Published : 15 Sep 2019 03:43 PM
Last Updated : 15 Sep 2019 03:43 PM

ஞாயிறு அரங்கம்: தமிழால் ஆண்டார்

கலாப்ரியா

அண்ணா அமரரான அன்று அந்த அதிகாலை நேரம் நினைவுக்கு வருகிறது. ஆங்காங்கே உள்ள தேநீர்க் கடைகளின் வானொலிச் செய்தி வழியவிட்ட துயரம், ரத வீதியெங்கும் மெல்ல மெல்லப் பரவுகிறது. ஒருவருக்கொருவர் ஏதோ தனிப்பட்ட துக்கம்போல் குசலம் விசாரித்துக்கொள்கிறார்கள். ஒருபுறம் குழுக்கள் குழுக்களாகக் கூடி நின்று அண்ணாவின் அறிவு விசாலம், பேச்சு வன்மை, ஆட்சித் திறன், நேர்மையான வாழ்முறை பற்றியெல்லாம் பகிர்ந்துகொள்கிறார்கள். இன்னொரு புறம் சென்னை போவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

என்றைக்குமாகத் தங்களை விட்டு நீங்கிவிட்ட ஒரு எளிமையான உரு எல்லோர் நெஞ்சிலும் நீக்கமற நிறைந்திருப்பது, அவர்களது ஏமாற்ற நிழல் படிந்த முகக் கண்ணாடியில் தெரிகிறது. எதிர்க்கட்சிக்காரர்கள்கூட, பாராட்டான வார்த்தைகளைச் சொல்லித் தங்களை மொத்த மக்கள் கருத்துக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள்.

சென்னை செல்வதற்குப் பண உபயம் செய்யக்கூடிய நண்பர்களின் வீடுகள் இருக்கும் தெருக்களுக்கெல்லாம் சைக்கிளில் பறக்கிறோம். ஆச்சரியகரமாக எல்லா தெருக்களின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும், ஒரு ஸ்டூல் போட்டு, அதில் சிறிதும் பெரிதுமான, கண்ணாடிச் சட்டமிடப்பட்ட அண்ணாவின் படம், முன்னே கரைந்துகொண்டிருக்கும் ஊதுபத்தி. சில வீடுகளில் தங்கள் வீட்டு நீத்தாரின் சடங்கில் படைப்பதுபோல, வாழை இலை போட்டு நாழியில் நிறை நெல், விளக்கு, பழம், தேங்காய் என்று வரிசையாக வீடுகள்தோறும் வைத்திருக்கிறார்கள்.

துயரத்தின் நடுவிலும் வியப்பு மேலிட்டது. எப்படிப்பா இவ்வளவு படங்கள் கிடைத்தன, அப்படியானால் ஒவ்வொருவர் வீட்டுக்குள்ளும் அண்ணாவின் படம் கண்டிப்பாக இருந்திருக்குமோ! இப்படிச் செய்யுங்கள் என்று யார் யாருக்குச் சொன்னார்கள்? எப்படி இவ்வளவு பேரின் சிந்தையிலும் வாக்கிலும் ஒருவர் இடம்பிடித்தார்? எப்போதிலிருந்து அவர் தங்களைக் கவர்ந்தார் என்று ஆங்காங்கே பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோரின் மனதிலும் ஒரே கேள்விதான் இருந்தது, இவ்வளவு நல்ல மனுஷன் ஏன் சீக்கிரமே விடைபெற்றுக்கொண்டுவிட்டார்!

நெல்லை வந்த இந்தி அரக்கி

அறிஞர் அண்ணாவை, ஓரளவு பிரக்ஞையுடன் முதன்முதலில் நான் பார்த்தது நெல்லையில் 1963-ல் நடந்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில்தான். 1963 தமிழக அரசியல் வரலாற்றில் பல தடங்களைப் பதித்திருக்கிறது. இந்தி ஆட்சிமொழி மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது, அதைக் கடுமையாக எதிர்த்தார் அண்ணா. பலவகைப் போராட்ட வடிவங்களை வகுத்தார், அவற்றுள் தலையாயது இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகள்.

இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாடுகளை அவர், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் என்று தமிழ்நாட்டைப் பழந்தமிழ் நிலங்களின் பாணியில் பிரித்து, அந்தந்த மண்டலங்களின் தலையாய ஊர்களில் நடத்தினார். சேலம், தஞ்சைக்கு அடுத்து நெல்லை. (இதுவே பின்னாளில் பல்லவன், சோழன், பாண்டியன், சேரன் என்று போக்குவரத்துக் கழகங்களுக்குப் பெயர் சூட்ட உந்துதலாயிருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)

நெல்லை மாநாட்டின் ஊர்வலம் திருநெல்வேலிக்கு மிகவும் புதிது. நெல்லை சந்திப்பிலிருந்து மாநாடு நடைபெறும் பேட்டை வரை சுமார் ஐந்து மைல் தூரத்துக்கு நடந்த பிரம்மாண்டமான ஊர்வலம். மாட்டு வண்டிகளில், உயிரோட்டமான காட்சிகள் (Tableau) சங்கத் தமிழ்க் காட்சிகள், இந்தி அரக்கி தமிழ் மாணவர்களின் கழுத்தைப் பிடித்து நெரிப்பதுபோல ஒரு காட்சி. உயரமும் சதையும் ஒன்றுபோல் பெருத்த சுமை தூக்கும் தொழிலாளியான மாக்கான் அண்ணன், மேலெல்லாம் கருப்பு மை பூசி, கோரைப்பல் வைத்துக் கொண்டு, நிஜமாகவே வெயில் முழுவதையும் தன் உழைத்துக் கறுத்த மேனியில் தாங்கிக்கொண்டு, அரக்கிபோல ஒப்பனை செய்து கொண்டு அசையாமல் நடித்தார் (அண்ணா அவருக்கு அன்றைய மாநாட்டில் மோதிரம் அளித்து மரியாதை செய்தார்). இளைஞர் காங்கிரஸ் என்ற கூடாரத்தின் கீழ் பத்து பொக்கைவாய்த் தாத்தாக்கள், வெறும் வாயை மென்றபடி, வேடிக்கை பார்ப்பவர்களை முதலில் வியப்பில் ஆழ்த்தி, பின்னர் யோசிக்கவைத்து, இறுதியாய்ப் பலரையும் ஊர்வலத்துக்குள் இழுத்துக்கொண்டது.

அதிகாரப் பற்றற்ற தூதுவன்

ஊர்வலத்தில் பங்குபெறுபவர்களின் கூட்டம் நீளத்திலும் அகலத்திலும் ‘வீங்கி’க்கொண்டேபோனது. ஊர்வலமும் மாநாடும் தொண்டர்களின் ஓயாத ஈடுபாடு மிக்க உழைப்பு என்றாலும், அதற்கான ஆணை அண்ணாவிடமிருந்து வந்தது. அந்த மாநாட்டில் அவர், “போராட்ட ரயில் புறப்பட்டுவிட்டது, இந்தி ஆதிக்கம் நீடிக்கிற வரையில் அது நிற்காது” என்று பேசினார். நெல்லை மாநாட்டில் எங்களது அணில் பங்களிப்பாக, நாடாளு மன்றத்தில் அண்ணா பேசியதை, ‘காஞ்சி’ இதழில் வந்த உரையினை, ஒரு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு அதை விநியோகித்தோம். அதில் தன்னைப் பற்றிக் குறிப்பிடுகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வப் பிரதிநிதி என்று அல்லாமல், ‘இந்தித் திணிப்பையும் அதன் விளைவுகளையும் உணர்ந்த தென்னக மக்களின் அதிகாரப் பற்றற்ற தூதுவன்’ என்று குறிப்பிட்டிருந்தார் அண்ணா.

