Published : 04 Sep 2019 09:22 AM
Last Updated : 04 Sep 2019 09:22 AM

இந்தியக் குடிமைப் பணியா?  இந்தி குடிமைப் பணியா? 

செ.இளவேனில்

இந்தியக் குடிமைப் பணிக்கான முதனிலைத் தேர்வில் ‘சிசாட்’ என்ற திறனறிவுத் தாள் விரைவில் நீக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது. கூடவே, தற்போது பின்பற்றப்பட்டுவரும் நேர்முகத் தேர்வை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக ராணுவத் தேர்வுகளைப் போல உளவியல் சோதனையை நடத்தினால் போதுமானது என்று சங்கப் பரிவாரங்கள் கூறிவருவதும், அரசு அது நோக்கி நகர்வதற்கான சாத்தியங்கள் பேசப்படுவதும்தான் கடும் அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன.

முன்னதாக, ‘சிசாட்’ கொண்டுவரப்படும்போது, ‘தர்க்கரீதியான கேள்விகளுக்கு விரைவாகப் பதிலளிக்கும் திறனையும், ஆங்கிலப் பத்தி களைப் பொருள் புரிந்துகொள்ளும் திறனையும் மையப்படுத்தியே ‘சிசாட்’ அமையும்’ என்று சொல்லப்பட்டது. ஆனால், கணிதச் சூத்திரங்களின் அடிப்படையிலும், தொடர்ச்சியான பயிற்சியில்லாதவர்கள் விடையளிக்க முடியாத வகையிலுமே வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே, கிராமப்புற மாணவர்கள் குடிமைப் பணி தேர்வுகளை எழுதுவதற்கு ‘சிசாட்’ தேர்வு ஒரு பெரும் தடையாக நிற்கிறது; கூடவே இத்தேர்வு அறிமுகமான பின் கலை மற்றும் அறிவியல் துறை மாணவர்களின் வெற்றி விகிதம் வெகுவாகக் குறைந்துவருகிறது.

2011-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிசாட்’ தேர்வானது மதிப்பெண்களின் அடிப்படையில் முதன்மைத் தேர்வு எழுதுவதற்கான தகுதியைத் தீர்மானித்தது. இத்தேர்வுக்கு எழுந்த கடுமையான எதிர்ப்புகளை அடுத்து 2015-ல் அது வெறும் தகுதி பெறும் தேர்வாக மாற்றியமைக்கப்பட்டது. தற்போது ‘சிசாட்’ தாளில் 33% மதிப்பெண்கள் எடுத்தால் போதும் என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தாலும், முதனிலைத் தேர்வில் தவறான விடைகளுக்கு ‘நெகடிவ்’ மதிப்பெண்கள் உண்டு என்பதால், பொது அறிவுத் தாளோடு இந்தத் தேர்வுக்கும் சேர்த்தே மாணவர்கள் தங்களைத் தீவிரமாகத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆக, ‘சிசாட்’ தேர்வு நீக்கப்பட வேண்டும் என்ற குரல்களை நாம் நியாயமற்ற குரல்களாகப் பார்க்க முடியாது. இப்படி ‘சிசாட்’ தேர்வு நீக்கப்பட வேண்டும் என்கிற குரல்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்புகளில் ‘சிக்ஷ சன்ஸ்கிருதி உத்தான் நியாஸ்’ என்பதும் ஒன்று. போட்டித் தேர்வுகள் குறித்து அரசுக்கு ஆலோசனை அளிக்கும் அமைப்புகளில் ஒன்று இது. “திறனறித் தேர்வான ‘சிசாட்’ நீக்கப்பட வேண்டும்” என்பதற்கு இது சொல்லும் காரணம் என்ன தெரியுமா? குடிமைப் பணித் தேர்வுகளில் வெல்பவர்களில் 90% பேர் ஆங்கில வழியில் படித்தவர்களாக இருக்கிறார்கள், இந்தி வழிக் கல்வியில் படித்தவர்கள் வெல்ல முடியவில்லை என்பதால் ‘சிசாட்’ முறை நீக்கப்பட வேண்டும்.”

