Published : 17 Sep 2019 07:31 AM
Last Updated : 17 Sep 2019 07:31 AM

டிக்-டாக் யுகத்தில் கடிகாரத்தின் வேகத்தைக் குறைக்க முடியுமா? 

ஜென்னி ஓடெல்

உயர்நிலைப் பள்ளி மாணவியாக இருந்தபோது நான் எழுதிய குறிப்புகளைச் சமீபத்தில் படித்து வியப்படைந்தேன். தூங்குவதற்கு, சிந்திப்பதற்கு, படிப்பதற்கு, எழுதுவதற்கு, தேர்வுக்குத் தயார்செய்வதற்கு, போட்டிகளில் பங்கேற்பதற்கு, பயிற்சி செய்வதற்கு என்று எதற்குமே ‘நேரம் போதவில்லை’ என்று எல்லாவற்றிலும் குறிப்பிட்டிருந்தேன். “காபி கடையில் உட்கார்ந்துகொண்டு வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருக்கிறேன்; தொலைவில் சான்டா குரூஸ் மலைத்தொடர் தெரிகிறது. இதையெல்லாம் அப்படியே போட்டுவிட்டு அங்கே ஓடிவிட மாட்டோமா என்று மனம் துடிக்கிறது” என்று ஒரு குறிப்பில் எழுதியிருக்கிறேன்.

இதைப் படித்தவுடன் ஸ்டான்போர்டில் என்னிடம் பயிலும் கலைப் பிரிவு மாணவர்களின் நினைவுவந்தது. நான் உயர்நிலைப் பள்ளி மாணவியாக இருந்தபோது ஃபேஸ்புக் இல்லை, இன்ஸ்டாகிராம், டிக்-டாக் எதுவுமே இல்லை. அப்போதும்கூட எனக்கு நேரம் போதாதபடிக்குப் பல வேலைகள் இருந்தன. ஆனால், சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தங்கள் அன்று எனக்கு ஏற்பட்டிருக்கவில்லை.

அன்றும் இன்றும்

எனது மாணவப் பருவத்தைவிட இப்போதைய மாணவர்கள் கடுமையான போட்டிகளுடன் படிக்க நேர்கிறது. அவர்களால் ஏன் மெதுவாக எதையும் செய்ய முடியவில்லை என்பது இப்போது புரிகிறது. கல்வியால் தங்களுக்கு ஏற்படும் கடன்சுமை, வேலைக்காக அல்லது மேல்படிப்புக்காகத் தாங்கள் தயாரிக்க வேண்டிய சுயவிவரக் குறிப்புகள், வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து என் மாணவர்கள் கவலைப்படுகிறார்கள். எளிதில் செய்யவே முடியாத வேலைகளுக்கு ஏன் நாம் நேரத்தை வீணடிக்கிறோம், இவ்வளவு செலவழிக்கிறோம் என்று அவர்கள் மனதுக்குள் புழுங்கியிருக்கலாம். நேரம் அரிதானது, நேரம் என்பது பணத்துடன் தொடர்புடையது.

அவர்களது நேரங்களில் பெரும்பாலானவற்றைக் கைக்கெட்டும் தொலைவில் உள்ள கருவியில் (ஸ்மார்ட்போன்) விளம்பரங்கள், மீம்ஸ்கள், தகவல்கள், அனுபவங்கள் என்று நேரத்தை விழுங்கும் விஷயங்கள் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்ட ஈர்ப்பு, குறுக்கீடுகளுக்கு இடையில் அவர்கள் படிக்க வேண்டிய பாடத்தில் அல்லது செய்முறைகளில் கவனச் சிதறல் ஏன் ஏற்படுகிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த இன்னல்கள் அனைத்துமே அவர்களது பொருளாதாரத்துடனும் சம்பந்தப்பட்டது என்பது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

நுகர்வோடு முடிவதில்லை அவர்களது பொருளாதாரம், தங்களையே அவர்கள் வேலைக்கான சந்தையில் விற்பதற்குத் தயாரித்துக்கொள்வதுடனும், எளிதில் விற்கப்படுவதற்கேற்பக் கூடுதல் அம்சங்களை ஏற்றிக்கொள்ளவும் பொருளாதாரம் அவர்களைக் கோருகிறது. மாணவர்கள் தங்களைத் தாங்களே சந்தைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது அவர்களது எல்லா நேரங்களிலும் விரிவடைந்திருக்கிறது. நண்பர்களுக்காக சமூக ஊடகங்களில் பதிவிடுவது போய் எதிர்காலத்தில் தங்களுக்கு வேலை கொடுக்கக்கூடிய நிறுவனத்துக்காகப் பதிவிட வேண்டியுள்ளது. எனவே, இன்றைய மாணவர்களுக்கு உண்மையாகவே பொழுதுபோக்க நேரமே இருப்பதில்லை.