நாங்கள் துண்டறிக்கையாக அதை மெய்ப்புப்பார்த்து அச்சிடும்போது ‘அதிகாரப் பற்றற்ற தூதுவன்’ என்ற வார்த்தையைக் குறித்து எங்கள் மூத்த தோழர்கள் வியந்து வியந்து பேசினார்கள். அன்றிலிருந்து அண்ணாவின் பேச்சுக்களையும் கடிதங்களையும் தாங்கிவரும் ‘காஞ்சி’ இதழைப் படிக்க திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்தும் காசில்லாப் படிப்பகத்துக்குச் சென்று படிப்போம். வேறு எந்த நூலகத்துக்கும் அது வராது. ’திராவிட நாடு’ இதழே ‘காஞ்சி’யாக மாறியது.

வாரம் தவறாமல் ‘காஞ்சி’யில் அண்ணா கடிதம் எழுதுவார், “ஒரே குடும்பத்திலுள்ள நாம் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் சிறப்பானவர்கள். நல்ல தமிழ் பேச வேண்டுமா? நாவலர் இருக்கிறார்! சண்டமாருதமாகப் பேச வேண்டுமா? சண்முகம் இருக்கிறார்! உருக்கமாகப் பேச வேண்டுமா? கருணாநிதி இருக்கிறார்! மாணவர்களுடைய தொடர்பு வேண்டுமா? மதியழகன் இருக்கிறார்!” என்று குறிப்பிட்டிருப்பார். நாவலர் முதலில் அதிகமும் இலக்கியமே பேசுவார். அண்ணா அதைச் சுட்டிக் காட்டிய பின், இலக்கியத்துடன் புள்ளிவிவரங்களையும் அரசியலையும் சேர்த்துக்கொண்டதாக நாவலர் சொல்லியிருக்கிறார். ‘திராவிட நாடு’ இதழிலும் கடிதம் எழுதியிருக்கிறார் அண்ணா.

தமிழும் தனையனும்

தமிழால் அண்ணா வளர்ந்தார், தமிழை அண்ணா வளர்த்தார். அண்ணா தன்னுடைய அரசியல் பாணியை மக்களிடம் கொண்டுசெல்ல மொழியை ஒரு அபாரமான கருவியாகக் கையாண்டார். பெரியாரின் தீவிரத் தன்மையிலிருந்து சற்றே மட்டுப்பட்டு, தன் கட்சியின் கொள்கைகளை அமைத்தவர், ‘கடவுள் இல்லை’ என்ற பெரியாரின் முழக்கத்திலிருந்து மாறுபட்டு, ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனும் திருமூலர் வாக்கை, திமுகவின் கொள்கைப் பிரகடனமாக்கினார். அதை எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும்போது, “நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்” என்றார்.

சமயோசிதமான பேச்சில் தனக்கு எதிரானதைக்கூடச் சாதகமாக்கிவிடும் வல்லமை அவருக்கு இருந்தது. தூத்துக்குடியில் பேசியதாகச் சொல்வார்கள். அவர் பேசும் மேடைக்கு எதிரே மின்கம்பத்தில் விளக்குமாற்றையோ அல்லது படத்தையோ கட்டியிருந்தார்களாம் காங்கிரஸ்காரர் கள். அதைக் கண்ட திமுகவினர் ஆத்திரப்பட்டனர். அவர்களைச் சமாதானப்படுத்திய அண்ணா சற்றும் சளைக்காமல் இப்படி சொன்னார்: “அவர்கள் ஒன்றும் தவறாக வைக்கவில்லை. அவர்கள் செய்யும் ஊழல்களை என்னை நன்கு விளக்குமாறு பணித்திருக்கிறார்கள்!”

