Published : 05 Sep 2019 09:59 AM
Last Updated : 05 Sep 2019 09:59 AM

இணையகளம்: தங்கம் வென்ற இளவேனில் யாரைக் குறி வைத்தார்?

கோவி லெனின்

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றிருப்பதற்குப் பாராட்டுகள் குவிந்தபடி இருக்கின்றன. தமிழ்ப் பெண் தங்கம் வென்றார் என்றதுமே, தமிழ் ஊடகங்களில் ‘இளவேனில் வளரிவான்’ சாதனை என்றும், ‘இளவேனில் வலரிவான் வெற்றி’ என்றும் பிரேக்கிங் நியூஸ் வெளியிட்டன. தங்கத்துக்காக மட்டுமின்றி, தமிழ்ப் பெயருக்காகவும் ‘வளரிவா’னை வானளாவப் புகழ்ந்தனர்.

இளவேனில் என்ற பெயருடன் சேர்ந்திருக்கும் அந்த வளரிவானுக்கு என்ன அர்த்தம் என்று யோசிப்பதற்கு மட்டும் நமக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. இருந்திருந்தால் அது வாலறிவன் என்று எளிதாகப் புரிந்திருக்கும். தங்கிலீஷுக்குப் பழக்கப்பட்டுவிட்ட நமது தலைமுறை ‘மொழிபெயர்த்ததன்’ விளைவு இது. ‘V’க்குப் பக்கத்தில் ’aa’ என இரண்டு முறை எழுதியிருந்தால் ஒருவேளை புரிந்துகொண்டிருப்போமோ என்னவோ! ஆனால், மொழிக்கு மொழி எழுத்துகளைக் கையாளுவதில் வேறுபாடுகள் இருப்பது இயல்பு.

தேர்தல்களில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெற்றி பெற்றபோதெல்லாம் தொலைக்காட்சி-வானொலி ஆங்கிலச் செய்திகளில் அன்ப‘சகன்’ வெற்றி என்றே அறிவித்துவந்தார்கள். ழ என்கிற எழுத்து தமிழில் விசேஷ எழுத்து என்பதால், ஆங்கிலத்தில் எழுதுகையில், அன்பழகன் என்ற பெயரை ‘Anbazhagan என்று நாம் எழுதுவது வழக்கம். ஆனால், ழ என்ற உச்சரிப்பையே அறியாத வடமாநில ஆங்கில ஊடகங்கள் ‘ழகன்’ என்பதை ‘சகன்’ என்றே உச்சரிப்பது பழக்கம். அதுபோலத்தான், Valarivan என ஆங்கிலத்தில் உள்ள வார்த்தையைத் தமிழ்ப்படுத்த முனைந்த நம்மில் பலர், அது தமிழ்ச் சொல்தான் என்பதை உணரவில்லை. ‘அகர முதல எழுத்தெல்லாம்’ எனத் தொடங்கும் முதல் திருக்குறளை அறிந்த பலருக்கு, அடுத்த திருக்குறள் என்ன என்று தெரியாததால், வாலறிவன் என்ற வார்த்தையை யோசிக்க முடியவில்லை. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள இரண்டாவது திருக்குறளில் வள்ளுவர் வாலறிவன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அதுதான், தங்க மங்கை இளவேனிலின் பெயருடன் இணைந்திருக்கிறது. தமிழில் பெயர் சூட்டுவது அரிதாகிவிட்டது என்பதைவிட, நமக்கு இப்போது அது ஏன் தாழ்வாகவும் தெரிகிறது என்பதுதான் நாம் முக்கியமாகக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. குழந்தை பிறந்த நேரம், நட்சத்திரம் இவற்றுக்கேற்ப ஜாதகம் மற்றும் எண் ஜோதிடப்படி பெயர் வைப்பதையே பலரும் விரும்புகிறார்கள். ‘ஷ’ என்ற எழுத்தில் தொடங்குற மாதிரி ஒரு தமிழ்ப் பெயர் சொல்லுங்க என்கிறார்கள். அந்த எழுத்தே தமிழ் இல்லை என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் நமக்குத் தமிழ் மறந்து போய்விடும்போல இருக்கிறது.

இணையத்தில் அழகான தமிழ்ப் பெயர்களைத் தேடினால் நச்சினார்க்கினியன், வண்டார்குழலி, கோப்பெருந்தேவி, கிள்ளிவளவன் என தூய தமிழ்ப் பெயர்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அவை இந்தக் காலத்துக்குப் பொருந்தவில்லை என்றும், இந்தப் பெயர்களை வைத்தால், குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் வயதில் சக மாணவர்கள் கேலிசெய்வார்கள் என்றும் கூறி, புறந்தள்ளுவது நம்முடைய தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடே அன்றி வேறில்லை. முகில், நிலா, கதிர், தென்றல், மகிழன் என்றெல்லாம் தமிழ்ப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுபவர்கள் அரிதாக இருக்கிறார்கள்.

தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவது ஒரு பண்பாட்டுப் புரட்சியாக இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கிறது. திராவிட இயக்கத் தலைவர்களிடம் குழந்தைகளைக் கொடுத்து பெயர் வைக்கச் சொன்னால் கதிரவன், மாமல்லன், கரிகாலன், பூங்கொடி, மாதவி என தமிழ்ப் பெயர்களையே சூட்டினார்கள். பெரியாரிய அமைப்புகளில் தமிழ்ப் பெயர் அல்லது தலைவர்களின் பெயர் சூட்டுவது இன்றும் தொடர்கிறது. ஆனால், திமுகவும் அதிமுகவும் பாதையிலிருந்து விலகிவிட்டன. அன்பில் தர்மலிங்கம், பொய்யாமொழி, மகேஷ் என்று ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறையினரையும் ஒரே கட்சி தனக்குள் தக்கவைத்துக்கொண்டாலும், கட்சியினரின் போக்கில் மாற்றம் எப்படி நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு பொய்யாமொழி என்கிற பெயருக்கும் மகேஷ் என்கிற பெயருக்கும் இடையிலான வேறுபாடு ஒரு உதாரணம்.

சமகாலத்தில், தமிழில் பெயர் சூட்டுவதை ஒரு இயக்கமாக முன்னெடுப்பதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னணியில் நிற்கிறது. தன்னுடைய தந்தையின் பெயரையே தமிழ்ப்படுத்தியவர் தொல்.திருமாவளவன். நாம் தமிழர் கட்சி, மே 17 போன்ற அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் மத்தியிலும் தமிழில் பெயர் சூட்டும் கலாச்சாரம் மேலோங்கிவருகிறது. ஆனால், பெரும் இயக்கங்களான திமுக, அதிமுக இரண்டும் இதனைக் கையில் எடுக்க வேண்டும். அதைத் தாண்டி, நம் தாய்மொழியில் பெயர் சூட்டுதலே நம்முடைய அடையாளம், பெருமை என்ற உணர்வு தமிழர்கள் அத்தனை பேரிடத்திலும் வேண்டும். அதேபோல, காலத்துக்கேற்ற தமிழ்ப் பெயர்களை உருவாக்கித் தரவேண்டிய பொறுப்பு தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இருக்கிறது.

தமிழ்நாட்டின் தெருக்களில் தமிழ்தான் இல்லை என அன்று கவலைப்பட்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இன்று, தமிழர்களுக்கு தமிழ்ப் பெயரும் இல்லை, தமிழ்ப் பெயர்களை உச்சரிக்கவும் தெரியவில்லை என்கிற நிலையில் இருக்கிற நம்மை நோக்கித்தான் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவனின் துப்பாக்கி குறி வைக்கிறதோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x