Published : 19 Sep 2019 07:50 AM
Last Updated : 19 Sep 2019 07:50 AM

மக்களுக்குத் தகவல்: வழிகாட்டுகிறது ராஜஸ்தான் 

ராஜஸ்தான் மாநில அரசு ‘பொதுமக்கள் தகவல் இணையதளம்’ என்ற புதிய சேவையைத் தொடங்கியிருக்கிறது. மாநில அரசின் 13 துறைகளைப் பற்றிய தகவல்களும் மக்களுக்குத் தேவைப்படும் விவரங்களும் அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வேலை உறுதித் திட்டம், சுகாதாரம், பொது விநியோக முறை உட்பட 13 துறைகளில் அரசு அமல்படுத்திவரும் திட்டங்கள், அவற்றால் பயன்பெறும் பயனாளிகள், பொறுப்பில் உள்ள அதிகாரிகள், குறிப்பிட்ட பணி எந்த நிலையில் இருக்கிறது என்ற தகவல்களை அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

மாவட்டங்கள், வட்டங்கள், வட்டாரங்கள் என்று அனைத்து நிலைகளிலும் பெறும் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுவதால் தேவைக்கேற்ப நாம் அதில் தெரிவுசெய்து பார்க்கலாம். திட்டங்கள் எப்படி அமலாகின்றன என்று ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மட்டுமல்ல, மக்களும் கண்காணிக்க இந்த ஏற்பாடு நிச்சயம் உதவும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4(2) பிரிவு முக்கியமான ஒரு கடமையை அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறது. தத்தமது துறைகளில் நடைபெறும் பணிகளை மக்கள் கடிதம் எழுதித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று காத்திராமல் அரசே வெளியிட்டுவிட வேண்டும் என்று அது கூறுகிறது. ஆனால், இதுவரை எந்த அரசும் இந்தப் பிரிவை முழுமையாக அமல்படுத்தவில்லை. ஏராளமான துறைகள் கணினிமயமான நிர்வாகத்தைக் கடைப்பிடிக்கின்றன. கேள்விகளும் விண்ணப்பங்களும் இந்த வழியாகவே அரசு அலுவலகங்களுக்கு வரத் தொடங்கிவிட்டன.

பல்வேறு அரசுத் துறைகளும் நிறுவனங்களும் தங்களுடைய அமைப்பைப் பற்றியும் தாங்கள் நிறைவேற்றிவரும் திட்டங்கள் குறித்தும் அவ்வப்போது பதிவேற்றம் செய்கின்றன. ஆனால், சில துறைகள் மக்கள் எதிர்பார்க்கும் தகவல்களைத் தருவதற்குப் பதிலாக அவர்கள் களைப்படைந்துபோகும் வகையில், பயனற்ற தகவல்களையும் பழைய தகவல்களையும் பதிவிடுகின்றன அல்லது அவ்வப்போது அவற்றைப் புதுப்பிப்பதில்லை.

இந்த இணையதளங்கள் மக்களுக்கு முறையாகப் பயன்தர வேண்டும் என்றால், மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் இவற்றை அடிக்கடி பயன்படுத்தி, அதில் உள்ள தகவல்களைச் சரிபார்க்க வேண்டும். வெளிப்படையான நிர்வாகம், நேர்மையான நிர்வாகம் நடத்த விரும்புவோருக்கு இவையெல்லாம் நல்ல ஆயுதங்கள்.

மக்களுக்குத் தேவைப்படும் தகவல்களைத் தருவதல்லாமல், மக்களிடம் தாங்கள் எதிர்பார்க்கும் கடமைகளையும் இவற்றின் வாயிலாக உணர்த்த அரசுகளுக்கு இது இருவழித் தகவல் பரிமாற்றக் களமாகப் பயன்படும். இணையதளங்களின் மூலம் மக்களுடன் தொடர்புகொள்வதை அரசுகள் வழக்கமாக்கிக்கொண்டுவிட்டால், இடைத்தரகர்களின் தயவை நாட வேண்டிய தேவையும் குறையும். மக்களை யாரும் தவறாக வழிநடத்தவும் முடியாது.

இணையதளங்களைத் தொடங்கினால் மட்டும் போதாது, அவற்றைப் புத்துயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும், மக்களுடைய கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க வேண்டும். கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எழுத்தறிவும் டிஜிட்டல் தொடர்பும் அதிகரித்துவருவதால், மக்களுக்கு அரசின் நிர்வாகம்பற்றி அதிகமான புரிதல்கள் ஏற்பட வேண்டும். இது சாத்தியமாவதற்கு ராஜஸ்தான் முன்னுதாரணம் எல்லா மாநிலங்களுக்கும் உதவட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x