ஒரு கூட்டத்தில், “மின்னல் கண்ணைப் பறிக்கும், இருளைப் போக்காது; அகல் விளக்காயினும் போதும், இருளைப் போக்கிட” என்று பேசியது, இன்னும் நினைவிருக்கிறது. இந்த மின்னல் படிமம், பிற்காலத்தில் தன்னிச்சையாக, ஏதோ புதிதுபோல எனக்குத் தோன்றும். அப்போது

அண்ணா ஏற்கெனவே சொல்லியிருக்கிறாரே என்றும் தவறாமல் நினைவுக்கு வரும். கூட்டத்தாரைத் தொடக்கத்திலேயே தன்வயப்படுத்திவிடுவதில் அவருக்கு நிகர் எவரும் இல்லை. அண்ணா ஒரு ஊருக்குப்

பேசப் போகிறார். மேடையில் இருந்த குழல் விளக்குகள் முழுவதும் ஒரே பூச்சிகளாகப் பறந்துகொண்டிருக்கின்றன. மேடையேறிய அண்ணா பேச்சை இப்படித் தொடங்குகிறார், “இந்த ஊரில் பேச்சுக்கு வாய் திறப்பதா? பூச்சிக்கு வாய் திறப்பதா என்று தெரியவில்லையே!”

அண்ணாவின் பேச்சு பெருமுழக்கமாக இருக்காது. அவருக்கு முன் பலரும், பல விதமான குரல்களில் பேசி முடித்த பின், ஆற்றொழுக்கான நடையில் அவர் பேச ஆரம்பிப்பார், “இந்த மன்றத்தில் எனக்கு முன்னே நாவலர் சோமசுந்தர பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனாரும், புலவர் மணி ஔவை துரைசாமிப்பிள்ளையும் பேசினார்கள்...” மன்றம் என்றதும் தான் நினைவுக்குவருகிறது, இந்த மன்றம் என்ற சொல்லை அண்ணாதான் மீட்டெடுத்துச் சரியான விதத்தில் பயன்படுத்தினார். அண்ணாவால்

இப்படி மீட்டெடுக்கப்பட்ட, பொதுவெளியில் புழக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்ட சொற்கள் ஏராளம். சட்டசபை, சட்டமன்றம்

ஆயிற்று. பார்லிமென்ட், நாடாளுமன்றம் ஆயிற்று. கோர்ட், நீதிமன்றம் ஆயிற்று. சங்கீத நாடக சங்கம், இயல் இசை நாடக மன்றம் ஆயிற்று.

இப்படி அவர் பேசிப் பேசித்தான் ‘இந்த மன்றத்தில் தென்றல் ஓடி

வந்தது…’ ‘வாய்மை வென்றது.’

ஸ்ரீ போய் திரு வந்தது

இன்றைக்கு இருபது முப்பது வயதுள்ளவர்கள் வெகு இயல்பாக சென்னைக்குப் போகிறோம் என்கின்றனர். எங்கள் தலைமுறை ஆட்கள் இன்னும், “மெட்ராஸுக்குப் போகிறோம்” என்றுதான் சொல்கிறோம். இந்தப் புதிய தலைமுறைக்கு அபேட்சகர், அக்கிராஸனாதிபதி, கனம் ஸ்தல ஸ்தாபன மந்திரி, அரிஜன நல இலாகா, மராமத்து இலாகாவெல்லாம் என்னவென்றே தெரியாது, அவர்களுக்கு வேட்பாளரைத் தெரியும். தலைவர் தெரியும், மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் தெரியும். பொதுப்பணித் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை தெரியும், கக்கூஸ் என்றால் தெரியவே தெரியாது, முகச்சுளிப்புக்கு இடமின்றிக் கழிப்பறை என்கிறார்கள். நமஸ்காரத்துக்கு வணக்கம் சொல்லி விடைகொடுத்த தலைமுறை இது.

