Published : 17 Sep 2019 07:24 AM
Last Updated : 17 Sep 2019 07:24 AM

இப்படிக்கு இவர்கள்: வாசிப்பின் நேசம் வளர்ப்போம் - மக்களின் வரவேற்பைப் பெறுவது உறுதி

ஏழாம் ஆண்டில் காலடி வைக்கும் ‘இந்து தமிழ் திசை’ இதழுக்கு எனது நல்வாழ்த்துகள். பரந்துபட்ட வாசகர்களின் தேவை மற்றும் விருப்பங்களை நிறைவுசெய்யும் வகையில் செய்திகளை வெளியிட்டும், சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டும் தமிழ்ச் சமூகத்துக்கு நற்பணியாற்றிவருகிறது இந்து தமிழ் திசை.

வாசிப்பு இயக்கத்தை வளர்ப்பதை நெறியாகக் கொள்ள இருப்பது பெரும் பாராட்டுதலுக்குரியது. 1948-ம் ஆண்டு பாடத்திட்டத்தின்படி, ஆறாம் வகுப்பு முதல் ஒவ்வொரு மாணவரும் ஒரு ஆண்டில் குறைந்தது, பாடநூல்கள் அல்லாத ஆறு தமிழ் நூல்களும், ஆறு ஆங்கில நூல்களும் வாசிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது.

பாடநூல்கள் நாட்டுடைமை ஆக்கும் முன் தனியார் பாடநூல் வெளியீட்டாளர்கள் மாணவர்களின் வாசிப்புக்காக நூல்கள் வெளியிட்டனர். ஆங்கிலத்தில் மாணவர்களின் வயது, மொழித் திறனுக்கேற்ப நூல்கள் அமைந்திட, தமிழில் பண்டிதத் தமிழ் கோலோச்சியதால் மாணவர்களுக்கு ஏற்ற வகையில் தமிழ் நூல்கள் பெரும்பாலும் அமையவில்லை. ஒருபக்கம் படமும் அதன் எதிர்ப்புறம் கதையும் உள்ளவாறு வெளியிடப்பட்ட ‘எனிட் ப்ளைடன்’ நூல்கள் மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது வியப்பன்று. நான் கிராமப்புறப் பள்ளி ஒன்றில் பணியாற்றியபோது, பள்ளி நூலகத்துக்கு வாங்க வேண்டிய நூல்கள் பற்றி மாணவர்களிடம் கருத்துக் கோரினேன்.

பயண நூல்கள் முதலிடத்திலும், அறிவியல், அறிவியலாளர் வரலாறு, கதை நூல்கள் எனப் பரிந்துரைத்தனர். பாடநூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட பின் மாணவர்களுக்கான நூல்கள் வெளிவருவது அரிதாகிவிட்டது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தபோது, பாடநூல்கள் தவிர, மாணவர்களின் வாசிப்புக்கான நூல்கள் வெளியிட வேண்டுமென்று வாதிட்டேன்.

நிறுவனம் ஏற்றுக்கொண்டபோதும் நிதித் துறை அது உங்கள் வேலையில்லை என்று அனுமதி மறுத்தது. சிறுவர்களுக்கான இதழ்களும் குறுகிய காலத்தில் மறைகின்றன. இந்நிலையில், இந்து தமிழ் திசை வாசிப்பினை வளர்த்திடும் முயற்சியில் இறங்குவது மகிழ்ச்சிக்குரியது. காலத்தால் தொடங்கப்பெறும் இவ்வியக்கம், மக்களின் நல்வரவேற்பைப் பெற்றிடும் என்பது உறுதி.

- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.

வணிக நோக்கத்தைத் தாண்டி, சமூக அக்கறையோடு செயல்படும் அரிய நாளிதழ் ’இந்து தமிழ் திசை’க்கு வாழ்த்துகள். ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், ஓர் அருமையான யோசனையை ஆசிரியர் முன்வைத்திருக்கிறார். மானுடச் சீரழிவைத் தடுத்து நிறுத்தி, இளைய தலைமுறையை மடைமாற்றும் மிக அபூர்வமான யோசனை இது. வாசிப்பின் நேசம் வளர்க்கக் களமிறங்கும் உங்களோடு, ஓய்வுபெற்ற பேராசிரியராகிய நானும் கரம் கோக்கத் தயாராகயிருக்கிறேன்.

மாணவச் சமுதாயம், வாசிப்புச் சுகத்தைக் கிட்டத்தட்ட முற்றாக இழந்துவிட்டது என்றே தோன்றுகிறது. நூலகங்களும் நாளிதழில் வெளிவரும் புத்தக விவரங்களும் விமர்சனங்கள் தொடர்பான விவாதங்களும் இவர்களைக் கொஞ்சமும் சென்றடையவில்லை என்றே படுகிறது. நூல்களைத் தேடி இவர்கள் போக மாட்டார்கள். நூல்கள்தான் இவர்களைத் தேடிப் போக வேண்டும். அதற்கான ஓர் இயக்கத்தை நாம்தான் வடிவமைக்க வேண்டும். உங்களின் ஆழ்ந்த அக்கறையும் ஆசிரியப் பேரனுபவமும் அதை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.

- கி.நாராயணன், சென்னை.

முக்கியமான புத்தகங்களை, முக்கியமான எழுத்தாளர்களை, முக்கியமான சிந்தனைகளை ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகையின் வழியே பெற்றேன். பெரும் நாவல் வாசகனாக என்னை மாற்றியதில் ‘இந்து தமிழ் திசை’க்குப் பெரும் பங்கு உண்டு, கட்டுரைகளின் மூலம் ஆழமான சிந்தனையை என்னுள் ‘இந்து தமிழ் திசை’ விதைத்துள்ளது. உங்களோடு நாங்களும் ஏழாம் ஆண்டில் பயணிப்பதில் மகிழ்வுறுகிறேன்!

- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x