Published : 23 Sep 2019 08:15 AM
Last Updated : 23 Sep 2019 08:15 AM

லண்டனால் எப்படிப் பணக்காரர்களின் நகரமாகவே தொடர முடிகிறது? 

பரன் பாலகிருஷ்ணன்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா, கூடாதா என்ற சர்ச்சை இன்னமும் நடந்துவரும் வேளையிலும் பாதிக்கப்படாத உலக நகரமாகத் தொடர்கிறது லண்டன். அதன் பெருநகரப் பகுதியில் உலகின் பெரும் பணக்காரர்கள் விரும்பிக் குடியிருக்கிறார்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முதல் பெருநகரமான லண்டனில் இப்போது உலகின் பெரும் பணக்காரர்களில் 95 பேர் வாழ்கின்றனர். சிலிக்கான் வேலியால் பெரும் பணம் ஈட்டும் சான் பிரான்சிஸ்கோவில் 73 பேரும், நியூயார்க்கில் 71 பேரும் உலகின் பெரும் பணக்காரர்கள். சான்பிரான்சிஸ்கோ கோடீஸ்வரர்களின் மொத்த செல்வ மதிப்பு 40,300 கோடி பவுண்டுகள், லண்டனில் வசிக்கும் 95 பேரின் மொத்த சொத்து மதிப்பு 37,900 கோடி பவுண்டுகள்.

லண்டனில் வசிக்கும் பெரும் பணக்காரர்களில் பெரும்பாலானவர்கள் இதே நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல. உலகின் வெவ்வேறு நாடுகளில் பிறந்து லண்டனுக்கு வந்தவர்கள். முதல் இரு இடங்களில் இருப்பவர்கள் மும்பையுடன் தொடர்புள்ளவர்கள். இந்துஜா சகோதரர்கள் நாலு பேரின் மொத்த சொத்து மதிப்பு 2,200 கோடி பவுண்டுகள். அச்சொத்துகள் இந்தியா, பிரிட்டன் மற்றும் வேறு சில நாடுகளில் பரவியுள்ளன. 20 ஆண்டுகளாக இவர்கள் பெரும் பணக்காரர்களாக நீடிக்கிறார்கள்.

நவீனப் பணக்காரர்களின் உத்தி

உலகின் பெரும் பணக்காரர்கள் விரும்பி வசிக்கும் நகரமாக லண்டன் திகழ்கிறது. 2019-ன் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘சண்டே டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டது. முன்பெல்லாம் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் என்றால் சுரங்க அதிபர்கள், உருக்கு, நிலக்கரி, ஜவுளி ஆலை அதிபர்கள், ரயில் துறையின் கொட்டாப்புளிகள், எண்ணெய்க் கிணறுகளுக்குச் சொந்தக்காரர்கள் என்றாகவே இருந்தது. மேலும், பலர் தங்களுக்கே தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட விவசாய நிலங்களை வளைத்துப்போட்டவர்களாக இருந்தனர். இப்போதைய கோடீஸ்வரர்கள் புதிய தொழில்கள் மூலம் உச்சம் தொட்டவர்கள். கேள்விப்பட்டிராத புதுப் புதுத் தொழில்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களும் கோலோச்சுகிறார்கள்.

பிரிட்டனைச் சேர்ந்த டேனியல் ராபர்ட் மிடில்டன் (28) உலகளவில் புகழ்பெற்றுவிட்ட ‘யூட்யூப்’ ஆளுமை, வீடியோ கேம் தயாரிப்பாளர், கதாசிரியர். அவருடைய வீடியோக்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதால் ரசிகர்களும் விளம்பரதாரர்களும் ஆதரிக்கப் போட்டிபோட்டு வரிசையில் நிற்கின்றனர். மாதந்தோறும் ‘யூட்யூப்’ மூலமே 8 லட்சம் பவுண்டுகள் சம்பாதிக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன் டெஸ்கோ மளிகைக்கடை அலமாரிகளில் பொருட்களை அடுக்கும் பணியாளராக இருந்தவர் இன்று குபேர சம்பத்துடன் பயணிக்கிறார்.