ஸ்ரீயும் ஸ்ரீமதியும் திரு, திருமதி ஆனார்கள். விவாஹம் திருமணம் ஆயிற்று. ஸ்ரீலஸ்ரீ அருள்மிகு, அருள்தரும் என்றெல்லாம் அருள் பொங்கிற்று. எட்டடி பாய்ந்த அண்ணாவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட கருணாநிதி, பதினாறு அடி பாய்ந்து மாற்றுத் திறனாளி, திருநங்கை போன்ற புதிய சொற்களை வார்த்தெடுத்தார். அண்ணா மேடைப் பேச்சில் மட்டுமல்ல, கடிதத்தில், கட்டுரையில், கதையில், கவிதையில், நாடகத்தில், திரைப்படத்தில் எல்லாவற்றிலும் புதிய நடையைப் புகுத்தி, புதிய தமிழையும் மீட்டெடுத்தார். அவருடைய ஆங்கில வாசிப்பின் பலம் தமிழ் நாடக மேடையை வெற்றிகொண்டு திரைப்படத்திலும் கொடியைப் பறக்கவிட்டது.

இருபது நாள் இடைவெளிக்குள், ‘வேலைக்காரி’, ‘நல்ல தம்பி’ இரண்டு படங்கள் வெளிவந்து, இரண்டும் மாபெரும் வெற்றிபெற்றன. ஸ்வாமி, பிராணநாதா என்று புராணப் படங்களின் ‘ஆரிய மாயை’யில் ஆழ்ந்து கிடந்த தமிழ் சினிமாவைப் பகுத்தறிவு பேசும் சமூகத் திரைப்படங்களாக மடைமாற்றிய பெருமை அண்ணாவையே சேரும். தமிழ்ப் படங்களில் முதன்முதலாக நீண்ட உரையாடல்களுடைய நீதிமன்றக் காட்சி ‘வேலைக்காரி’ படத்திலேயே வந்தது. அண்ணாவின் உரையாடல்களில் தொண்டை நரம்பு புடைக்கிற தொனி இருக்காது; எளிய அடுக்கு மொழியிலேயே அவர் மக்களை வசப்படுத்திவிடுவார். “இனி இந்த வாளே வழக்கு மன்றம், கைகளே சட்டம்.” “கத்தியைத்தான் தீட்டினாயே ஒழிய உன் புத்தியைத் தீட்டவில்லை.”

அண்ணாவின் ‘வேலைக்காரி’ படத்தில் காளி கோயிலில் கே.ஆர்.ராமசாமி பேசும் வசனமே பிற்பாடு வந்த கருணாநிதியின் ‘பராசக்தி’ பட வசனத்துக்கு முன்னோடி எனலாம். அண்ணாவின் வாசிப்பும் அதைத் தமிழ் மண்ணுக்கேற்ப மாற்றும் வல்லமையுமே அவரின் தனித்த அடையாளங்கள். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயின் கடுமைக்கிடையேகூட அவர் மேரி கொரெல்லியின் ‘மாஸ்டர் கிறிஸ்டியன்’ (புரட்சித் துறவி) நாவலைப் படித்துக்கொண்டிருந்தார்.

அதற்காகவே, ‘அண்ணா படித்த கடைசி நூல்’ என்று குறிப்பிட்டே அதை ‘குமுத’த்தில் மொழிபெயர்த்து எழுதினார் ரா.கி.ரங்கராஜன். பெரும் வரவேற்பு பெற்றது அது. தன் கவிதைகள் குறித்து தாழ்மையான அபிப்பிராயமே கொண்டிருந்தார். ஏனென்றால், அப்போதெல்லாம் யாப்பு அணிசெய்கிற மரபுக் கவிதையே கவிதை என்கிற காலம். அதனால், அவையடக்கத்தோடு, “பாடுகிறான் அண்ணன் ஒருகவிதையென்று/ பரிவாலே எண்ணிடாதீர் உடன் பிறந்தாரே/ சீர் அறியேன் அணி அறியேன் சிந்தை உந்தும்/ செய்திதனைத் தெரிவித்தேன்: ஆசையாலே” என்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் அண்ணா, “எதுகை மோனை எழில் தரும் உவமை/ வசீகர வர்ணனை, பழமைக்கு மெருகு/ இத்தனையும் தேடி எங்கெங்கோ ஓடி/ வார்த்தை முடையும் வலைஞன் அல்ல கவிஞன்” என்று வால்ட்விட்மன் சொன்னதை மொழிபெயர்த்து, அவரைத் தன் கட்சிக்குச் சாட்சியாக அழைக்கிறார். இது அண்ணா புதுக்கவிதை நோக்கி நகர்ந்திருக்கிறாரோ என எண்ணவைக்கிறது. இந்த பாணிக் கவிதையையே கருணாநிதியும் பின்பற்றி பெரும் வெற்றிபெறுகிறார்.

