Published : 04 Oct 2019 08:43 AM
Last Updated : 04 Oct 2019 08:43 AM

கொள்கையே... உன் விலை என்ன? 

புவி

தேர்தலையொட்டிய விவாதங்களெல்லாம் தேர்தல் முடிவுகளோடு முடிந்துவிடுவதுதான் எப்போதும் நடக்கிற வழக்கம். அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் செலவுக் கணக்கைச் சமர்ப்பிப்பதும் அவற்றைச் சரிபார்த்து ஆணையம் மக்களுக்குத் தெரிவிப்பதும் நடைமுறையில் தவிர்க்கவியலாத ஒரு சடங்கு மட்டுமே. ஆனால், இம்முறை தேர்தல் ஆணையத்திடம் திமுக அளித்திருக்கும் செலவுக் கணக்கு, தமிழக அரசியலில் பலத்த விவாதங்களை எழுப்பியபடி இருக்கிறது.

மக்களவைத் தேர்தல் செலவுகளுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் ரூ.15 கோடியும், இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியிடம் ரூ.10 கோடியும் நன்கொடை அளித்திருப்பதாக திமுக தெரிவித்திருக்கிறது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கும் திமுக ரூ.15 கோடி அளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அது சரியான அணுகுமுறையா என்ற கேள்வி யாருக்கும் எழவில்லை. கூட்டணிக்குத் தலைமை ஏற்றிருக்கும் பலம் பொருந்திய ஒரு கட்சி, தன்னோடு கைகோத்து நிற்கும் சிறிய கட்சிகளுக்குத் தேர்தல் செலவுக்காக நிதியுதவி செய்கிறது என்கிற பதிலே போதுமானதாக இருக்கிறது. அந்த நியாயம் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் பொருந்துமா?

கம்யூனிஸ்ட்டுகளின் தார்மீக பலம்

கம்யூனிஸ்ட்டுகள் என்றதும் ஒவ்வொருவர் மனதிலும் என்னென்னவோ மனச்சித்திரங்கள் எழும். அரசு அலுவலகங்கள்தோறும் கையில் மனுக்களோடு அலைபவர்கள், அதே அலுவலக வாசலில் கூடிநின்று ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், பேருந்து நிலையங்களிலும் ரயில்வே நிலைய வாசல்களிலும் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பவர்கள் என்று தொடரும் இந்தக் காட்சிகளில், கூட்டங்களின் நடுவே உரத்த முழக்கங்களோடும் சிற்றுரைகளோடும் நிதி கேட்டு அவர்கள் உண்டியல் குலுக்கும் காட்சியும் கட்டாயம் இருக்கும். மக்களிடம் கையேந்துவதைக் கௌரவமாக மட்டுமின்றி அதையே ஒரு பிரச்சாரமாகவும் கருதியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அந்தத் தார்மீக பலம்தான் கம்யூனிஸ்ட்டுகளின் வலிமை. நாடாளுமன்றத்தில் அவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு விவாதத்திலும் அவர்களின் பார்வை என்னவென்று அறிந்துகொள்வதற்கு நாடே எதிர்பார்த்திருப்பது அதனால்தான்.

ஆட்சிக்காகவும் அதிகாரத்துக்காகவும், அதற்காகத் தேர்தல் வெற்றிக்காகவும் சமரசம் செய்துகொள்ளாதவர்கள் என்ற ஒரே ஒரு காரணம்தான், அவர்களின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையைத் தோற்றுவித்திருக்கிறது என்பதுபோலவே... அதே காரணத்தால்தான் அவர்கள் தேர்தல்களில் தோற்கவும் செய்கிறார்கள் என்பது துரதிர்ஷ்டம். எனினும், இன்றைய தேர்தல் அரசியலில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆட்சியளிக்கும் வாய்ப்பை மக்கள் அளிக்காவிட்டாலும் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து அளித்தே வந்திருக்கிறார்கள். அந்தக் குறைந்தபட்சப் பிரதிநிதித்துவத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக கம்யூனிஸ்ட்டுகளும் தேர்தல் கூட்டணிகளில் பங்கேற்றுவருகிறார்கள். கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு விஷயங்களில்தான் கம்யூனிஸ்ட்டுகள் பேரம் பேசுகிறார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்துவருகிறது. ஆனால், தொகுதிகளை மட்டுமல்ல; தேர்தல் செலவுகளுக்காக நிதியும் பெறுகிறார்கள் என்பது மக்களிடம் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களுக்குமே அதிர்ச்சியாக இருக்கிறது.

தேர்தல் நேரங்களில் முன்னணி அரசியல் கட்சிகளுக்குப் பெருமுதலாளிகள் வழங்குகிற நிதியுதவிகளைத் திட்டவட்டமாக ஏற்க மறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால், இப்போது கூட்டணிக் கட்சிகளிடம் விலைபோய்விட்டதாக விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். திமுகவின் செலவுக் கணக்கைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டவுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள். ‘இது வழக்கமான நடைமுறைதான்’ என்று அவர்கள் அளித்திருக்கும் பதில், கட்சி வட்டாரங்களுக்குள் கடும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாணிக்கம், ராமமூர்த்தி, நல்லகண்ணு, தா.பாண்டியன் காலங்களிலெல்லாம் வழக்கமாக இருந்த நடைமுறையா இது என்ற கேள்வியும் எழுகிறது.

