Published : 27 Sep 2019 08:46 AM
Last Updated : 27 Sep 2019 08:46 AM

கடிகார உற்பத்தியும் பெண்களும்

நவீனா

பெண்களின் தற்கால வாழ்க்கை நிலை, சூழல்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் என பெண்சார்ந்த காரியங்களை இன்றைய தலைமுறை இளைஞர்களும் இளம் பெண்களும் பெரும்பாலும் சரிவரப் புரிந்து வைத்திருக்கிறார்கள். கல்லூரியில் சில நாட்களுக்கு முன்பு பேராசிரியை ஒருவர் பணி நிறைவு பெற்றார். அவருக்குத் திருமண வயதை எட்டிய மகனும் மகளும் இருந்தார்கள். பணி நிறைவு விழாவின்போது அவரது பணியைப் பாராட்டிப் பேசிய மற்ற பேராசிரியர்கள் அனைவரும், ‘ஒரு நல்ல ஆசிரியையாக, தாயாக, மனைவியாக, சகோதரியாக இதுநாள் வரையில் விளங்கிவந்த இவர், இனி வரவிருக்கும் காலங்களில் தனது பிள்ளைகளின் குழந்தைகளுக்கு நல்ல பாட்டியாகவும் விளங்குவார்’ என வாழ்த்திக்கொண்டிருந்தார்கள். இறுதியாக உரையாற்றிய அந்தப் பணி நிறைவு பெறும் பேராசிரியை, தனது பிள்ளைகள் தனது பணி ஓய்வுக்குப் பின்னும் தனக்கென ஒரு வாழ்க்கை இருப்பதைத் தனக்கு உணர்த்தியதாகக் கூறினார். ‘ரிட்டயர்மென்ட் வாழ்க்கையை ஒண்ணும் பேரக் குழந்தைகளைப் பராமரிக்கிறதுலதான் அம்மா கழிக்கணும்னு எந்தக் கட்டாயமும் இல்ல. உங்களுக்குப் பிடிச்ச ஊருக்கெல்லாம் போங்க. அப்பாவும் நீங்களும் மிஸ் பண்ணிட்டதா நினைக்கிற விஷயங்களை நிறைவேற்ற முயற்சிசெய்யுங்க. உங்களுக்குப் பிடிச்சவங்ககூட நேரம் செலவழிங்க. ரிட்டயர் ஆயாச்சேன்னு விரக்தியில் இருக்காம, உங்க வாழ்க்கைய உங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழுங்க’ என்று அவருடைய பிள்ளைகள் குறிப்பிட்டதாகக் கூறினார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூகமே பெண்களின் வாழ்வைத் தீர்மானித்துவந்திருக்கிறது. முதலாளித்துவக் கோட்பாடுகளை விளக்கும்போது கார்ல் மார்க்ஸ் ஒரு அழகான உதாரணத்தைக் குறிப்பிடுகிறார். கடிகாரம் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில், தொழிலாளர்கள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இருப்பார்கள். அதில் ஒரு குழு, கடிகாரத்தின் வார்ப்பட்டையைத் தயாரித்தார்கள் என்றால், மற்றொரு குழு கடிகாரத்தின் முட்களைத் தயாரிக்கும். அதாவது, ஒவ்வொரு குழுவும் கடிகாரத்தின் ஏதாவது ஒரு உதிரி பாகத்தை மட்டுமே தயாரித்துக்கொண்டிருக்கும். இவ்வாறு அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருமே கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டாலும்கூட, அங்கு பணிபுரியும் எவருக்கும் ஒரு கடிகாரத்தை முழுமையாகத் தயாரிக்கும் நுட்பம் தெரிந்திருக்காது. இறுதிவரை தொழிலாளிகளாக அவர்கள் இருப்பதையே முதலாளிகள் விரும்பினார்கள். அதற்காகவே தொழில் உத்திகளை அவர்கள் முழுமையாகக் கற்றுக்கொள்ளாதபடி பார்த்துக்கொண்டார்கள் என்று சொல்வார் மார்க்ஸ்.

பெண் எனும் பாலினக் குழுவுக்கும் சமூகம் சில குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது. வாழ்க்கையின் பல பரிமாணங்களில் சிலவற்றை மட்டுமே வாழ்ந்துபார்க்கப் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அத்தகைய எல்லைக்கோடுகளே பேராசிரியையின் பிள்ளைகளுக்கு வந்தது போன்ற புதிய சிந்தனைகளால் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட பரப்பில் மட்டுமே இயங்கிவந்த பெண்களுக்குப் புதிய தளங்களில் பயணிக்கும் வாய்ப்புகளை இது உருவாக்கித் தரவல்லது. பெண்கள் சார்ந்த இத்தகைய நேர்மறைப் போக்குகள் பல நம்பிக்கைகளை அவர்கள் வாழ்க்கை மீது படர விட்டுச் செல்கிறது.

(தொடர்வோம்)

- நவீனா, ஆங்கில உதவிப் பேராசிரியர்.

தொடர்புக்கு: writernaveena@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x