Published : 02 Jul 2015 10:27 AM
Last Updated : 02 Jul 2015 10:27 AM

நெருக்கடி நிலையிலிருந்து கற்காத பாடங்கள்

வரலாற்றின் அலமாரியிலிருந்து ஒரு கட்டுரை...

நெருக்கடி நிலையின் 25-வது ஆண்டு நினைவு தினம் தொடர்பாகக் கூட்டங்களை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருப்பது அபத்தமானது. 1975-77 நெருக்கடி நிலை காலகட்டத்தில் நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தின்போது பாஜக / ஆர்எஸ்எஸ் தலைவர்களில் பெரும்பாலானோர் துரோகம் இழைத்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அப்போதைய தலைவர் பாளாசாகேப் தேவரஸ், புணேயின் எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்குப் பல மன்னிப்புக் கடிதங்களை எழுதினார் என்பது மகாராஷ்டிர சட்டப்பேரவை நிகழ்ச்சிகளின் ஆவணங்களில் பதிவாகியிருக்கிறது. போராட்டத்திலிருந்து ஆர்எஸ்எஸ் விலகிக்கொள்வதாகவும், இந்திரா காந்தியின் 20 அம்சத் திட்டத்துக்காகப் பணிபுரியத் தயாராக இருப்பதாகவும் அந்தக் கடிதங்களில் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், அவர் எழுதிய எந்தக் கடிதத்துக்கும் இந்திரா காந்தி பதில் எழுதவில்லை. அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அதை இந்திரா ஏற்றுக் கொண்டார். உண்மையில், 20 மாதங்கள் அமலில் இருந்த நெருக்கடி நிலையின்போது பெரும்பாலான சமயங்களில் பரோலில் வெளியில் வந்தார் வாஜ்பாய். அரசுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கப்போவதில்லை என்று எழுத்துபூர்வமாக இந்திரா காந்திக்கு அவர் உறுதியளித்திருந்தார். நல்ல விதமாக நடந்துகொள்வதாக உறுதியளித்ததன் பேரில் சிறையில் இருந்து வெளியே வந்த ஜன சங்க உறுப்பினர்கள்பற்றி அகாலி தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலா எழுதிய புத்தகம் பிரமாதமாக விவரித்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ் தந்த அதிர்ச்சி

நம்மில் பலர் அவரவர் வழிகளில் நெருக்கடி நிலையை மிகக் கடுமையாக எதிர்த்தோம். அத்தனை பெருமையும் முதலில் மொரார்ஜி தேசாய்க்கும் ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கும்தான் செல்ல வேண்டும். 78 வயதான மொரார்ஜி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சண்டிகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயணின் இரண்டு சிறுநீரகங்களும் மர்மமான முறையில் செயலிழந்த பின்னர், ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தியா ஒட்டுமொத்தமாக நெருக்கடி நிலைக்குப் பணிந்ததையும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் மாற்றத்தையும் அறிந்த அவர் அதிர்ந்துபோனார். எனினும் அவர் பின்வாங்கவில்லை. தலைமறைவாக இருந்த எனக்கு 1975 ஆகஸ்ட் மாதம் ஒரு செய்தியை அனுப்பினார். வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று, நெருக்கடி நிலைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யுமாறு என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

மொரார்ஜியோ மிகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருந்தார். நல்ல விதமாக நடந்துகொள்வதாக உறுதியளித்தால் மொரார்ஜியைப் பரோலில் வெளிவிடத் தயார் என்று இந்திரா காந்தி கூறியனுப்பினார். ‘வெளியில் வந்தவுடன் உடனடியாக மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவேன்’ என்று மொரார்ஜி சொல்லியனுப்பினார். இதைக் கேட்டு அழுத அவரது மருமகள் பத்மா, அவரது வயதைக் கருத்தில்கொண்டு அரசின் நிபந்தனையை ஏற்றுக்கொள்ளுமாறு கெஞ்சினார். ஆனால், அதைவிடச் சாவதே மேல் என்று கூறினார் மொரார்ஜி.

ஆர்எஸ்எஸ்ஸின் எல்லாத் தலைவர்களும் பணிந்து விடவில்லை என்பதையும் நான் சொல்லியே ஆக வேண்டும். மாதவ்ராவ் மூளே, தத்தோபந்த் டெங்கடி மற்றும் மோரோபந்த் பிங்ளே போன்றோர் விதிவிலக்குகள். மூளேவுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் வெளிநாட்டில் இருந்தபோதும், இந்தியாவில் தலைமறைவாக இருந்தபோதும் என்னை முழுமையாக ஆதரித்தார். ஆனால், 1976 நவம்பரில், மீண்டும் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லுமாறு கலங்கிய கண்களுடன் என்னிடம் கூறினார். நெருக்கடி நிலைக்கு முழுமையாகப் பணிந்துவிடுவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட 1977 ஜனவரி இறுதியில் ஆர்எஸ்எஸ் முடிவுசெய்திருப்பதாக என்னிடம் அவர் கூறினார்.

