத்தில் அச்சுதமேனனும் கருணாகரனும் என்னிடம் நடந்துகொண்ட குரூரம் என்னை மிகவும் தளர்த்தியது. இவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே தெரியாது என்றால், அவர்கள் அலங்கரித்திருந்த அந்தப் பதவிக்கான அருகதையற்றவர்கள் அவர்கள் என்பதைச் சொல்வதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.

போலீஸ் பிடித்துக்கொண்டுபோன தன் மகனைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றால், அந்தப் பெற்றோர் படும் வேதனை என்னவென்பதை அனுபவம் மூலம்தான் அறிய முடியும்.

என்னைப் பொறுத்தவரை உடம்பில் ஊசி ஏற்றுவதைப் போன்ற ஒருவித வேதனையை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருந்தேன். சாப்பிட அமர்ந்தால் அவன் நினைவு வரும். ஆகாரம் இறங்காது. படுத்தால் தூக்கம் பிடிக்காது. கடினமான சூடேற்று நெகிழ்ந்து கொடுக்கும் கனம் குறைந்த உலோகத் துண்டுபோல் என் மனம் எப்போதும் துவண்டுகொண்டிருந்தது.

அடி உதைத் துறை

நான் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பிய மனுக்களின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் பலர் என்னிடம் விசாரணை செய்திருக்கிறார்கள். ‘உங்க மகன் எங்கே போயிருக்கிறான்’என்பதுதான் அவர்களுடைய முதல் கேள்வி. ஆனால், இதனிடையே சி.ஐ.பி-யின் எர்ணாகுளம் ஜில்லா காவல்துறைக் கண்காணிப்பாளரான பாலகிருஷ்ணபிள்ளை என்றொருவர் தன்னை வந்து சந்திக்கும்படி எனக்கு ஆள் அனுப்பினார். வித்தியாசமான மற்றொரு அனுபவமாக அமைந்தது அது.

“நான் உங்கள் மகனை வெளியே கொண்டுவருகிறேன். அப்படிக் கொண்டுவந்தால் அவனை என்ன செய்யவிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?”

இந்தக் கேள்வி என்னை ஒரு நிமிடம் குழப்பத்திலாழ்த்தியது. கேள்வியின் நோக்கம் என்னவென்பதை உடனே புரிந்துகொள்ள என்னால் முடியவில்லை.

“ராஜனின் பொறியியல் கல்வியைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதுதான் என் உத்தேசம்” என்று பதில் சொன்னேன். “அப்படிச் செய்ய வேண்டாம்” என்றார் அந்த அதிகாரி. நான் திகைத்துப்போனேன். இவர் என்ன சொல்லவருகிறார் என்று கொஞ்சமும் பிடிபடவில்லை.

அப்போது நாடகபாணியில் அந்த அதிகாரி கூறினார்.

“ராஜன் நக்ஸல்பாரிகளின் அமைப்பிலேயே இருக்கட்டும். அப்படியே நக்ஸல்பாரிகளின் இயக்கங்களைப் பற்றி எங்களுக்குத் தகவல் தர வேண்டும்.”

இந்த போலீஸ் அதிகாரிக்கு ராஜன் ஒரு நக்ஸல்பாரி என்பதில் எந்தவிதமான அபிப்பிராய வித்தியாசமும் இல்லை. ஆனால், அதை நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் கைவசம் இருக்கவுமில்லை. இதுதான் இவர்களின் விசாரணையின் அழகு. இது நம் காவல்துறையின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் உயர்மட்டத் தலைவரிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவம். ஜனாதிபதியின் பரிந்துரையின்படி நடக்கும் விசாரணையே இந்த அழகிலிருக்கிறது என்றால், மற்ற விசாரணை முறைகள் எப்படியிருக்கும்?

ராஜனின் கைதுக்குப் பின் கீழ்மட்ட, உயர்மட்ட காவல் துறை அதிகாரிகள் பலரை நான் தொடர்புகொண்டது உண்டு. அந்த அடிப்படையில் சொல்கிறேன்... காவல்துறை என்பது, அடி உதைகளைக் கருவியாகக் கொண்ட ஒரு இலாகா எனும் என் பார்வையைச் சரியானதாக நினைக்கிறேன்.

நெருக்கடிநிலையின்போது சட்டம் - ஒழுங்கு

கேரள மக்களின் இயல்பு வாழ்க்கையில் நெருக்கடிநிலைக் காலச் சட்டத்தின் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. இச்சட்டத்தை அப்பட்டமாகத் தூக்கிப் பிடித்தவர்கள்கூட ஒருவித சுதந்திரமின்மையையே உணர்ந்தார்கள். பத்திரிகைச் செய்திகள் மட்டுமல்ல, பிரஜைகளின் வார்த்தைகள்கூடத் தணிக்கைக்கு உள்ளானது. கிராமங்களில் மட்டுமல்ல, வீடுகளிலும்கூட மக்கள் பேசுவதற்கும் இந்திரா காந்தியையோ, கருணாகரனையோ விமர்சிப்பதற்கும் அஞ்சினார்கள்.

மனிதாபிமானமற்ற சில காங்கிரஸார் இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் அரசியல் எதிரிகளையும் போலீஸை வைத்து வேட்டையாடுவதில் தங்களின் திறமையைப் பிரகடனம் செய்தார்கள். அரசுப் பணியாளர்களும் பெரும்பீதியுடனேயே இருந்தனர்.

