Published : 19 Sep 2019 08:25 AM
Last Updated : 19 Sep 2019 08:25 AM

பாரம்பரிய வேளாண்மை என்றாலே விஞ்ஞானிகள் ஏன் முகம் சுளிக்கிறார்கள்? 

ஜூரி

ஜூரிஎந்தச் செலவும் இல்லாமல் விவசாயம் செய்வது சாத்தியம்தான் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகும் வரை அதை ஊக்குவிப்பதை அரசு நிறுத்த வேண்டும் என்று ‘வேளாண் அறிவியல் தேசிய அகாடமி’ (என்ஏஏஎஸ்) விஞ்ஞானிகள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருப்பது பாரம்பரிய வேளாண் முறையில் இந்திய அரசு காட்டும் ஆர்வத்தைத் துடைத்தெறிந்துவிடும்போலத் தெரிகிறது.

மேற்கண்ட கடிதத்தில் அந்த அகாடமியின் தலைவர் பஞ்சாப் சிங் சொல்கிறார்: “எந்தச் செலவும் செய்யாமல் விவசாயம் சாத்தியம் என்ற பிரச்சாரம் விவசாயிகளிடத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும், உற்பத்தியில் அது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் இக்கடிதத்தை எழுதியிருக்கிறோம். 100% ரசாயனத்தையே நம்பி வெள்ளாமை செய்யக் கூடாது என்றே நாங்களும் விரும்புகிறோம். ஆனால், இந்த முறையை வலியுறுத்தும் மத்திய வேளாண் அமைச்சகமும் சரி, நிதி ஆயோக் அமைப்பும் சரி - இது சரிதானா என்று எங்களிடம் கருத்து ஏதும் கேட்கவில்லை. வேளாண்மையைப் பொறுத்தவரை உச்சபட்ச ஆய்வு அமைப்பு நாங்கள்தான்.

இயற்கை விவசாயத்தின் தன்மை, பலன் குறித்து ஆராயவும் விவாதிக்கவும் 75 முதல் 80 விஞ்ஞானிகள் கலந்துகொண்ட கூட்டத்தைக் கடந்த மாதம் கூட்டினோம். நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை இதே பாரம்பரிய விவசாயம்தான் இந்தியாவில் நடந்தது. பிறகு, மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் வணிக நோக்கங்களுக்காக உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு நவீனத் தொழில்நுட்பம், சாகுபடி முறை, வீரிய விதைகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன.

இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவை அடைந்தது. திடீரென ஒரே ஆண்டில் அவை அனைத்தையும் தூர வீசிவிட்டு பழைய முறைக்குத் திரும்பிவிட முடியாது. ஒரு கறுப்புப் பசு இருந்தால் 30 ஏக்கருக்கு எரு தயாரித்துவிடலாம் என்கின்றனர். அப்படிச் சாத்தியமே இல்லை. மேலும், ஓராண்டு மட்டும் சாகுபடியைச் செய்துவிட்டு, இனி வருங்காலத்துக்கும் இதையே செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது உணவு தானிய உற்பத்தியில் ஆபத்தையே ஏற்படுத்தும்.”

பாரம்பரிய விவசாய முறை தொடர்பில் இத்தனை ஆண்டுகளாகப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத வேளாண் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இப்போது அதுகுறித்து ஆய்வறிக்கை தாக்கல்செய்யும் முனைப்பில் இருக்கின்றன. வேளாண் ஆய்வுக்கான இந்திய ஆணையத்தின் ஆய்வறிக்கையும்கூட விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
பாரம்பரிய வேளாண்மை என்றால், ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் முழுமையாகச் சார்ந்திருக்கும் இப்போதைய முறையை அப்படியே கைவிட்டு பழைய முறைக்கு உடனே மாற வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

விளைச்சலும் அதிகரிக்க வேண்டும், பயிர்களும் செழிக்க வேண்டும். அதேசமயம், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளால் மனிதர்களுக்கும் கால் நடைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படக்கூடிய அபாயங்களையும் குறைக்க வேண்டும். அப்படியென்றால், இதற்கேற்ப புதிய கண்டுபிடிப்புகளில், அதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதுதான் வேளாண் விஞ்ஞானிகளின் கடமையாக இருக்க வேண்டும்.

ஆனால், பாரம்பரிய முறை என்றாலே ஏன் நம்முடைய வேளாண் விஞ்ஞானிகள் ஒவ்வாமையோடு அணுகுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. வேளாண்மை முழுவதும் நவீனமயமாக்கப்பட்டுவிட்ட ஐரோப்பிய நாடுகளில் இந்தியா அளவுக்கு ரசாயனப் பயன்பாடு இல்லை; இது எப்படி என்று யோசிக்க வேண்டாமா என்று கேட்கிறார்கள் விவசாயிகள். நியாயம்தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x