Published : 19 Sep 2019 07:56 AM
Last Updated : 19 Sep 2019 07:56 AM

காவிரி உபரிநீர்: யாருக்கு என்ன பயன்?

பி.எஸ்.கவின்

மேட்டூர் அணையிலிருந்து கடந்த பத்து நாட்களாக வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நாளொன்றுக்கான பாசன நீர்த் தேவை 2.2 டிஎம்சி. ஆனால், கடந்த பத்து நாட்களில் 19 டிஎம்சி நீர் கூடுதலாகவே திறந்துவிடப்பட்டுள்ளது. உபரி நீர் பெருக்கெடுத்து ஓடினாலும் அது கொள்ளிடம் வழியே ஓடி கடலில்தான் கலக்கிறதேயொழிய காவிரியின் கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் சென்றுசேரவில்லை. மழை பொய்த்தும் ஆற்றில் நீர்வரத்து குறைந்தும் விவசாயம் பொய்ப்பது காவிரிப் படுகை விவசாயிகளுக்கு பழகிப்போன அனுபவம்தான். ஆனால், இந்த முறை ஆற்றில் நீர் கரைபுரண்டும், விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலை. என்ன காரணம்?

ஜனவரி 28-ல் மேட்டூர் அணையை மூடி, ஜூன் 12-ல் மீண்டும் திறப்பதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் காவிரிப் படுகையில் வாய்க்கால்களையும் நீர்நிலைகளையும் தூர்வாருவது வழக்கம். இந்த முறை, ஜூலை மாதத்தில்தான் குடிமராமத்துப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு கால்வாசிப் பணிகள் நடந்தன என்றால், இந்த ஆண்டு பாதி வேலைகள் நடந்திருக்கின்றன. பரவாயில்லைதான், ஆனால், அதனால் ஒரு பயனும் இல்லை என்பதுதான் உண்மைநிலை.

கடந்த ஆண்டு குடிமராமத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் காரணமாக ஆளுங்கட்சியின் மீது விவசாயிகளிடம் கடும் அதிருப்தி எழுந்தது. அதிருப்தியைக் குறைக்கும் முயற்சியாக இந்த ஆண்டு ஒப்பந்ததாரர்களுக்குப் பதிலாக விவசாயிகளிடமே பணிகளை ஒப்படைப்பதாக அறிவித்தது அரசு.

அதற்காக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பாசனதாரர்கள் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. பாசனதாரர்கள் 10 சதவீதம் செலவை ஏற்றுக்கொள்ள அரசு 90 சதவீதம் செலவை ஏற்கும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பாசனதாரர்கள் சங்கங்கள் என்ற பெயரில் குடிமராமத்துப் பணிகளை ஏற்றிருப்பதும் வழக்கம்போல ஆளுங்கட்சிக்காரர்கள்தான்.

மண் கொள்ளை

மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த விரும்பாத அரசு, மண் கொள்ளையைக் கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டியது. அதன் விளைவாக, கிராமங்களில் வீடு கட்டுபவர்கள் மனையை உயர்த்துவதற்காகச் சொந்த நிலத்திலிருந்து மண் வெட்டுவதற்கும்கூட வருவாய்த் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமானது.இந்நிலையில், பாசனதாரர் சங்கங்கள் குளம், குட்டைகளைத் தூர்வாரும் பணியைச் செய்யலாம் என்று அறிவித்தது மீண்டும் ஒரு மண் கொள்ளைக்கே இட்டுச்செல்கிறது.

நீர்நிலைகளை ஆழப்படுத்தும்போது கிடைக்கிற மண்ணைக் கொண்டு கரையை உயர்த்தாமல் அதை விற்பனை செய்வதே வேலையாக நடக்கிறது. நீர்நிலைகளிலிருந்து வெட்டப்படும் மண் ஒரு லாரிக்கு இவ்வளவு என்று விலைவைத்து விற்கப்படுகிறது. குடிமராமத்துப் பணிகள் நடக்கும் இடங்களில் வருவாய்த் துறையோ பொதுப் பணித் துறையோ இவற்றைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை.

