Last Updated : 05 May, 2014 10:26 AM

 

Published : 05 May 2014 10:26 AM
Last Updated : 05 May 2014 10:26 AM

வாரணாசியில் மோடி இப்போது பொது வேட்பாளர்: கேஜ்ரிவால் பேட்டி

தேர்தல் சூட்டின் உச்சத்தில் தகித்துக்கொண்டிருக்கிறது வாரணாசி. பா.ஜ.க-வின் கோட்டைபோலக் காட்சி அளிக்கும் வாரணாசியில், சிங்கத்தின் குகைக்கு முன் நின்று சவால் விடுவதுபோல மோடியை எதிர்த்து நிற்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால். மோடி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டுப் பிற மாநிலங்களில் கூட்டணிக்கு ஆதரவு திரட்டச் சென்றுவிட்டார். கேஜ்ரிவால் தொகுதியைச் சுற்றிச்சுற்றி வருகிறார். அவருடைய பிரச்சாரக் கூட்டங்களுக்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. தேர்தல் செலவுக்கு மக்கள் பணம் தருகிறார்கள். ஒவ்வொருவரும் நூறு வாக்குகளைத் திரட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். காங்கிரஸும், பா.ஜ.க-வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். ஊழலுக்கு எதிராகப் போர் தொடுக்கும் என்னை ஆதரியுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறார். அவருக்கு உதவியாக மனைவி சுனிதா வருகிறார்.

கடந்த சில நாள்களாக உங்களுடைய கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல்கள் அதிகரிக்கக் காரணம் என்ன?

பா.ஜ.க-வின் உத்தி இரண்டு கட்டங்களாலானது. முதல் கட்டத்தில், என்னை மிரட்டி அச்சுறுத்தி விரட்டப் பார்த்தார்கள். நான் விலகவில்லை என்றதால், அடுத்த கட்டமாக என்னுடைய கட்சித் தொண்டர்களை அடித்து மிரட்டுகிறார்கள். என்னுடைய கட்சித் தொண்டர்கள் வித்தியாசமானவர்கள். என்னை விட்டுப் போக மறுக்கிறார்கள். இப்போது நிலைமை முற்றிவிட்டது, வாரணாசி மக்களையே பா.ஜ.க. குண்டர்கள் தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கல்லூரிக்கு வெளியே சிலர் எங்கள் தொப்பிகளை அணிந்துள்ளனர். அதைப் பார்த்ததும் கோபப்பட்டு அவர்களைத் தொப்பியைக் களையும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை மோடிக்கு இருந்தால் அவருடைய ஆதரவாளர்கள் எஙகளைத் தாக்குவானேன்?

வாரணாசி மக்கள் உங்களை ஆதரிக்கும்படி நீங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? காங்கிரஸ், பா.ஜ.க. என்ன செய்யவில்லை?

உண்மையின் ஆற்றல்தான் அது. எங்களிடம் வேறெதுவும் இல்லை. எந்த மதம், சாதியாக இருந்தாலும் மனிதனின் அடிப்படைப் பண்பு உண்மைதான். நாங்கள் உண்மையைச் சொல்லும்போது மக்களை ஈர்க்கிறோம். டெல்லியில் எப்படி நாங்கள் வெற்றிபெற்றோம்? உண்மையையே பேசினோம், மக்கள் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். நாங்கள் அக்கறையுள்ளவர்கள் என்பதால், மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். என்னுடைய கூட்டத்துக்கு வரும் யாரிடமாவது கேட்டுப் பாருங்கள், 'இவர் உண்மையைப் பேசுகிறார், இவர் நேர்மையாளர் என்பதால் வருகிறோம்' என்று பதிலளிப்பார்கள்.

நீங்கள் வெறும் பிடிவாதக்காரர் என்றே பலர் நினைக்கின்றனர்?

நான் பிடிவாதக்காரன்தான். இந்த நாட்டிலிருந்தே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற பிடிவாதம் உள்ளவன்.

தேர்தல் பிரச்சாரம் திடீரென்று ராபர்ட் வதேரா, அதானியை மையம் கொண்டுவிட்டது; மக்களுடைய பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன என்று நீங்கள் நினைக்கவில்லையா?