தென் கொரியாவைச் சேர்ந்த கெல்லி சோய், கணவர் ஜெரோம் கஸ்டைங் இணையர் லண்டனில் ‘சுஷி பார்’ என்ற சிற்றுண்டியகத்தைத் திறந்துள்ளனர். அதன் கிளைகள் ஐரோப்பிய நாடுகளில் 700 ஆக விரிவடைந்துள்ளன. சோய் இப்போது ‘சுஷி அரசி’ என்றே அழைக்கப்படுகிறார். இந்த இணையரின் சொத்து மதிப்பு 30.70 கோடி பவுண்டுகள். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 9 கோடி பவுண்டுகள் அதிகமாகியிருக்கிறது. சமையலறையிலேயே அடைந்துகிடக்க விரும்பாத இல்லத்தரசிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் சோய்களின் காட்டில் மழை.

கலைகள் கொட்டிய பணமழை

சாப்பாட்டுக் கடைகள்தான் கோடியைக் கொண்டுவரும் என்பதில்லை, அறிவைச் செலவழித்து கற்பனைக் கதைகளை எழுதினாலும் கோடீஸ்வரர் ஆகலாம் என்று நிரூபித்துவருகிறார் ஜோன் ரௌலிங். ‘ஹாரி பாட்டர்’ திரைப்படங்கள் மூலம் கிடைத்த ராயல்டிகளின் மதிப்பே 75 கோடி பவுண்டுகள். ரௌலிங்கையும் மிஞ்சிவிட்டார் சர் ஆண்ட்ரூ லாயிட்-வெப்பர். அவருடைய இசை ஆல்ப விற்பனை மூலம் 82 கோடி பவுண்டுகள் பெற்று கோடீஸ்வரராகிவிட்டார். ஹாரி பாட்டராக நடித்த டேனியல் ராட்கிளிஃப் 9 கோடி பவுண்டுகள் சம்பாதித்திருக்கிறார். விடலைப் பையனாக இருந்தபோதே இவ்வளவு சம்பாதித்திருப்பது பாராட்டத்தக்கது.
பிரிட்டிஷ் கலைக்கூடத்தின் ‘கெட்ட பையன்’ என்று வர்ணிக்கப்படும் டேமியன் ஹிர்ஸ்ட் சேர்த்துள்ள சொத்து மதிப்பு 31.5 கோடி பவுண்டுகள்! கலை, மதம், அறிவியல், பிறப்பு, இறப்பு ஆகியவற்றுக்குள்ள தொடர்பை விளக்கும் வகையில் இவர் படைக்கிறாராம். பலவற்றைப் ‘பார்த்தாலே பயங்கரம்’ ரகமாக இருக்கிறது.

புத்தக உலகின் புதிய, பெரிய கோடீஸ்வரர்கள் சர் மைக்கேல் மோரிட்ஸ், அவருடைய மனைவி ஹரீட் ஹெய்மேன். மோரிட்ஸ் ஒரு முதலீட்டு நிறுவனத்தையும் நடத்துகிறார். இணையதளப் பெரு நிறுவனங்களான லிங்க்டுஇன், யாஹூ, பேபால், சீனத்தின் அலிபாபா ஆகியவற்றுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும் என்று ஊகித்து அவற்றை ஆதரித்தவர். 300 கோடி பவுண்டுகளுக்கு உரிமையாளரான மோரிட்ஸ், அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார்.

லண்டன்வாசியான மும்பைவாலா

மும்பையில் பிறந்த பாக்தாத் யூத சகோதரர்களான சைமன் ரூபன், டேவிட் ரூபன் 1950-களில் பிரிட்டனில் குடியேறியவர்கள். உலோகத் தொழிலில் பெரும் கோடீஸ்வரர்கள். 1990-களில் ரஷ்யாவுடனான வியாபாரத்தில் பணக்காரர்களானார்கள். சரியான நேரத்தில் ரஷ்யாவில் வைத்திருந்தவற்றை விற்று, லண்டனில் மனை வணிகச் சந்தையில் முதலீடு செய்தார்கள். ‘மில்பேங்க் டவர்’ உட்பட பல சொத்துகள் அவருடையவை. லண்டனில் புதிதாக 42 அடுக்குக் கட்டிடம் கட்ட அரசிடம் அனுமதி வாங்கிவிட்டார்கள். அதற்கு ‘வெள்ளரிப்பிஞ்சு’ (குகும்பர்) என்று பெயர். கடந்த மாதம் செயின்ட் ஜேம்ஸ் பகுதியில் 9 கோடி பவுண்ட் கொடுத்து ‘100 பால் மால்’ என்ற வணிக வளாகத்தை வாங்கினர்.