அண்ணா பேசும்போது, மூக்குப்பொடி அதிகம் உபயோகிப்பதாலோ என்னவோ, அவர் அதிகமும் மூக்கினாலேயே பேசுவார். “கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டாலும் கிஞ்சித்தும் பயனில்லை…” என்பதுபோல அவர் பேசுகிற அழகைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவர் மேடையில் வைத்து, நாசூக்காக யாரும் அறியாவண்ணம் பொடி போட்டுக்கொள்வதைப் பற்றி மூத்த தோழர்கள் வியந்துகொள்வார்கள். நான் எவ்வளவோ கூட்டங்களில் கவனித்திருக்கிறேன். என்னால் அதைப் பார்க்க முடிந்ததே இல்லை. மூக்குப்பொடி போடும் நாசூக்கை யார் யார் கவனித்தார்களோ இல்லையோ, கட்சியை அண்ணா நாசூக்காகக் கையாண்ட விதத்தை

அகில இந்தியாவும் கவனித்தது. அனைவரிடமும் மாறுபாடின்றி ஒரு சகோதர உணர்வைப் பேணினார். அவருடைய மொழியே இந்த சகோதர உணர்வைக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரையும் போற்றத்தக்க இடத்தில் இருத்தினார். எம்ஜிஆரைப் பாராட்டுகையில் சொல்வார், “நம்முடைய புரட்சி நடிகரின் திரைப்படச் சாதனைகளை முறியடிக்க ஒரே ஒரு திலகத்தால்தான் முடியும். அது…” என்று ஒரு இடைவெளி கொடுத்துவிட்டு, “அது மக்கள் திலகத்தால் மட்டுமே முடியும்” என்பார் (இரண்டு பட்டங்களுமே எம்ஜிஆருக்கு உரியன). கேட்பவர்கள் ஆனந்தக் கூத்தாடக் கேட்பானேன்!

அப்பாவுக்கும் அண்ணா, பிள்ளைக்கும் அண்ணா

பொதுவாகவே, அண்ணா பல தொடர் போராட்டங்களின் மூலமாகவே ஜனநாயகத்துக்கு எதிரான, சமூக அநீதிக்கு எதிரானவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டினார். எப்போதுமே தன் போராட்ட பீரங்கிகள், நமுத்துப் போகாமல் உலர்ந்த நிலையிலேயே வைத்திருந்தார். அண்ணல் அம்பேத்கர் ‘கற்பி, ஒன்றுசேர், போராடு’ என்று சொன்னார் என்றால், அண்ணா அதைச் செய்தார். தமிழ் மக்களைத் தன் பேச்சால், எழுத்தால் கலைத் திறத்தால் ஒன்றுகூட்டினார். அதே திறமைகள் கொண்ட தன் தளபதிகளைக் கொண்டும் ஒன்றுசேர்த்துக் கற்பித்தார். தொண்டர்களைத் தன் அன்பதிகாரத்தால் கட்டிப்போட்டிருந்தவர் போராட்டங்களால் எதிரிகளைக் கிடுகிடுக்க வைத்தார். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அவரை அண்ணா என்றது.