என்னால் மாணவர்களுக்கு அதிக நேரத்தை வழங்க முடியாது. அதேசமயம், அதை எப்படி அவர்கள் மதிக்கிறார்கள், அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்ற கண்ணோட்டத்தை மாற்ற முடியும். என்னிடம் பயிலும் மாணவர்களில் பலருக்குக் ‘கலை’ பிரதான பாடம் இல்லை. அவர்களில் சிலர் கலைப் பயிற்சிக்கு அறிமுகமானவர்களே கிடையாது. ‘உங்களுடைய பாடத்திட்டத்தை முடிக்க எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அதைப் போல இரண்டு மடங்கு நேரத்தை அதற்காக ஒதுக்குங்கள்’ என்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர்களிடம் கூறுகிறேன்.

அப்படிப் பெறும் நேரத்திலேயேகூட அவர்களால் கலைப் பயிற்சியாக எதையுமே செய்துவிட முடியாது. என்ன செய்வதென்ற சிந்தனைக்கே நிறைய நேரம் தேவைப்படும். சிந்திப்பதை எப்படி வடிவமாக்குவது என்பதை அவரவர்தான் முயன்றுபார்க்க வேண்டும். படைப்பூக்கம் என்பது எதிர்பாராதது, அதற்கு நேரம் நிறையப் பிடிக்கும். இதை இன்றைய மாணவர்களால் ஒப்புக்கொள்ள முடியாதபடிக்கு அவர்களது புறச்சூழல் மனதை ஆக்கிரமிக்கும் பல்வேறு ஈர்ப்புகளால் தொடர்ந்து முற்றுகைக்கு ஆட்பட்டிருக்கிறது.

கலைக்கு நேரம் ஒதுக்குங்கள்

பறவைகளை அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. ஆனால், லௌகீக அடிப்படையில் சொல்வதென்றால், அது ‘உருப்படியில்லாத வேலை’! நேரத்தைப் பற்றிய எனது கண்ணோட்டமே வேகம் இழந்துவிட்டது. விவரிக்க முடியாத ஆர்வம், ஒரு ஈர்ப்பு காரணமாகக் குறிப்பிட்ட குவிமையத்தில் என் சிந்தனை குவிந்திருக்கிறது. அந்த எண்ணங்கள் அனைத்துமே நிஜமானவை. இதுதான் கற்றல் அனுபவம், இது எனது மாணவர்களுக்கும் வசப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், இது மிகவும் நுட்பமானது. இதற்கு நேரப் பராமரிப்பு மிகவும் அவசியம்.

இதனாலேயே வகுப்பில் மாணவர்களுக்கு நேரத்தைத் தனியாக ஒதுக்கித் தருகிறேன். அந்த நேரங்களில் அவர்கள் வகுப்பில் உட்கார்ந்துகொண்டு அடுத்தது என்ன என்று சிந்திக்கலாம், அல்லது வகுப்பறையை விட்டு வெளியே காலாற நடந்து செல்லலாம். குறிப்பாக, எதையாவது பார்த்துவாருங்கள் என்றும் சொல்வேன். மனிதர்கள் தங்களிடமுள்ள கருவிகளை எப்படிக் கையாளுகிறார்கள் என்று கவனித்துவருமாறு சொல்லி அனுப்புவேன். மாணவர்களுக்குப் புதிய சிந்தனைகளை ஊட்டினால் மட்டும் போதாது, சிந்தனையைக் கூர்மைப்படுத்த கேள்விகளைத் தயாரிக்கவும் அவர்களுக்கு அவகாசம் தர வேண்டும். அவர்களது எண்ணமும் அவர்கள் செய்யும் வேலையும் அவர்களது பாடத்துக்கோ வாழ்வுக்கோ உடனடியாகப் பயன்தருவதாகக்கூட இல்லாமல் இருக்கலாம்.