இக்காலகட்டத்தின் தனிமனித உரிமை மீறலைப் பற்றித் தெரிந்துகொள்ள நான் ஒரு சிறு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

ராஜன் வழக்கு சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது (வழக்குகுறித்த விவரங்களைப் பின்னர் விவரிக்கிறேன்). வழக்கறிஞர் நிரண்டே, தன் வாதப் பிரதிவாதத்தின்போது இப்படிக் குறிப்பிட்டார்: ‘இன்று எந்த ஒரு தனி மனிதனையும் நடுரோட்டில் வைத்துச் சுட்டுக் கொல்வதற்கான அதிகாரம் ஒவ்வொரு போலீஸ்காரனுக்கும் இருக்கிறது. அதைக் கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் கிடையாது.’ நெருக்கடிநிலைக் காலகட்டம்குறித்து நடுங்கச் செய்யும் சரியான விளக்கத்தை இந்த வார்த்தைகளிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். இப்படியான ஒரு நிலையின் காரணமாக ஏற்பட்டதுதான் ராஜன் சம்பவம் என யூகிப்பதில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

காத்திருந்த இலைச் சோறு

ராஜன் வந்துவிடுவான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. இரவு எப்போதுமே ஒரு இலைச் சோறு தயாராக வைத்திருக்கும்படி நான் என் மனைவியிடம் சொல்லிவைத்திருந்தேன். அவன் திடீரென்று வந்துவிடுவான். பட்டினி கிடந்து பசித்த வயிற்றுடன், சோர்ந்துபோன சரீரமுமாக அவன் வருவான். அப்போது சாப்பாடு தயாராக இருக்க வேண்டும். நிச்சயமாக அவன் வருவான். அவனால் வராமலிருக்க முடியாது.

நாய்கள் காரணமில்லாமல் குரைப்பதும் ஊளையிடுவதும் காதில் விழும்போது முன்னரங்கின் கதவைத் திறந்து ‘அப்பா’ என்ற குரல் காதில் விழுகிறதா என்று இருட்டில் செவிகூர்ந்து பல தடவை அப்படியே நின்றிருக்கிறேன். பிறகு, கதவை அடைக்காமலேயே படுக்கையில் விழுவேன். ‘செல்ல மகனே’என்று அழுகை கமறி நெஞ்சில் உறையும். என் கண்களிலிருந்து நீர்த்துளிகள் வெளிவருவதையும் நான் தடுத்தாக வேண்டும். என் ராதா அவனுடைய அம்மா, இதையெல்லாம் அறிந்துவிடக் கூடாது!

அவன் ஆன்மா நிச்சயம் வரும்!

நேற்று இரவில் கனத்த மழை பெய்தது. ஜன்னல்களில் வெள்ளிக் கீற்றுகளாக மின்னல்கள். நேரம் அதிகமாகி இருக்கலாம். சுற்றிலும் ஆழ்ந்த நித்திரையின் மவுன ஓசை.

ராஜன் என் நினைவுக்கு வந்தான். நினைவுகளில் நிழலும், நிலவும், மழையுமாக ராஜன் வருகிறான் - மகனை இழந்த அப்பா, அப்பாவை இழந்த மகன் - ஒரு நண்பன் துக்கத்தின் அழுத்தம் குறித்துக் கேட்டான். பதில் இல்லை. என் உலகம் சூன்யமாகியிருக்கிறது. என் சூரியனும் நட்சத்திரங்களும் அஸ்தமித்துவிட்டன. ஒரு மகனுக்காக, அவனைப் பற்றிய ஜொலிக்கும் நினைவுகளில் நனைந்து, குதிர்ந்து ஒரு தகப்பனுக்குப் போதுமானவரை அழலாம். ராஜனை ஏதோ கொடுங்காட்டில் வைத்து சீனியைக் கொட்டி எரித்ததாகச் சொன்னார்கள். அவனுடைய எலும்புத்துண்டுகூட யாருக்கும் கிடைத்துவிடக் கூடாது என்பதுதான் நோக்கம்.

ஆன்மா என ஒன்று இருப்பதாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்பிக்கை வைத்தேன். ஏதோ கொடுங்காட்டின் ரகசிய அறைக்குள்ளிருந்து காயப்பட்ட அந்த ஆன்மா துடித்தபடியே ஓலமிடுகிறது. ஆன்மாவுக்கு வழி அறிய இயலுமென்றால் அவன் இங்கே வருவான். அவன் அன்பு செலுத்திய, அவனை நினைத்து நித்திய இருட்டின் இடைவழிகளினூடே கடந்துபோன ஒரு தாய் இதுவரை இங்கே இருந்தாள். கூடவே இந்தத் தகப்பன், பிறரின் உதவியோடு மட்டுமே கால்களை ஒரு அடி முன்னே எடுத்து வைக்க இயலும் பலமிழந்துபோன இந்தத் தகப்பன். ஆனால், இந்தக் கைகள் இப்போதுகூட நடுங்குகின்றன. அவனை வாரியெடுத்து நெஞ்சோடு சேர்த்தணைத்த இந்தக் கைகள் ஏனோ விறைக்கின்றன. அன்பு மகனே, நீ ஏன் வரவில்லை?

நான் வாசல் கதவை அடைப்பதில்லை. பெருமழை எனக்குள்ளேயே பெய்து தீர்க்கட்டும். ஒருபோதுமே கதவுகளைத் தாழிட முடியாத ஒரு தகப்பனை அரூபியான என் மகனாவது அறிந்துகொள்ளட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x