குளம், குட்டைகளைத் தூர்வாரும் பணிகள் காலம் தாழ்ந்து நடந்துகொண்டிருக்கின்றன என்றால், அந்தக் குளங்களுக்கு நீரைக் கொண்டுவந்து சேர்க்கும் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவே இல்லை. ஆற்றிலிருந்து கிளை பிரியும் வாய்க்கால்கள்தான் காவிரிப் படுகையின் நரம்பு மண்டலமாக இயங்கிவருகின்றன. கல்லணையிலிருந்து கிளை பிரியும் காவிரி, வெண்ணாறு, கல்லணை வாய்க்கால் ஒவ்வொன்றும் சிறு சிறு வாய்க்கால்களாகப் பிரிந்து காவிரிப் படுகையைச் சூழ்ந்துள்ளன. இந்த நீர்வழித் தடங்கள் முறையாகத் தூர்வாரப்படவில்லை.

எங்கெங்கும் பாலங்கள்

உபரி நீரைப் பாசன வாய்க்கால்களில் திருப்பி விடாததற்கு முக்கியக் காரணம், இந்த வாய்க்கால்கள் அனைத்தும் நீர் செல்லும் நிலையில் இல்லை என்பதே. காவிரிப் படுகையின் எந்தச் சாலையில் சென்றாலும் பாலம் அமைக்கும் வேலைகளைத்தான் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டுகளில் தரைப்பாலம் கட்டுகிறோம் என்று வாய்க்கால்களைத் தடுத்தார்கள். இந்த ஆண்டு தரைப்பாலங்களுக்குப் பதிலாக மேம்பாலங்களைக் கட்டுகிறோம் என்று நீர்ப்பாதையைத் தடுத்துவைத்திருக்கிறார்கள்.

திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம், வேதாரண்யத்திலிருந்து நாகை செல்லும் சாலைகளில் நிறைய பாலங்கள் நீண்ட காலமாக பாதி வேலை முடிந்த நிலையிலேயே கிடக்கின்றன. விவசாய நிலங்களுக்குப் பயன்படும் பாசன வாய்க்கால்களின் மீது கோடை காலத்திலேயே பாலங்களைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்குத் துளியும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

காவிரியின் கடைமடையிலிருந்து இப்படி கூக்குரல்கள் கேட்டுக்கொண்டிருக்க மேட்டூர் அணைக்கட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து எழுகின்ற குரல்கள் வேறுவிதம். முதல்வர் எடப்பாடி கிழக்குக் கால்வாய் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகளைத் தூர்வாரி, குழாய்கள் மூலமாக நீரைக் கொண்டுசென்று அந்த ஏரிகளை நிரப்பும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏரிகளைப் புனரமைக்கும் முதல்வர், காவிரிக்கு மேற்கே ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அந்தியூர் பகுதிகளை முற்றிலும் கைவிட்டுவிட்டார் என்கிறார்கள் அங்கிருக்கும் விவசாயிகள்.

அந்தியூர் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மேற்குக் கால்வாயைக் காட்டிலும் ஏரிகளைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். காவிரியிலிருந்து 8 கிமீ தொலைவில் 42 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் செல்லாயூர் பெரிய ஏரி தூர்வாரப்படாமல்தான் கிடக்கிறது. 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரடுப்பட்டியூர் ஏரியும் கைவிட்டப்பட்ட நிலையில்தான் இருக்கிறது.

அதுபோலவே பழையூர் ஏரி, புதூர் ஏரி, ஆணைக் கவுண்டனூர் ஏரி, முளியனூர் ஏரி என்று விவசாயத்துக்கு ஆதாரங்களாக இருக்கும் பெரும்பாலான ஏரிகளை தமிழக முதல்வர் கண்டுகொள்ளவே இல்லை. ஆற்றுக்குக் கிழக்கில் மட்டும்தான் அவரது பார்வை இருக்கிறது, மேற்குப் பக்கமாக அவர் திரும்பவே இல்லை என்கிறார்கள் அந்தியூர் வட்டார விவசாயிகள்.

சொந்த ஊர் பக்கமே முதல்வரின் பார்வை இப்படி இருக்கிறது என்றால், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பற்றி விவரிக்கவா வேண்டும்? அடிப்படையிலேயே நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலம் இது. நல்ல மழை பொழிவது மக்களுக்கு மட்டும் அல்ல, அரசுக்கும் சேர்த்தே வெகுமதி. அந்த மழையைக் கூடப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் நாடு இருந்தால் அதைக் காட்டிலும் கொடுமை இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x