Published : 03 Oct 2019 08:30 AM
Last Updated : 03 Oct 2019 08:30 AM

சார்லி சாப்ளின் கேள்வியும் காந்தியின் பதிலும்

நிருபர்: ‘இந்த உலகம் நல்லதாகிக்கொண்டிருக்கிறதா அல்லது மோசமாகிக்கொண்டிருக்கிறதா?’

காந்தி: ‘இந்த உலகம் மோசமாக ஆகிக்கொண்டிருப்பதற்கான சான்றுகளே கிடைத்துக்கொண்டிருந்தாலும்கூட நல்லது செய்யும் கடவுளை நான் நம்பும் வரையில் இந்த உலகம் மேன்மேலும் நல்லதாக ஆகிக்கொண்டிருப்பதாகவே நான் நம்ப வேண்டும்.’

காந்தியிடம் பெற்ற தார்மீகம்

லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை துயரங்களால் நிரம்பியது. இளம் வயதிலேயே தந்தையை இழந்த சாஸ்திரியின் படிப்புக்குப் பலரின் உதவிக்கரம் தேவைப்பட்டது. கல்வியின் அவசியத்தை உணர்ந்திருந்தபோதும் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு மூன்று மாதங்கள் இருந்த நிலையில், ஒத்துழையாமை இயக்கத்துக்கு காந்தி விடுத்த அழைப்பை ஏற்று, படிப்பை நிறுத்திவிட்டுப் போராட்டத்தில் இறங்கியவர் சாஸ்திரி. பிந்தைய அரசியல் வாழ்க்கையில் அவர் செல்வாக்கோடு இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்னவோ வறுமையிலேயே கழிந்தது. மருந்து வாங்கித்தர முடியாமல் தன் மகளின் உயிரையே பறிகொடுத்த அவலக் கதை சாஸ்திரியினுடையது. காஷ்மீரில் ஒரு சிக்கலான சூழல் ஏற்பட்டபோது நேரு அங்கு அனுப்பியது சாஸ்திரியைத்தான். பதவியின் உயரத்தில் இருந்தபோதும் அவரிடம் குளிரைத் தாங்கும் கோட்டு இருக்காது என்று தன்னுடைய கோட்டைக் கொடுத்தனுப்புகிறார் நேரு. இவ்வளவு நெருக்கடிகளுக்கு இடையிலும் பொதுப்பணியில் தன்னைக் கரைத்துக்கொள்ளும் நெஞ்சுரமும் தார்மீகமும் சாஸ்திரிக்குக் கிடைத்தது காந்தியிடமிருந்துதான்.

சார்லி சாப்ளின் கேள்வியும் காந்தியின் பதிலும்

காந்தியை சந்தித்த சார்லி சாப்ளின் ‘நீங்கள் இயந்திரங்களை வெறுக்கிறீர்களா? ரஷ்யாவைப் போல இந்தியாவிலும் எல்லோருக்கும் வேலையும் கூலியும் கிடைத்து ஏழ்மை மாற வழி ஏற்பட்டால் அப்போதும் நீங்கள் இயந்திரங்களை வெறுப்பீர்களா?’ என்று கேள்விகளை அடுக்குகிறார். ‘இயந்திரங்கள் மனிதர்களைப் பட்டினி போடுவதாகவே நான் எண்ணுகிறேன். மனிதருக்கு உதவிசெய்து, அவர்களுடைய சுக வாழ்வுக்கு அடிகோலும் இயந்திரங்களை நான் வெறுக்கவில்லை. உதாரணமாக, தையல் மிஷினும் சைக்கிளும் மனிதருக்கு அவசியம்தான். ஆனால், அவர்களைச் சுரண்டும் ராட்சச ஆலைகள் அவசியமா என்று யோசித்துப்பாருங்கள்’ என்கிறார் காந்தி.

வீடு நிறைய தலைவர்கள்

மணப்பாறை விராலிமலை சாலையைக் கடக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு தலைவரின் படம் மாலை அணிவிக்கப்பட்டு நாற்காலியில் வைக்கப்பட்டிருக்கும். அதற்குக் காரணம், 1982 முதல் 37 வருடங்களாக நாட்டுக்கு உழைத்த தலைவர்களைக் கொண்டாடிவரும் சலவைத் தொழிலாளி பெரியசாமிதான். மேடை, ஒலிப் பெருக்கி, அதிர்வேட்டு, பேனர், கும்ப மரியாதை ஏதும் கிடையாது. அழைப்பை ஏற்று முக்கியஸ்தர்கள் வந்தால் உண்டு. இல்லையென்றால், குடியிருப்பில் உள்ள ஒரு பெரியவரை அழைத்து தலைவர்கள் படத்துக்கு மாலை அணிவிக்கச் செய்து, குழந்தைகளுக்கு மிட்டாய் தருவார். வீடு நிறைய பொருட்கள் உள்ள வீட்டைத்தான் பார்த்திருப்போம்; வீடு நிறைய தலைவர்கள் படத்தை வைத்து அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பெரியசாமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லாத் தலைவர்களிடமும் இருக்கும் மேன்மையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை காந்தியிடமிருந்து அவர் கற்றுக்கொண்டதாகச் சொல்வார். “எதற்காக இதைச் செய்கிறீர்கள்?” என்று கேட்டால், “நம் தலைவர்களை இளைய தலைமுறையிடம் கொண்டுசேர்க்கும் நோக்கத்தில்தான்” என்பார் பெரியசாமி.

- மணவை தமிழ்மாணிக்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x