ரூபன் சகோதரர்களின் சொத்து மதிப்பு 1,866 கோடி பவுண்டுகள். 1988-ல் உயர் தொழில்நுட்பத் தொழிலில் முதலீடு செய்த அவர்கள், ஐரோப்பிய நாடுகளில் தரவு மையங்களைத் தொடங்கி, நிறுவனங்களுக்குத் தேவைப்படும் அடிப்படைத் தொழில்நுட்பங்களை வழங்கினர்.

தொட்டதெல்லாம் பொன்

டெனிஸ் கோட்ஸ் தங்களுடைய குடும்பத்தின் சூதாட்டக் கடையைப் பெரிய விளையாட்டுக் கேந்திரமாக மாற்றிவிட்டார். அவருடைய சொத்து மதிப்பு 680 கோடி பவுண்டுகள். லண்டனில் வசிக்கும் ரஷ்யரான ஆந்த்ரே அந்த்ரீவ், இளைஞர்கள் – யுவதிகள் சந்திப்புக்கான தனி செயலியை உருவாக்க, அதில் மட்டும் 150 கோடி பவுண்டுகளைச் சம்பாதித்துவிட்டார். ‘வேக்குவம் கிளீனர்’ மூலம் மட்டுமே சர் ஜேம்ஸ் டைசன் 1,260 கோடி பவுண்டுகளுக்குச் சொந்தக்காரராகிவிட்டார்.

உருக்குத் தொழிலில் ‘தொட்டதெல்லாம் பொன்’ என்ற பாராட்டுக்கு உரியவர் லட்சுமி மிட்டல். அவருடைய ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் இப்போது பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தாலும், உருக்கு விலையில் ஏற்பட்ட சரிவு அவருடைய சொத்து மதிப்பையும் சிறிது சரித்துவிட்டது.

கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 110 லட்சம் பவுண்டுகள் அவருக்கு இழப்பு ஏற்பட்டது. அப்படியும் அவர் லண்டனின் பெரும் பணக்காரர்களில் 11-வது இடத்தில் இருக்கிறார்.

12-வது இடத்தில் இருப்பவர் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அனில் அகர்வால். அவருடைய சொத்து மதிப்பு 1,057 கோடி பவுண்டுகள். ஸ்வராஜ் பால் சொத்து மதிப்பு இப்போது 200 கோடி பவுண்டுகள்.

பன்மைத்துவக் கலாச்சாரத்தின் பலம்

பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘தி சண்டே டைம்ஸ்’ நிறுவனம் தொடர்ந்து வெளியிடுகிறது. அதில் 1,000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டும் 70 பேர். இவர்களில் பலர் மிகச் சாதாரண இடத்திலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்.

எப்படி லண்டன் உலகின் பெரும் பணக்காரர்கள் ஒன்றுசேர்ந்து வாழும் இடமாகத் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு இருக்கிறது? ஆங்கில மொழி, மிதமான வரிவிதிப்பு, வர்த்தகத்தில் எந்தப் பிரச்சினை என்றாலும் ஓடோடி வந்து உதவத் தயாராக இருக்கும் பட்டயக் கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், இதர தொழில்நுட்ப ஆலோசகர்கள், தொழிலுக்கு ஏற்ற சூழல் என்று காரணங்களை அடுக்கலாம். முக்கியமானது, அதன் பன்மைத்துவக் கலாச்சாரம். அதனால்தான், ரஷ்யக் கோடீஸ்வரர்களான ரோமன் அப்ரமோவிச், அலிஷேர் உஸ்மனோவ் இன்று பிரிட்டனைத் தங்கள் நாடாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர்; லண்டனைத் தங்களுடைய சொந்த ஊராக மாற்றிக்கொண்டுவிட்டனர்!

© பிஸினஸ் லைன்,

தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x