போராட்டத்தைப் பற்றி விசாரித்தேன். 42-வது சட்டத் திருத்தத்துக்கு அனைவரும் ஒப்புக்கொண்டதாகவும், நாம் இதுவரை அறிந்திருந்த ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் மூளே தெரிவித்தார். ஆர்எஸ்எஸ்ஸைப் பொறுத்தவரை ஜனநாயகம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், எல்லோருக்கும் அப்படி அல்ல. சில வாரங்களில் மக்களவைக்கான பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த முடிவை இந்திரா காந்தி எடுப்பதற்கு என்ன காரணம் என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், இதன் விளைவாக, சரணடையும் ஆவணத்தில் கையெழுத்திடும் அவசியம், அதிர்ஷ்டவசமாக ஆர்எஸ்எஸ்ஸுக்கு ஏற்படவில்லை.

அழுத்தம் தந்த ஜிம் கார்ட்டர்

மக்களவைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடவும் நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்ளவும் ஒருங்கமைக்கப்படாத சக்திகளின் கூட்டு இந்திரா காந்தியை நிர்ப்பந்தித்தது. வெளிநாடுகளில் எனது பிரச்சாரம் மற்றும் அமெரிக்காவின் அறிவுஜீவிகளிடம் எனக்கு இருந்த தொடர்பின் மூலம் அமெரிக்காவின் அதிகாரமட்டத்தின் கவனத்தை, குறிப்பாக புதிதாகப் பதவியேற்ற அதிபர் ஜிம் கார்ட்டரின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. பதவிப் பிரமாணம் ஏற்பதற்கு முன்னரே, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசுக்கு அழுத்தம் தரத் தொடங்கினார் ஜிம் கார்ட்டர். அது இந்திரா காந்தியை அசைத்துப் பார்த்தது.

இந்த விஷயத்தில் அதிகம் பேசப்படாத இன்னொரு நாயகன், தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. நெருக்கடி நிலையை விலக்கிக்கொள்ளுமாறு இந்திரா காந்தியை அவர் தூண்டினார். நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறு என்று தனது அந்தராத்மா கூறுவதை இந்திரா காந்தி ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காஞ்சி மடத்தின் நிராகரிப்பு

இந்திரா காந்திக்கு அதிக வலி ஏற்படுத்தியது, காஞ்சி மடத்தின் பரமாச்சாரியார்  சந்திரசேகர சரஸ்வதியிடம் ஆசி வேண்டிச் சென்றிருந்ததுபோது ஏற்பட்ட அனுபவம்தான். 90 நிமிடங்களுக்கு இந்திரா காந்தியைப் பார்க்கவே மறுத்துவிட்ட அவர், அதன் மூலம் நெருக்கடி நிலையை முற்றிலுமாகத் தான் நிராகரித்ததை இந்திரா காந்திக்கு உணர்த்தினார்.

மொரார்ஜி போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டார். நெருக்கடி நிலையின் மூலம் கொஞ்சமாவது நல்ல விஷயங்கள் நடந்தன என்று ஒரு மரியாதைக்காக ஒப்புக்கொள்ளுமாறு இந்திரா காந்தியின் தூதர்கள் கெஞ்சியதையும் அவர் நிராகரித்துவிட்டார்.

இந்திரா காந்தி தேர்தலை அறிவித்தபோது, வன்முறை வழியில் தோல்வியடைந்தவர்கள் தேர்தலைப் புறக்கணிக்க விரும்பினார்கள். ஜனநாயகம் தொடர்பான பிரச்சினைகளால் படிப்பறிவில்லாத பொதுமக்கள் வருத்தமடைந்திருக்க மாட்டார்கள் என்றும் இப்படியான சூழலில் எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர்கள் கருதினார்கள். இதன் மூலம் தேர்தல் முடிவுகள் நெருக்கடி நிலையை ஆதரிப்பதாகவே அமையும் என்றும் நம்பினார்கள். ஆனால், மொரார்ஜி தேசாயும் சரண் சிங்கும் அப்படி நினைக்கவில்லை. மக்கள்மீது அவர்கள் பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