ஒரு கடிதத்தில் அண்ணா குறிப்பிட்ட வேடிக்கையான ஒரு நிகழ்வை இங்கே சுட்டலாம் அண்ணா சிறையில் இருக்கும்போது நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தன் மகன் ரவியுடன் அவரைப் பார்க்கச் சென்றாராம். அப்போது அந்தச் சிறுவன் சொல்கிறானாம், “அண்ணா இந்தக் கம்பிகளையெல்லாம் உடைத்துவிட்டு வெளியே வந்துவிடுங்கள் அண்ணா!” அடுத்த வரியில் அண்ணா எழுதுகிறார், “நான் அவனுக்கும் அண்ணா, அவனுடைய அப்பாவுக்கும் அண்ணா, இந்த வேடிக்கையை எண்ணிச் சிரிப்பேன் நான்.”

அண்ணா அன்பானவர், ஆனால், தலைவனுக் கேயுரிய கண்டிப்பும் உடையவர். அவருடைய வார்த்தைகள்தான் கடைசி என்று சில நேரங்களில் கண்டிப்பும் காட்டுவார். தேர்தல்களில் வேட்பாளராகவோ, கட்சியில் நிர்வாகிகளையோ நியமிக்கும் சூழல் ஏற்படுகையில், அண்ணா தன் தளகர்த்தர்கள் எல்லோரையும் ஒன்றுகூட்டிக் கலந்தாலோசிப்பார். எல்லோரும் ஒத்த கருத்துடன் ஏற்பது மாதிரியான ஒரு பெயர் முடிவானால் சரி. அப்படியல்லாமல் எப்போதாவது அபிப்பிராய பேதம் நீடித்தால், ஒன்றும் சொல்லாமல் எழுந்து போய்விடுவார். தேர்தல் அன்று மூடி முத்திரையிட்ட ஒரு காகித உறையை அனுப்புவார். அதில் யார் பெயர் எழுதியிருக்கிறதோ அவரே இறுதியானவர். யாரும் மூச்சுக்காட்ட மாட்டார்கள் அதற்குப் பின். திமுக ஆட்சிக்கு வந்தால், ‘ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ என்றுதான் அண்ணா முதலிலிருந்தே சொல்லிவந்தார். அது எதிர்க்கட்சி மேடைகளில் ரூபாய்க்கு மூன்று படி என்று திரித்துக் கூறப்பட்டு, ஒரு உண்மைபோல சிருஷ்டிக்கப்பட்டது. அண்ணா பார்த்தார், அதையே பெரும் முழக்கம் ஆக்கினார் “மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்.”

செகம் பூரா ஆளலாமே, திரும்பி நல்லாச் சாகலாமே!

பெரியாரின் பல கனவுகளை நடைமுறைச் சாத்தியமாக்க அண்ணாதான் விதைகளை ஊன்றினார். அந்த விதைகளே தரு நிழலாகி, அவருக்குப் பின்னும் அரை நூற்றாண்டுக் காலமாக அவர் பெயரைச் சொல்லுகிறவர்களே தமிழ்நாட்டை ஆள முடியும் என்ற நிலையை இன்று உருவாக்கி இருக்கிறது. அவர் இன்னும் சில காலம் உயிருடன் இருக்க நேர்ந்திருந்தால் என்னென்னவோ நடந்திருக்கும். ஆனால் அவரை, சாவு வாரிக்கொண்டு போய்விட்டது. தமிழ்நாட்டின் சாமானிய மக்கள் இதை நன்றாகவே உணர்ந்திருந்தார்கள்.

எங்கள் திருநெல்வேலிப்பக்கம் துக்க வீட்டில், ஒரு பாடல் பாடுவார்கள், “செவ்வந்திபோல் இருந்தியளே, சிரிக்காமச் சொல்லாமப் போறீயளே… செகம் பூரா ஆளலாமே, திரும்பி நல்லாச் சாகலாமே” என்று. அண்ணா மறைந்த அன்று அந்தப் பாடல் ஒலித்தபோது அந்தப் பாடலே அவருக் காகப் புனையப்பட்டதாகத் தோன்றியது!

- கலாப்ரியா, மூத்த கவிஞர்.
செப்டம்பர் 15: அண்ணா பிறந்த நாள்
(‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x