அதற்குத்தான் இவர்கள் முயற்சிக்கிறார்கள். தேர்தலுக்கு 15 நாள்களுக்கு முன்னால்தான் பா.ஜ.க-வுக்கு ராபர்ட் வதேரா நினைவுக்கு வருகிறார். வதேராவின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம் என்றால், ராஜஸ்தானில் நடந்த நில பேரங்களுக்காக அவரை ஏன் கைது செய்திருக்கக் கூடாது? ராஜஸ்தான் அரசால் நாளையே அவரைக் கைது செய்ய முடியும். அவருக்கு எதிராக ஏன் முதல் தகவல் அறிக்கைகூடப் பதிவுசெய்யப்படவில்லை? காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான அக்கறை இருந்தால், இளம்பெண்ணைச் சட்டவிரோதமாக வேவு பார்த்த விவகாரத்தில் நரேந்திர மோடியை ஏன் கைதுசெய்யவில்லை? வாரணாசியில் நரேந்திர மோடி வெற்றி பெற வேண்டும் என்றே பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய மூன்று கட்சிகளுமே திட்டமிட்டு வேலை செய்கின்றன. மோடி வெறும் பா.ஜ.க. வேட்பாளர் மட்டுமல்ல, காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் பொது வேட்பாளரும் அவர்தான்!

வாரணாசி, அமேதி போன்ற சில தொகுதிகளில் மட்டும் நீங்கள் பிரச்சாரம் செய்வது ஏன்? உங்கள் கட்சியைச் சேர்ந்த சோனி சோரி போட்டியிடும் பஸ்தாருக்கு ஏன் பிரச்சாரம் செய்யப் போகாமல் இருக்கிறீர்கள்?

எங்களுக்கு நேரமே போதவில்லை. சோனி சோரி மட்டுமல்ல, ஜாவித் ஜாஃப்ரி, முசாஃபர் பட் போன்றோரும் போட்டியிடுகின்றனர். எல்லா இடங்களுக்கும் நான் போயிருக்க வேண்டும், நேரமில்லை.

டெல்லி அனுபவத்திலிருந்து ஏதாவது பாடம் கற்றீர்களா? முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியது தவறு என்று சொன்னீர்களே?

நான் பேசியது தவறாக வெளியாகிவிட்டது. நான் எடுத்த முடிவு சரியானதுதான். அதை நான் மக்களுக்குத் தெரிவித்த விதம்தான் தவறானது. சட்டப்பேரவைக் கூட்டம் காலையில் நடந்தது. மாலையில் நான் பதவி விலகினேன். எனவே, மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அது ஏன் என்று அவர்களுக்குப் புரியவில்லை. என்ன நடந்தது என்பதை ஜீரணிக்கவே அவர்களால் முடியவில்லை. அரசை அமைப்பதற்கு முன்னால் பல நாள்கள் கூட்டம் நடத்தி மக்களிடம் பேசி அவர்களுடைய கருத்தைத் தெரிந்துகொண்டு பிறகு ஆட்சியமைத்தோம். அதேபோல விலகுவதற்கு முன்னாலும் மக்களிடம் தெரிவித்து அவர்களுடைய ஒப்புதலைக் கேட்டிருக்க வேண்டும். அவர்களும் நிச்சயம் ஒப்புதல் தந்திருப்பார்கள். மக்கள் தொடர்பில் நாங்கள் தோற்றுவிட்டோம்.

ஆம் ஆத்மி கட்சி புதிய இடதுசாரிக் கட்சி என்கிறார்கள், இதை ஏற்கிறீர்களா?

நாங்கள் இடதுசாரியும் அல்ல; வலதுசாரியும் அல்ல. நாங்கள் காரிய சாத்தியமான முடிவுகளை எடுப்பவர்கள். ஒரு பிரச்சினைக்கு இடதுசாரி வழிமுறைகள்தான் சரியென்றால் அந்த முடிவை எடுப்போம். வலதுசாரி வழிமுறைதான் சரியென்றால் அதற்கேற்ற முடிவை எடுப்போம்.

மத்தியில் புதிய அரசு ஏற்பட்டால் உங்கள் நிலை என்ன, நீங்கள் யாருடன் இருப்பீர்கள்?

தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று ஊகிப்பது கடினம். நாட்டின் எதிர்காலத்தை அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. மக்களுக்கு எங்களால் சொல்ல முடிந்ததெல்லாம் ஒன்றுதான் - நாங்கள் எங்கள் கொள்கைகளில் உறுதியாக இருப்போம்.

‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x