Published : 30 Jul 2015 10:22 AM
Last Updated : 30 Jul 2015 10:22 AM

நீரின்றி அமையாது உலகு...

‘பாலாறு என்பது வெறும் நதி அல்ல… அது மானுடம் தழைக்கக் கிடைத்த மா வரம்’ என்ற கூற்று எல்லா ஆறுகளுக்கும் நதிகளுக்கும் பொருந்தும். தமிழகத்தில் ஒரு காலத்தில் பெருக்கெடுத்து ஓடிய அத்தனை ஆறுகளும் நதிகளும் புதர் மண்டி, சட்ட விரோதச் செயல்களின் புகலிடங்களாக உள்ளன.

முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் மதுரையில் வைகை ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் கரைகளை உயர்த்தி, அதே கரைகளைச் சாலைகளாக்கினார். இப்போது கழிவுநீர்தான் இன்னும் வைகையில் கரைபுரள்கிறது.

திருநெல்வேலி தாமிரபரணியைப் பொறுத்தவரையில் அதன் சிறப்பே வருடம் முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதுதான். இருப்பினும் இயற்கை அள்ளித் தரும் கொடையை இப்பகுதி மக்கள் முழுவதுமாகப் பயன்படுத்த இயலாத சூழ்நிலையில்தான்

தாமிரபரணி உள்ளது. இந்த ஆற்றின் ஆரம்பமான பாபநாசம் பகுதியிலிருந்து கடலில் கலக்கும் புன்னக்காயல் என்ற ஊர் வரை ஆற்றின் கரைகளை மேம்படுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுத்தப்படுத்தினால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் தண்ணீர் பஞ்சமே வராது.

- அ. பட்டவராயன்,திருச்செந்தூர்.

***

நாமே காரணம்

தமிழகத்தின் பல நீர்நிலைகள் வறண்டும், காணாமல் போனதற்கும் நமது ஆக்கிரமிப்புகளே காரணம். மன்னர்கள் காலத்தில் முறையாகத் திட்டமிட்டு கால்வாய்கள், குளங்கள், நீர்ப்பிடிப்பணைகள் மற்றும் நீரோடைகளைக் கட்டமைத்துத் தந்தனர்.

காலமாற்றத்தில் நகர்ப்புறமயத்தால் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப் பல நீர்நிலைகள் சமாதியாக்கப்பட்டன.

நீர்நிலைகள் அழிக்கப்பட்டதால் மரங்கள் மற்றும் பறவையினங்கள் அழிந்தன. அதிகாரவர்க்கமும் அதிகாரவர்க்கத்தின் துணையோடு பலமுள்ளவர்களும் ஆக்கிரமிப்பு செய்தனர். துணிந்தவர்களுக்குத் தோள்கொடுக்க இயலாத நிலையில் நாம் நின்றோம்.

இன்று அதற்குரிய பயனை அனுபவிக்கிறோம். ஆக, இவை அனைத்துக்கும் நாமே காரணம்.

- கி. ரெங்கராஜன்,திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x