Published : 25 Sep 2019 08:49 AM
Last Updated : 25 Sep 2019 08:49 AM

பரவுகிறது அம்மை: தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?

இந்த ஆண்டு உலக சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பத்து விஷயங்களில் ஒன்றாக, தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் காட்டும் தயக்கம் இருக்கிறது. சமூக வலைதளங்களில் தடுப்பூசிக்கு எதிராகப் பரப்பப்பட்ட வதந்திகளால், அதை நம்பி தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் மறுக்கிறார்கள். இதனால் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியாவிலும் கட்டுக்குள் இருந்த அம்மை நோய் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. தடுப்பூசி மருந்துகள் எல்லா நாடுகளிலும் போதிய கையிருப்பு இருந்தும், இலவசமாக அதைப் போட்டுவிட அரசுகள் தயாராக இருந்தும் இந்நோயை மக்கள் தங்கள் அறியாமை காரணமாக வரவழைத்துக்கொள்வது மிகவும் துயரமானது.

2019-ன் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 182 நாடுகளிலிருந்து 3,65,000 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இதே காலத்தில் அம்மைக்கு ஆட்பட்டோரின் எண்ணிக்கை 900% அதிகம். ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசு, மடகாஸ்கர், நைஜீரியாவில் இந்த எண்ணிக்கை அதிகம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இதே காலத்தில் 90,000 பேருக்கு அம்மை போட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்தமுள்ள 53 நாடுகளில் 49 நாடுகளைச் சேர்ந்த 1,74,000 பேருக்கு அம்மை போட்டிருக்கிறது. ‘அம்மை இல்லாத நாடுகள்’ என்ற பட்டியலிலிருந்து பிரிட்டன், கிரீஸ், செக் குடியரசு, அல்பேனியா விலக நேர்ந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 18 வயது முதல் 34 வயது வரையுள்ளவர்கள் மத்தியில் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, மணல்வாரி அம்மைகளுக்குத் தடுப்பூசி போடுவதால் எந்த நன்மையும் இல்லை என்ற கருத்து எப்படியோ பரவியுள்ளது. இந்தத் தடுப்பூசிகள் நோயைத் தடுக்கும் என்பதை இந்த வயதுக்காரர்கள் நம்ப மறுக்கின்றனர். தடுப்பூசி போடுவதால் அம்மை வராது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளைச் சேர்ந்தவர்களில் 52% பேர் மட்டுமே உறுதியாக நம்புகின்றனர். 38% பேர் ‘தடுப்பூசிகள்தான் அம்மையைப் பரப்புகின்றன’ என்றும் நம்புகின்றனர். இந்தியாவிலும் இதே போன்ற கருத்துள்ளவர்கள் உள்ளனர். இந்தியாவின் 121 மாவட்டங்களில் 45% குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போட முடியவில்லை. பெற்றோரே தவிர்த்திருக்கின்றனர். 24% பேர் ஊசி போட்டால் விளைவு மோசமாக இருக்கும் என்று அஞ்சுவதாகத் தெரிவித்தனர்.

தடுப்பூசிகள் பற்றி இவ்வளவு பேருக்கு அவநம்பிக்கையும் அச்சமும் ஏற்பட்டுள்ளது வியப்பானது. அம்மைக்காகப் போடப்படும் தடுப்பூசிகள் அந்நோயோடு வேறு சில தொற்று நோய்களையும் தடுக்கின்றன. தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் அம்மை நோயை வரவழைத்துக் கொண்டால், அந்த நோய்க் கிருமிகள் நோய் எதிர்ப்பு செல்களைக் கொன்று, தொற்றக்கூடிய இதர நோய்களுக்கு உடலை இரையாக்கிவிடுகின்றன. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வாதங்களை ஏற்று அறியாமையில் மூழ்கும் போக்கு நல்லதல்ல. இப்படியான வதந்திகளைத் தடுப்பதிலும் மக்களை அறிவுமயப்படுத்துவதிலும் அரசு அக்கறை காட்ட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x