Published : 18 Sep 2019 10:27 AM
Last Updated : 18 Sep 2019 10:27 AM

இப்படிக்கு இவர்கள்: ‘இந்து தமிழ் திசை’யின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்

அடுத்த தலைமுறையினரை வாசிப்பின் நேசர்களாக மாற்றிட உறுதியெடுத்துக்கொண்ட உடனேயே நேரத்தின் அருமை, இன்றைய தலைமுறையினர் அதைப் பயன்படுத்தும் முறை பற்றிய ஜென்னி ஓடலின் ‘டிக்-டாக் யுகத்தில் கடிகாரத்தின் வேகத்தைக் குறைக்க முடியுமா?’ என்கிற கட்டுரையை வெளியிட்டு, எடுத்த உறுதிமொழிக்குச் செயல்வடிவம் கொடுத்துவிட்டீர்கள்.

கடந்த ஆறு ஆண்டுகளாக ‘இந்து தமிழ் திசை’ தன் வாசகர்களின் அறிவை வளர்த்திட, கருத்துக்களைப் பகிர்ந்திட எடுத்த எண்ணற்ற முயற்சிகள் சொல்லி மாளாது. அதன் தொடர்ச்சியாக இன்னமும் பல பகுதிகள் வெளிவரும் என்ற அறிவிப்புடன் ‘நம் பத்திரிகை, மாணவர் சமுதாயம் வாசிப்பின் சுகமறிந்து, வாசிப்பை நோக்கி நடை பயில முக்கியத்துவம் கொடுக்கும்’ என்ற செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது. சமுதாய அக்கறையுடன் தங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

- கே.ராமநாதன், மதுரை.

சுய சிந்தனையைத் தூண்டும் தாய்மொழி

செப்டம்பர்-17 அன்று ‘360 டிகிரி’ பகுதியில் வெளியான குறும்பத்தி ‘இந்தி மாநிலத்திலேயே 10 லட்சம் பேர் தோல்வி’ என்ற செய்தி படித்தேன், அதிர்ச்சியளித்தது. தாய்மொழியாக இந்தியைப் படிக்கின்ற மாணவர்களே தோல்வி காணும் நிலையென்றால், தாய்மொழி அல்லாத மற்ற மாணவர்களின் நிலையைக் கேட்க வேண்டுமா? உத்தர பிரதேச மாநில அரசு உடனடி நடவடிக்கையாக இந்தி பண்டிதர்களைக் கொண்டு, அம்மாநில மாணவர்கள் தாய்மொழிக் கல்வியைத் தரமாகப் பயில போதிய முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், தாய்மொழி ஒன்றுதான் சுய சிந்தனையைத் தூண்டும். தாய்மொழியைக் கற்பது அவசியத்துக்காகவும் அடையாளத்தைப் பாதுகாக்கவும் தேவைப்படுகிறது. ஏனைய மொழிகளைக் கற்றுக்கொள்வது திறன்வளர்ப்புக்கும் ஆர்வத்துக்குமானது.

- பா.சக்திவேல், கோயம்புத்தூர்.

பெரியாரின் எண்ணமும் எழுத்தும் ஆங்கிலத்தில் வேண்டும்

பெரியார் பிறந்த நாளில் வெளியான ‘ஆய்வுலகின் பார்வையில் பெரியார்’ கட்டுரை வாசித்தேன். பெரியாரின் எண்ணமும் எழுத்தும் உரையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால், இன்னும் விரிவான தளத்தில் அவர் விவாதிக்கப்படவும் விமர்சிக்கப்படவும்கூடும். அப்போது அவர், ஆகச்சிறந்த சீர்திருத்தவாதியாகவும், பொதுவுடைமைவாதியாகவும், புரட்சியாளராகவும், மடைமைகளைத் தகர்த்தெறிபவராகவும், பெண்ணுரிமைவாதியாகவும் அறியப்படக்கூடும்.

பெண் அடுப்படியிலும் படுக்கையறையிலும் சேவகம் புரிந்துவந்த காலத்திலேயே பெண் கல்வியும் சொத்துரிமையும் அவர்கள் விடுதலைக்கான வழி என்பதை வலியுறுத்தியவர் என்பதை பல்வேறு ஆய்வறிஞர்கள் கட்டுரைகள் வாயிலாக அறியவருகையில் மனம் மகிழ்ச்சிகொள்கிறது. இன்று தமிழகத்தின் பெருமைகளாக அறியப்படும் சமூக பொருளாதார சீர்திருத்தங்கள் பெரியாரின் இடையறாத பிரச்சாரத்தாலும் கைவரப்பட்டது என்பதை மறைக்க முடியாது.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

இளவேனிலின் ’ஆய்வுலகின் பார்வையில் பெரியார்’ கட்டுரை, பெரியாரின் பார்வையை ஆய்வுசெய்தது. பெரியார் என்கிற சமூக விஞ்ஞானியின் பார்வை சகலருக்குமானது. எந்த அறிவியல் பார்வைக்கும் ஏற்புடையது. இந்தத் தலைமுறைக்குப் பெரியாரியப் பரிச்சயம் அவசியம். அரசியல் வட்டத்துக்குள் அடைபடாமல் பொதுவெளியில் பெரியார் சிந்தனை போற்றப்பட வேண்டும்.

- தங்கம் சுப்பிரமணியன். அறந்தாங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x