Published : 13 Sep 2019 08:37 AM
Last Updated : 13 Sep 2019 08:37 AM

360: மாற்று வேலையின்றித் தவிக்கும் மோட்டார் ஆலைத் தொழிலாளர்கள்

மாற்று வேலையின்றித் தவிக்கும் மோட்டார் ஆலைத் தொழிலாளர்கள்

பொருளாதார மந்த நிலையின் காரணமாக வாகனத் தயாரிப்புத் தொழில் படுவீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடைகொடுத்து வெளியே அனுப்ப ஆரம்பித்துவிட்டன. நாட்டின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த ஜூன் மாதத்தில் 6% தற்காலிகப் பணியாளர்களைப் பணியிலிருந்து விலக்கிவிட்டது. டெல்லியைச் சுற்றியுள்ள வாகனத் தயாரிப்பு ஆலைகளில் நிலைமை இன்னும் படுமோசம். நிரந்தரப் பணியாளர்களும் வேலையிழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். ஹரியாணாவின் குர்காவோன், மனேசர், ரெவாரி பகுதிகளில் அமைந்திருக்கும் மோட்டார் ஆலைகளிலிருந்து மட்டும் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். மாதாந்திர ஊதியத்தை நம்பி கட்டத் தொடங்கிய வீடுகள் கூரையில்லாமல் சுவர்களாக மட்டுமே நிற்கின்றன. உயர்கல்வியை எதிர்நோக்கியிருந்த தம் பிள்ளைகளின் கனவுகளும் கனவாகவே எஞ்சியிருக்கின்றன. தொழிலாளர்களின் வீடுகளில் திருமணங்கள் தள்ளிப்போடப்பட்டிருக்கின்றன. முன்பெல்லாம் ஒரு தொழிற்சாலையிலிருந்து விலகினால் உடனடியாக இன்னொரு தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிடும். தற்போது எல்லா மோட்டார் ஆலைகளுமே வேலையிழப்புகளால் ஸ்தம்பித்துப்போயிருக்கின்றன. எனவே, எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள் மோட்டார் ஆலைத் தொழிலாளர்கள். சிலர், உணவு விநியோகிக்கும் வேலைபார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் சிலர் விரைவில் ஹரியாணாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகக் கட்சிப் பணியாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு, ஆளுங்கட்சியின் பரிந்துரையில் ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.

250 கோடி டன் கரியமில வாயுவை விரட்ட அழைப்பு விடுக்கும் இந்தியா!

பருவநிலை மாற்றம் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியிருக்கிறது. பருவநிலை மாற்றத்தின் விளைவாகக் கடல் நீர்மட்டம் உயர்ந்து சென்னை, மும்பை மாநகரங்கள் பாதிக்கப்படலாம் என்று நகர்ப்புற பருவநிலை மாறுதல் தொடர்பான ஆராய்ச்சி வலையமைப்பின் அறிக்கை எச்சரிக்கிறது. அது மட்டுமல்ல... சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா நகரங்களில் கடுமையான வெப்பமும் தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஏற்படும் என்கிறது அந்த அறிக்கை. புவி வெப்பநிலையை இப்போதிருக்கும் அளவைவிட 2 செல்சியஸ் குறைக்க வேண்டும் என்று பாரீஸ் சர்வதேச மாநாட்டில் ஒப்புக்கொண்டு மூன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் எந்த நாடும் இதைத் தீவிரமாக அமல்படுத்தவில்லை. இந்தியா மட்டும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகப்படுத்துவதில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்கள் வழியே அல்லாமல் பிற மூலங்கள் உதவியுடன் மின்சாரம் தயாரிப்பதில் 2018 ஜூனில் இந்தியா 35.5% அளவுக்கு இலக்கை எட்டியிருக்கிறது. இலக்கு 40% என்றாலும் இதுவும் பாராட்டத்தக்கதே. இந்தியாவிலிருந்து 250 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது என்ற இமாலய இலக்கை ஆளுக்கொரு மரம் வளர்ப்பதன் மூலமே சாத்தியப்படுத்த முடியும். செய்வீர்களா?

