Published : 23 Sep 2019 08:18 AM
Last Updated : 23 Sep 2019 08:18 AM

இ-சிகரெட் தடை: உறுதி அவசியம்

புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து மீட்க உதவுகிறது என்று விளம்பரம்செய்து அறிமுகப்படுத்தப்பட்ட ‘இ-சிகரெட்’, அதற்கு மாறாக உயிராபத்தை ஏற்படுத்திவருவதால், இந்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து தடைவிதித்துள்ளது. இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களில் கணிசமானவர்கள் புகை பிடிக்கும் பழக்கமுள்ளவர்களே. 2016 முதல் 2019 வரையில் இந்தியாவுக்குள் ரூ.1.35 கோடி மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் இறக்குமதியான தரவு அரசுக்குக் கிடைத்திருக்கிறது. உயிராபத்தை ஏற்படுத்தும் இந்த சிகரெட், இந்தியாவில் பரவிவருகிறது என்று தெரிந்தவுடன் அரசு தடை நடவடிக்கையை எடுத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

பீடி, சிகரெட் போன்றவற்றை நீண்டகாலம் பயன்படுத்தி, அதற்கு அடிமையானவர்கள் புகைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான மாற்று வழிகளில் ஒன்று என்று இ-சிகரெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிக ஆபத்தில்லாதவை என்று முதலில் கூறப்பட்ட இந்த வகை சிகரெட்டுகள், அசல் சிகரெட்டுக்கு நிகரான தீங்குகளை உடலுக்கு விளைவிப்பவை என்பது பிறகு நடந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உலகிலேயே அமெரிக்காவில்தான் இ-சிகரெட் பிடிப்பவர்கள் அதிகம். அங்கு பலரும் இதற்கு அடிமையாகி, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில்கூட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நியூயார்க் இந்த வகை சிகரெட்டுகளுக்குத் தடைவிதித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புகைபிடிப்பவர்கள் சிறிது காலம் இ-சிகரெட்டைப் பிடித்துவிட்டு, பிறகு அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இ-சிகரெட் தயாரிப்பாளர்கள் இதிலும் நிகோடினைச் சேர்த்து, நறுமணங்களையூட்டி அசல் சிகரெட்டைப் போலவே இதையும் மாற்றி, தங்களுடைய விற்பனை உத்தியைக் கடைப்பிடித்தனர். விளைவாக, புகைபிடிப்பவர்களின் சிகரெட் ரகம்தான் மாறியதே தவிர, பழக்கம் போகவில்லை. ‘இ-சிகரெட்டுகள் மற்ற சிகரெட்டுகளைப் போலத் தீங்கானவை அல்ல’ என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இ-சிகரெட்டில் உள்ள நிகோடின் அளவும் தீங்குதரக்கூடிய விதத்திலேயே இருக்கிறது என்பது மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இ-சிகரெட் பிடிப்பவர்களுக்கும் சுவாசக் கோளாறுகள், இதயக் கோளாறுகள், மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய், நரம்புக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளன.

இ-சிகரெட் தடை அவசரச் சட்டம் 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிவிட்டது. இனி, இவ்வகை சிகரெட்டை இந்தியாவில் தயாரிப்பது, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்வது, இங்கிருந்து ஏற்றுமதி செய்வது, விற்பது, விநியோகிப்பது, இருப்பில் வைத்திருப்பது, விளம்பரப்படுத்துவது என்பது சட்ட விரோதக் குற்றம்; இக்குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை அல்லது ரொக்க அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இ-சிகரெட் தொடர்பாகக் குற்றமிழைப்பவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே காவல் துறை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கலாம். மிக முக்கியமான இந்த இ-சிகரெட் தடை நடவடிக்கையைப் பொறுத்தவரை தடுமாற்றத்துடன் அரசு செயல்படக் கூடாது; முற்றாக ஒழிப்பதற்கான ஆயத்தங்களில் இறங்க வேண்டும். காவல் துறை இதில் முழு அக்கறை காட்ட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x