இந்த வகை உத்திகளைக் கடைப்பிடித்து மாணவர்களை மேலும் பயனுள்ளவர்களாக மாற்றிவிட முடியும். நான் கற்றுத்தரும் கலையும், கையாளும் கலையும் வெவ்வேறானவை. ‘பயனுள்ளது’ என்று இப்போது மக்களால் கருதும் செயல்கள் அல்லாமல், ‘பயனற்றதாக’ கருதும் வேலைகளையே செய்யச் சொல்கிறேன். கலை என்பது பிரச்சினைகளைத் தீர்க்கவோ உற்பத்திக்கு உதவவோ அல்ல. கேள்விகளுக்கு விடை காண்பதே கலை.
இடைவிடாமல் ‘முக்கியச் செய்தி’ என்று உருட்டி மிரட்டும் செய்தி சேனல்களும், முடிவே இல்லாத சமூக ஊடகப் பின்னூட்டங்களும் மிகவும் அவசரமான ஒன்று என்பதாகவே நம்மை நினைக்க வைக்கின்றன. வரலாற்றைப் பற்றிய எளிமையான புரிதல்களே நேரம் என்பதை வேறு கோணத்தில் பார்க்க நமக்கு உதவும்.

எனது வகுப்பறை

எனது வகுப்பு கலைப் பயிற்சிகளுக்கானது மட்டுமே என்றாலும், நாம் என்ன செய்கிறோம் என்பது தொடர்பான வரலாற்று இயக்கங்களை மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறேன். முதலாவது உலகப் போரைக் கண்டித்தும் அதன் கோர விளைவுகள் குறித்து எச்சரிக்கவும் ஓவியங்கள், கேலிச் சித்திரங்கள், பொம்மைகள், கவிதைகள் ஆகியவற்றை எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தினார்கள். அதை ‘டாடா’ கலை வடிவம் என்றார்கள்.

அதை நான் விவரித்தபோது, பல மாணவர்கள் அதைத் தாங்களும் படித்திருப்பதாகவும் தங்களுக்குப் பிடித்திருப்பதாகவும் கூறியபோது வியப்படைந்தேன். அது ஏற்கெனவே இருந்த கலையை எதிர்க்கும் அல்லது நையாண்டி செய்யும் கலை வடிவம். மோனாலிசாவுக்கு மீசை வரைவது போன்ற குறும்பான செயல்கள் அவை.
வரலாறுகளைப் படிக்கும்போது நானே பல வேளைகளில் அதிர்ச்சிக்கும் கவனச் சிதறலுக்கும் ஆளாகியிருக்கிறேன். கடந்த காலங்களில் நடந்த குரூரங்கள் பல குலைநடுங்க வைப்பவை. தொலைநோக்குச் சிந்தனையாளர்கள் இவ்விதமான பாடங்களைப் படிக்கும்போது எந்தவிதப் பாதிப்புக்கும் ஆட்பட மாட்டார்கள். அதைப் பாடமாக மட்டுமே பார்ப்பார்கள்.

நேரம், அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்த முதலாளித்துவக் கண்ணோட்டம் வேறு. இத்தனை மணி நேரத்தில் இவ்வளவு உற்பத்தியாகியிருக்க வேண்டும் என்பது அவர்களது கண்ணோட்டம். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், சமூகத்தின் இதர பிரிவினர் சேர்ந்து நேரம் பற்றிய இந்தக் கண்ணோட்டத்தைப் பின்னோக்கித் தள்ள வேண்டும். மாணவர்கள் நல்ல சிந்தனையாளர்களாக வர வேண்டும் என்றால், அவர்கள் சிந்திப்பதற்கு நேரத்தை ஒதுக்கித் தர வேண்டும். ‘நேரமே இல்லை’ என்று எழுத 17 வயதிலேயே நேரத்தைத் திருடியிருக்கிறேன். நேரத்தை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது, எனவே, அனைவரும் ஒரு உடன்பாட்டுக்கு வருவோம் - எதையும் மெதுவாகச் செய்வதென்று.

‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x