புது நடைமுறை

தேர்தல் செலவுகளுக்கு ஒவ்வொரு முறையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திண்டாடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. நெருக்கடியான அந்த நேரங்களிலும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து எந்த விதமான தொகையையும் நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்றது கிடையாது என்கிறார்கள், இக்கட்சிகளின் மூத்த நிர்வாகிகள். கூட்டணிக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களிடம் வாக்குச் சாவடிகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதே வழக்கம். அதற்காக எந்தத் தொகையையும் கைநீட்டிப் பெறுவதில்லை என்பதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் விடாப்பிடியான உறுதியோடு இருந்துவந்திருக்கின்றன.

இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, இதுகுறித்து மாநிலத் தலைமைதான் விளக்க வேண்டும் என்று தெளிவாக அறிவித்துவிட்டது. ஆனால், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள செலவுக் கணக்கில் திமுகவிடம் நிதி பெற்றதைப் பற்றிய எந்த விவரங்களும் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் தன்னுடைய செலவுக் கணக்கைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கவில்லை.

தேர்தல் நன்கொடை பெற்றதும் செலவழிக்கப்பட்டதும் வெளிப்படைத் தன்மையோடு இருக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா, நன்கொடை பெறுவதில் உள்ள தார்மீகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதாவது, கம்யூனிஸ்ட் கட்சிகள் நன்கொடை பெறுவது குறித்தும் அதில் எழுகின்ற தார்மீகச் சிக்கல்கள் குறித்தும் இதுவரை அக்கட்சியில் விவாதிக்கப்படவில்லை என்பது மிகத் தெளிவாகிறது. திமுகவிடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்பதல்ல பிரச்சினை; அப்படிப் பெறுவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் தார்மீகப் பலத்தைக் குலைத்துவிடாதா என்பதுதான். உள்ளூர்ப் பிரச்சினைகளில் என்ன முடிவெடுப்பது என்று கூடிக் கூடி விவாதிக்கும் கம்யூனிஸ்ட்டுகள், அவர்களின் ஆதார பலத்தை அசைத்துப் பார்க்கும் மிக முக்கியமான பிரச்சினையைப் பற்றி விவாதிக்கவே இல்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

தேர்தலுக்காக மிகக் குறைவாகச் செலவிடுபவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். ஓரிருவர் நீங்கலாகப் பெரும்பாலும் வேட்பாளர்களிடம் செலவழிக்கப் பணமும் இருக்காது. கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களும் அதை எதிர்பார்க்க மாட்டார்கள். நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தமட்டிலும், கூட்டணிக் கட்சிகளின் பலத்தால் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்ட நிலையில்தான் இருந்தது. இருந்தும், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் அதிக தொகை செலவழிக்க வேண்டியிருந்ததா என்ன?

தியாகிகளை இழிவுபடுத்தும் செயல்

மார்க்ஸிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டிலும் மாநிலக் குழு, மாநில செயற்குழு என்று இரண்டு குழுக்களில் விவாதிக்கப்பட்டே முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் இவ்விரண்டு குழுக்களோடு நிர்வாகக் குழு என்ற மூன்றாவது குழுவும் உண்டு. திமுகவிடமிருந்து தேர்தல் நன்கொடை பெறுவது குறித்து இந்தக் குழுக்களில் விவாதிக்கப்பட்டதா? கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களிடமாவது இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதா?

சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் வாதங்களை முன்வைப்பதற்கு அவர்கள் வெற்றிபெற வேண்டியது அவசியம்தான். அதனால், கூட்டணி என்பதும் தவிர்க்க முடியாததுதான். அதற்காக, கூட்டணி சேரும் கட்சியிடம் கையேந்தி நிற்பது, கம்யூனிஸ்ட் இயக்கத்தை இதுவரையிலான அதன் தியாகத்தை இழிவுபடுத்துவது. தொண்டர்கள் வசூலித்துக் கொடுத்த நிதி கைப்பையில் இருந்தாலும், அதைச் சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதால், பேருந்துக்குக் காசில்லாமல் நடந்துபோன ப.ஜீவானந்தமும் கட்சி அலுவலகங்களில் செங்கற்களைத் தலையணையாக வைத்துக்கொண்டு தூங்கிய பாரிஸ்டர் கே.டி.கே.தங்கமணியும், தஞ்சை விவசாயத் தொழிலாளர்களின் குடிசைகளில் கொடுக்கப்பட்ட கூழையும் கஞ்சியையும் குடித்துக் கட்சிப் பணியாற்றிய சீனிவாச ராவும் ஏனோ நினைவுக்கு வந்துபோகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x