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113 ஒரு லிட்டர் பால் ரூ.140

பாகிஸ்தானில் முஹரம் பண்டிகையின்போது ஊர்வலக்காரர்களுக்குப் பால் தருவது வழக்கம். தேவை அளவுக்குப் பால் உற்பத்தி இல்லை என்பதால், ஒரு லிட்டர் பாலின் விலையை ரூ.140 என்று உயர்த்திவிட்டார்கள் பால்காரர்கள். இந்த விலை தற்காலிகமா, தொடருமா என்று தெரியாமல் திகைக்கிறார்கள் மக்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113, டீசல் ரூ.91 என்று விற்கும் நிலையில், பால் விலையோ லிட்டருக்கு ரூ.120 முதல் ரூ.140 வரை என்றிருக்கிறது. பால் உற்பத்தியைப் பெருக்கவும், பால் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவிக்கிறார்கள் பாகிஸ்தான்வாசிகள்.

எண்ணெய் வாங்குவதை நிறுத்திய இந்தியா: என்ன செய்யப்போகிறது ஈரான்?

அமெரிக்கா எச்சரித்தது என்பதற்காக ஈரானிடமிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெய் இறக்குமதியை இந்தியா முற்றாக நிறுத்திவிட்டது குறித்து ஈரான் வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார் இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகனி. “பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா அச்சுறுத்தியும் சீனா, ரஷ்யா, துருக்கி ஆகியவை தொடர்ந்து எங்களிடம் எண்ணெயை வாங்குகின்றன. இந்தியா இதில் சுதந்திரமாக முடிவெடுத்திருக்க வேண்டும். இந்தியர்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்; எங்களை நேசியுங்கள் என்று மற்றவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. தன் நாட்டின் நலனுக்கு எது உகந்தது என்ற முடிவை இந்திய அரசுதான் எடுக்க வேண்டும். எரிபொருள் தேவைகளைத் தடையில்லாமல் பூர்த்திசெய்துகொள்ள ஈரான்தான் நம்பகத்தன்மையுள்ள கூட்டாளி என்பதை இந்தியா உணர வேண்டும்” என்கிறார் அலி செகினி.

250 கோடி டன் கரியமில வாயுவை விரட்ட அழைப்பு விடுக்கும் இந்தியா!

பருவநிலை மாற்றம் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவாகியிருக்கிறது. பருவநிலை மாற்றத்தின் விளைவாகக் கடல் நீர்மட்டம் உயர்ந்து சென்னை, மும்பை மாநகரங்கள் பாதிக்கப்படலாம் என்று நகர்ப்புற பருவநிலை மாறுதல் தொடர்பான ஆராய்ச்சி வலையமைப்பின் அறிக்கை எச்சரிக்கிறது. அது மட்டுமல்ல... சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா நகரங்களில் கடுமையான வெப்பமும் தண்ணீர்ப் பற்றாக்குறையும் ஏற்படும் என்கிறது அந்த அறிக்கை. புவி வெப்பநிலையை இப்போதிருக்கும் அளவைவிட 2 செல்சியஸ் குறைக்க வேண்டும் என்று பாரீஸ் சர்வதேச மாநாட்டில் ஒப்புக்கொண்டு மூன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் எந்த நாடும் இதைத் தீவிரமாக அமல்படுத்தவில்லை. இந்தியா மட்டும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகப்படுத்துவதில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்கள் வழியே அல்லாமல் பிற மூலங்கள் உதவியுடன் மின்சாரம் தயாரிப்பதில் 2018 ஜூனில் இந்தியா 35.5% அளவுக்கு இலக்கை எட்டியிருக்கிறது. இலக்கு 40% என்றாலும் இதுவும் பாராட்டத்தக்கதே. இந்தியாவிலிருந்து 250 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது என்ற இமாலய இலக்கை ஆளுக்கொரு மரம் வளர்ப்பதன் மூலமே சாத்தியப்படுத்த முடியும். செய்வீர்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x