Published : 02 Oct 2019 07:56 AM
Last Updated : 02 Oct 2019 07:56 AM

காந்தி: மகிழ்ச்சி பொருளியர்!

அ.அண்ணாமலை

காந்தியின் கொள்கைகளைப் பற்றிப் பேசும்போது பலரும், “காந்தியின் மற்ற கொள்கைகளைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அவருடைய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது” என்று கூறுவது ஒரு க்ளிஷே. ஏதோ எல்லோருக்கும் கார் கிடைக்கப் பொருளாதார வல்லுநர்கள் திட்டமிடுவதுபோலவும், காந்திதான் அதைத் தடுத்துவிட்டார் என்பதுபோலவும் பேசுவார்கள். நம்மிடம் இருக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு அனைவருக்கும் கார் கொடுப்பது சாத்தியமா என்று யாரும் யோசிப்பதில்லை. அளவான இயற்கை வளங்களை வைத்துக்கொண்டு, அளவற்ற வளர்ச்சி என்று திட்டமிடுவது சாத்தியமில்லை என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும். இதுதான் காந்தியப் பொருளாதாரம். இது எவ்வாறு நடைமுறைக்குச் சாத்தியமில்லாதுபோகும்?

காந்தியின் பொருளாதாரச் சிந்தனை என்பது மக்கள் சார்ந்ததே தவிர, இயந்திரத்தையோ பெரும் தொழில்நுட்பத்தையோ சார்ந்தது அல்ல. காந்தி ‘அதிகமானோரால் உற்பத்தி’ என்னும் கருத்தை முன்வைத்தார். அதிகமானோர் உற்பத்தியில் ஈடுபடும்போது, உற்பத்தி பெருகுவதோடு, மக்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும். உற்பத்திசெய்யும் பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கையும் கூடும்.

உயரிய தொழில்நுட்பம் மிகவும் தேவையான சில துறைகளுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ள காந்தி ஆதரவு தெரிவித்தார். ஆனால், அதுபோன்ற நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமேயொழிய தனியாரிடம் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார் காந்தி. உற்பத்தியும் விநியோகமும் உற்பத்திசெய்யும் பகுதியிலேயே அதற்கான சந்தையை ஏற்படுத்துவதன் மூலம், போக்குவரத்துச் செலவு, சந்தைப்படுத்தல் செலவு போன்றவற்றைக் குறைக்கலாம் என்றார் காந்தி. ஓர் உதாரணத்துக்கு, உருளைக்கிழங்கு சிப்ஸை எடுத்துக்கொள்ளலாம். அதனுடைய மையப்படுத்தப்பட்ட உற்பத்தித் தொழிற்சாலை ஏதோ ஒரு மாநிலத்தில் உள்ளது. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் தயாரிப்புகள்தான் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கிடைக்கின்றன. 52 கிராம் ரூ.20. அதாவது, 1 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ் சுமார் ரூ.400. ஆனால், நம்முடைய கடைவீதியிலேயே தயாரிக்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் கிலோ ரூ.250-க்குக் கிடைக்கிறது. விளம்பர மோகத்தால் 52 கிராம் சிப்ஸை ரூ.20 கொடுத்து வாங்குவதுதான் பொருளாதார முன்னேற்றம் என்று எண்ணுகிறோம்.

ஆனால், காந்தியப் பொருளாதாரத்திலோ அதிகாரத்தையும் உற்பத்தியையும் மையப்படுத்தாது பரவலாக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இன்றைய வன்முறையான போக்குக்கும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆடம்பரமான வாழ்க்கை, வறுமை, பயங்கரவாதம் என்ற பல நோய்களுக்கும் அடிப்படையான காரணம், அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிவதுதான். அது உடைய வேண்டும் என்றால் பொருளாதாரத்திலும் உடைய வேண்டும்.

நிலைத்த வளர்ச்சியைப் பற்றியும், அதேசமயம் வளமான வாழ்வையும் அடைய ஏற்ற தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுத்து, சுற்றுச்சூழலைப் பாதிக்காத முன்னேற்றத்தைக் காண வழிவகை செய்வதுதான் காந்தியப் பொருளாதாரம். சாதாரண மனிதர்களுக்காக இயற்கையோடு இயைந்த, ஆரோக்கியமான வாழ்வுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பதுதான் காந்தியப் பொருளாதாரம். நீங்கள் மகிழ்ச்சியுடன் பொருளாதாரத்தை இணைப்பது என்றால், காந்தியுடன்தான் பொருளாதாரத்தை இணைக்க வேண்டும்.

- அ.அண்ணாமலை, இயக்குநர்,

தேசிய காந்தி அருங்காட்சியகம், புது டெல்லி.

தொடர்புக்கு: nationalgandhimuseum@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x