Published : 30 Sep 2019 08:39 AM
Last Updated : 30 Sep 2019 08:39 AM

வாரிசுகளுக்கு டிக்கெட் இல்லை: பாஜக கண்டிப்பு!

வாரிசுகளுக்கு டிக்கெட் இல்லை: பாஜக கண்டிப்பு!

ஹரியாணா, மகாராஷ்டிர மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், கட்சிக்காரர்களுக்குப் பொதுவான நிபந்தனைகளைக் கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இரு மாநிலங்களிலும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களை வேட்பாளர்களாகக் கட்சி தேர்ந்தெடுக்காது. கட்சி சார்பில் இப்போது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களின் பிள்ளைகளுக்கு (மருமகர்களும்கூடத்தான்) வாய்ப்பு தரப்பட மாட்டது. கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்த தொண்டர்கள் ஏராளமானோர் இருக்க, திரும்பத் திரும்ப ஒரே குடும்பத்திலேயே மேலும் மேலும் பலருக்கு வாய்ப்பு தர வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பதாக மேலிடம் அறிவித்திருக்கிறது. மாநிலத்தின் இக்கட்டான சூழ்நிலை கருதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு மட்டும் வயதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் மேலிடம் தெளிவுபடுத்தியிருக்கிறது. வாரிசுகளை ஊக்குவிக்கும் கட்சிகள் படிக்க வேண்டிய பாடம்!

தீண்டாமை ஒழிப்புக்கு வழிகாட்டும் திருபயத்தாங்குடி

உவகை ஊட்டும் கிராமமாக உருமாறியிருக்கிறது நாகை மாவட்டத்து திருபயத்தாங்குடி. தீண்டாமையற்ற கிராமமாக மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த 1,500 பேர் வாழும் இந்த ஊராட்சியில் தலித்துகள் பெரும்பான்மையினர். இரண்டு முஸ்லிம் குடும்பங்களும் ஒரு கிறிஸ்தவக் குடும்பமும் வாழ்கின்றன. குடிநீருக்காகவோ இடுகாட்டுக்காகவோ கோயில் கொடைக்காகவோ வியாபாரத்துக்காகவோ இவர்கள் சண்டையிட்டுக்கொள்வதில்லை. ஊர் தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஊராரே கூடி முடிவெடுக்கின்றனர். அரசியல் கட்சிகளை மதிப்பவர்களும் ஆதரிப்பவர்களும் இருந்தாலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் இங்கே ஆதிக்கம் செலுத்த அனுமதிப்பதில்லை. சாதியோ சாதிக்கு அடையாளமான கயிறுகளோ இங்குள்ள பள்ளிக்கூடங்களில் கிடையாது. இங்கே நிலம் வைத்திருப்பவர்கள் சாகுபடி காலத்தில் இருக்கும் வேலைகளை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கின்றனர். சாதியை அழித்தொழிப்பதற்கு சாதி மறுப்புத் திருமணம்தான் முதன்மையானது என்று பெரியார் பேசியதற்கு இவர்கள் செயல் வடிவம் கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

கருத்து வேறுபாட்டைத் தேசத் துரோகமாக்குவதா?

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி ஷெஹ்லா ரஷீத் மீது தேசத் துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. காஷ்மீரைச் சேர்ந்த இவர் மாணவர் தலைவராக உருவாகிக்கொண்டிருக்கிறார். காஷ்மீரில் ராணுவம் அத்துமீறி நடப்பதாக அவர் ட்வீட்டுகள் வெளியிட்டார். இதைப் படித்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலக் அலோக் ஸ்ரீவாஸ்தவா டெல்லி காவல் துறையிடம் புகார் அளித்தார். “இது ஜனநாயக நாடு இல்லை என்று கூறிவிடுங்கள்; அரசின் செயல்களை விமர்சிப்பதை நிறுத்திவிடுகிறேன்” என்று ஷெஹ்லா அடுத்து ட்வீட் செய்தார். “அரசு நிர்வாகத்தையோ நீதித் துறையையோ அதிகாரவர்க்கத்தையோ ராணுவத்தையோ விமர்சிப்பது தேசத் துரோகக் குற்றமில்லை. அப்படி விமர்சிப்போரின் குரல்வளையை நெரிக்க நாம் முற்பட்டால் ஜனநாயக நாடு என்ற நிலையிலிருந்து நழுவி போலீஸ் ராஜ்யமாக மாறிவிடுவோம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கூறியிருக்கிறார். பிரிட்டிஷ் நாட்டில் அரசி எலிசபெத்தை யாரும் குறைகூறிப் பேசக் கூடாது என்று இச்சட்டம் முதலில் கொண்டுவரப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியில் காலனியாக இருந்த இந்தியாவுக்கும் இது பொருந்தும் வகையில், ‘இந்திய தண்டனையியல் சட்டம் 1860’-ல் 124ஏ பிரிவாக இது 1870-ல் சேர்க்கப்பட்டது. பல தேசத் தலைவர்கள் இச்சட்டப் பிரிவின் கீழ் பல முறை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சட்டப் பிரிவு மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது, அருவருப்பானது என்றே அரசியல் சட்டத்துக்கு முதல் திருத்தத்தைக் கொண்டுவந்து பேசியபோது பிரதமர் ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டார். ஆனால், அவருடைய பதவிக்காலம் முடியும் வரை இப்பிரிவு நீக்கப்படவேயில்லை. 1962-ல் கேதார் நாத் சிங் வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வன்முறைகள் மூலம் அரசுக்குத் தொல்லைகள் ஏற்படுத்தப்படும் நிலையில் மட்டுமே இச்சட்டப் பிரிவு பயன்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டது. உச்ச நீதிமன்றம் நிதானத்துடன் இந்தப் பிரிவின் கீழான வழக்குகளை அணுகினாலும் ஆட்சியாளர்கள் இதைத் தங்களை விமர்சிப்போருக்கு எதிரான ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர். இந்தச் சட்டம் அது பிறந்த பிரிட்டனிலேயே கைவிடப்பட்டுவிட்டது. ஆனால், நாம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். இந்திய அரசும் இதை நீக்குவது ஜனநாயகத்துக்கு நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x