Published : 16 Sep 2019 10:36 AM
Last Updated : 16 Sep 2019 10:36 AM

புதிய சொல்லாக்கமா? படித்த புத்தகத்தையே மீண்டும் படியுங்கள் 

ஒளவை அருள்சார்

செயலர், துணைச் செயலர், இணைச் செயலர், கூடுதல் செயலர், தனிநிலைச் செயலர், முதன்மைச் செயலர், தலைமைச் செயலர் என அரசு நிர்வாகத் துறையின் பல்வேறு பதவிகளுக்கான பெயர்களையும் இன்றைக்கு வெகு இயல்பாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு புதிய சொல்லாக்கங்களை உருவாக்கியவர் ‘தமிழ்த் தொண்டர்’ என்று போற்றப்படும் கோ.முத்துப்பிள்ளை. கருத்துரு, சுருக்கொப்பம் ஆகிய சொற்களும் இவருடைய சொல்லாக்கங்களே.

நிர்வாகத்திலும் நீதித் துறையிலும் தமிழ் தனித்தியங்கும் வல்லமையைப் பெற்றிருப்பதற்கு ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் போன்ற தமிழறிஞர்களும் மா.அனந்தநாராயணன், எஸ்.மகராசன் போன்ற நீதிபதிகளும் முக்கியக் காரணம். ஆட்சித் தமிழுக்கு அடித்தளமிட்ட அந்தப் பெருமக்களின் வரிசையில் நூற்றாண்டு விழா காணும் அறிஞர் முத்துப்பிள்ளை சிறப்பிடம் பெறுபவர்.

தமிழ் வளர்ச்சித் துறையின் முதல் இயக்குநராக 1965-ல் வே.கார்த்திகேயன் சில ஆண்டுகள் பணியாற்றினார். அந்நாளிலேயே ஆட்சிச்சொல் அகராதி, கலைச்சொல் அகராதி, சட்டச்சொல் அகராதி முதலிய நூல்கள் உருவாக்கம் பெற்றன. அரசாணைகள், வரைவுகள், அரசு எழுதும் மடல்கள், அறிவிப்புகள், குறிப்பாணைகள் ஆகியவை பற்றிய விளக்கங்கள் எழுதப்பட்டன. பின்னாளில் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்த கார்த்திகேயனால் கண்டெடுக்கப்பட்ட தமிழறிஞர்தான் முத்துப்பிள்ளை.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, தலைமைச் செயலகத்தில் 1942-ல் பணியில் சேர்ந்தவர், 1965 முதல்நான்காண்டுகள் தமிழ் வளர்ச்சித் துறையின் முதலாம் உதவிச் செயலராகப் பணியாற்றினார். மொழிபெயர்ப்போடு புதுச் சொற்களையும் புனைந்தார். மாலை வேளையில் தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலர்களுக்கு ஆட்சிமொழித் திட்டம், செயல்பாடு பற்றி வகுப்பெடுக்கவும் செய்தார். தொடர்ந்து, அரசு உள்துறை இணைச் செயலர் நிலை வரையிலும் பதவி உயர்வுபெற்று 1974-ல் ஓய்வுபெற்றார். தனது 90-வது வயதில் பிப்ரவரி 9, 2009 அன்று இயற்கை எய்தினார்.

தஞ்சை மாவட்டம் மானாங்கோரை என்னும் சிற்றூரில், செப்டம்பர்-15, 1919 அன்று பிறந்த முத்துப்பிள்ளை குடந்தை அரசினர் கல்லூரியில் பயின்றபோது, கல்லூரித் தமிழ் மன்றச் செயலாளராகப் பணியாற்றியவர். வடசென்னை வியாசர்பாடியில் வசித்துவந்த அவர், தான் வசித்துவந்த பகுதியை ‘மாக்கவி பாரதி நகர்’ என்றே எழுதிவந்தார். ‘மாகாளி கடைக்கண் வைத்தாள்’ என்றுதானே பாரதியார் எழுதினார், மகாகாளி மாகாளி என்றாயிற்று, மகாநாடு மாநாடு என்றாயிற்று, மாநகராட்சியும் பழகிய சொல்லாயிற்று. அதுபோலவே மகாகவி என்பதும் மாக்கவி என்றே அழைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதையே பின்பற்றவும் செய்தார். மாக்கவி பாரதி நகரில் முத்தமிழ் ஆய்வு மன்றத்தைத் தொடங்கி, அந்த வட்டாரத்தைச் சார்ந்த பெருமக்கள், அலுவலர்கள், இளைஞர்கள், மகளிர் என அனைவரையும் பங்குபெறச் செய்தார்.

ஆட்சிமொழித் துறையில் மட்டுமின்றி உருவாகிவரும் புதுப் புதுத் துறைகளிலும் புதிய சொல்லாக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர் முத்துப்பிள்ளை. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட 15,000 சொற்களைக் கொண்ட வங்கித் தமிழ் அகராதியை உருவாக்கும் பணியில் பங்கெடுத்துக்கொண்ட தமிழறிஞர்களில் அவரும் ஒருவர். வங்கிச் சொல் அகராதிப் பணியின் அனுபவத்தை ‘பிறந்து வளரும் பெரிய பணி’ என்ற தலைப்பில் ‘செந்தமிழ்ச்செல்வி’ இதழில் கட்டுரையாக எழுதினார்.

புதிய சொல்லாக்கங்களில் ஈடுபடுபவர்களுக்கு அந்தக் கட்டுரை ஒரு வழிகாட்டியும்கூட. நிர்வாகத் துறை தொடர்பான எந்தவொரு புதிய சொல்லாக்கத்துக்கும் திருக்குறளின் உதவியை நாடலாம் என்பது அவரது அறிவுரை. சொல்லாக்கத்தில் ஈடுபடுவோர் ‘எந்த நூலைக் கற்க நேர்ந்தாலும், அந்த நூலை மீண்டும் ஒருமுறை, கலைச்சொல் கண்கொண்டு நோக்க வேண்டும்’ என்பது அவரது அனுபவப் பாடம்.
செப்டம்பர் 15: கோ.முத்துப்பிள்ளை நூற்றாண்டு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x