இந்தியச் சமூகத்தின் பன்முகத் தன்மைதான் மக்களைச் சர்வாதிகாரத்துக்கு எதிராகப் புரட்சி செய்ய வைத்தது. முற்றிலும் வேறுபட்ட பிரிவினரை ஒன்றுக்கொன்று ஈர்க்கும் அம்சம்தான் இந்தியாவை ஒரு ஜனநாயகச் சமூகமாக வைத்திருக்கிறது. சமூகத்தின் இந்தக் கலவையான இயல்பு இருக்கும்வரை இந்திய ஜனநாயகம் உயிர்த்திருக்கும் என்பதுதான் நெருக்கடி நிலையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இந்தியச் சமூகத்தின் ஒற்றைப்படைத்தன்மையை ஒரு அளவுக்கு மேல் வலியுறுத்துவது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகிவிடும்.

கன்னாவை நினவிருக்கிறதா?

நெருக்கடி நிலையின்போது அதை எதிர்த்துப் போராடக்கூடிய இடத்தில் இருந்த குறிப்பிடத் தக்க மனிதர்கள் அதற்கு எதிராகப் போராடவில்லை. இன்று மக்கள் சுதந்திரத்தைப் பாதுகாக்க ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்கள் நம்மிடையே இல்லை. அடிப்படை உரிமைகளை நீதித் துறை வாயிலாக நசுக்குவதற்குப் பதிலாக, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கான வாய்ப்பை இழக்கவே விரும்பினார் ஹெச்.ஆர். கன்னா. யாருக்கேனும் அவரை நினைவிருக்கிறதா?

1975-77 காலகட்டத்தைவிட இன்று நெருக்கடி நிலையை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு நாம் பலவீனமாக இருக்கிறோம். முதல் காரணம், சுதந்திரப் போராட்டத்தின் சாதி வேறுபாடற்ற தலைவர்கள் இப்போது நம்மிடையே இல்லை. அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் இடத்தில் பாசிஸ நிறுவனம் இருக்கிறது என்பது மற்றொரு காரணம். இந்த நிறுவனம் பல லும்பன் அமைப்புகளை உருவாக்கியிருக்கிறது. இந்த அமைப்புகள், மதத் தூதர்களைக் கொல்லவும் தயங்காதவை.

இன்று மெல்ல இயங்கும் நெருக்கடி நிலையால் அமைப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதற்கான எல்லா வித அறிகுறிகளும் தென்படுகின்றன. நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தைக் கொண்டாட பாஜக முடிவுசெய்திருப்பது ஏன் அபத்தமானது என்பதற்கான முக்கியமான காரணம் இது. அரசியல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதைவிட, அதை மாற்றியமைக்கத்தான் பாஜக திட்டமிடுகிறது. வரலாற்றை மாற்றி எழுதும் வேலைகளை அக்கட்சி தொடங்கிவிட்டது. பாஜக-வின் கிளை அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்றவை சமூகத்தின் சிறுபான்மையினர் மீது பயங்கரமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கின்றன.

ஆக, 25 ஆண்டுகள் கழித்தும் நாம் ஜனநாயகத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதுடன் அந்தச் சவாலைப் புறக்கணித்துவிடவும் முடியாது. அது இன்று மறைமுகமாக முற்றுகையிடப்பட்டிருக்கிறது. ‘நிலையான கண்காணிப்பே விடுதலைக்குக் கொடுக்கும் விலை’ என்று அமெரிக்கப் புரட்சியாளர் பேட்ரிக் ஹென்றி கூறியிருக்கிறார். எனவே, நம்மில் யாரெல்லாம் எதிர்த்து நிற்க முடியுமோ அவர்கள் அதை இப்போதே செய்ய வேண்டும். இதுதான் நெருக்கடி நிலையின் பாடம்.

அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார். அதை இந்திரா ஏற்றுக் கொண்டார். உண்மையில், 20 மாதங்கள் அமலில் இருந்த நெருக்கடி நிலையின்போது பெரும்பாலான சமயங்களில் பரோலில் வெளியில் வந்தார் வாஜ்பாய். அரசுக்கு எதிரான எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கப்போவதில்லை என்று எழுத்துபூர்வமாக இந்திரா காந்திக்கு அவர் உறுதியளித்திருந்தார்.

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

2000-ல் நெருக்கடி நிலையின் 25-வது ஆண்டு நிறைவடைந்தபோது, பாஜக-வின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்து 13.06.2000-ல் ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழில் சுப்பிரமணியன் சுவாமி எழுதிய கட்டுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x