சமீபத்தில் ‘சிசாட் முறையை நீக்கலாம்’ என்று யூபிஎஸ்சி அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துவிட்டது. அடுத்து, “பொது அறிவு, திறனறித் தேர்வு (சிசாட்) என்ற இரண்டு தாள்களைக் கொண்ட தற்போதைய முதனிலைத் தேர்வுக்கு மாற்றாக ராஜஸ்தான் மாநிலத் தேர்வாணைய மாதிரியைப் போல அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கிய 150 கேள்விகள் கொண்ட பொது அறிவுத் தாளைப் பரிந்துரைக்கிறது ‘சிக்ஷ சன்ஸ்கிருதி உத்தான் நியாஸ்’ அமைப்பு. இதில் பிரச்சினை இல்லை; அடுத்து அது முன்வைக்கும் பரிந்துரைதான் மோசமானது. நேர்முகத் தேர்வு முறைக்கு மாற்றாக ராணுவத் தேர்வுகளைப் போல உளவியல் சோதனைகளை நடத்தினால் போதுமானது என்கிறது. இந்தப் பரிந்துரையானது போட்டித் தேர்வு வட்டாரங்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேர்முகத் தேர்வில் மாற்றமா?

உலகின் வெற்றிகரமான அதிகார நிர்வாக அமைப்புகளில் ஒன்றாகவும், ‘இந்தியக் குடிமைப் பணி’ திகழ அது இதுநாள்வரை பின்பற்றிவரும் நம்பகமான தேர்வுமுறையே காரணம். அதில் நிகழ்த்தப்படும் தலைகீழ் மாற்றங்கள் பாரதூர விளைவுகளை உண்டாக்கும்.

குடிமைப் பணித் தேர்வுகளைப் பொறுத்தவரை, நேர்முகத் தேர்வில் ஒரு மாணவர் பெறுகிற மதிப்பெண்தான் அவரது பணியைத் தீர்மானிக்கிறது. ஒரு சில தேர்வாளர் குழுக்கள் மதிப்பெண் அளிப்பதில் சிக்கனத்தைக் கடைபிடிக்கலாம். சில தேர்வாளர் குழுக்கள் தாராளம் காட்டலாம். எனினும், நிச்சயமாக இதுவரையில் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இந்த நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. நேர்முகத் தேர்வில் இடம்பெறும் தேர்வாளர்கள் யார் யார் என்ற விவரம் ஒரு மணி நேரத்துக்கும் முன்னதாகத்தான் தேர்ளர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. குடிமைப் பணித் தேர்வுகளின் நம்பகத்தன்மை என்பது அடிப்படையில் அதன் நேர்முகத் தேர்வில்தான் அடங்கியிருக்கிறது. அதில் மாற்றங்கள் செய்வது என்பது தேர்வு நடைமுறைகளில் தீவிர மனச்சாய்வுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதாகவே அமையும். மேலும், உளவியல் தேர்வு என்பது சித்தாந்த அடிப்படையில் தேர்வர்களைப் பிரித்தறிந்து கையாளவும் வழிவகுக்கும் என்ற அச்சங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இன்னொரு ஆபத்தான பரிந்துரையும் அரசின் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. “இந்தி மாணவர்களின் நலனுக்கேற்ப வினாத்தாள்களை இந்தியில் தயாரித்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும்” என்கிற சங்கப் பரிவாரங்களின் ஆலோனைதான் அது. ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்கும்போது இந்தி மாணவர்கள் விடையளிப்பதற்கு சிரமப்படுகின்றனர் என்பது இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. ஆங்கிலத்திலிருந்து அட்டவணை மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படும்போது எல்லா மொழிகளுமே இதே சிக்கலை எதிர்கொள்கின்றன. இந்தச் சிக்கலுக்கான தீர்வு, மொழிபெயர்ப்பில் கவனம் காட்டப்பட வேண்டும் என்பதே. அதற்கு மாறாக இந்தியில் வினாத்தாள் தயாரித்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால், அதன் பிறகு தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகளில் மொழிபெயர்க்கும்போது இந்தி அல்லாத மற்ற மாணவர்கள் இரட்டிப்பு பாதிப்பை அனுபவிக்க மாட்டார்களா?

குடிமைப் பணித் தேர்வுகள் குறித்த ஆர்எஸ்எஸ் அமைத்த குழு தனது அறிக்கையைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வெளியிட்டது. அந்நிகழ்வில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களோடு தேசிய தேர்வு முகமைத் தலைவர் வினீத் ஜோஷியும் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் டி.பி.சிங்கும் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் மோகன் பாகவத், ஆங்கிலத்தை நிர்வாக மொழியாகப் பயன்படுத்துவதைக் கண்டித்துப் பேசினார். “சீனாவைப் பாருங்கள், இஸ்ரேலைப் பாருங்கள், பிரான்ஸைப் பாருங்கள்; அங்கெல்லாம் உள்ளூர் மொழிகளைத்தானே நிர்வாகத்தில் பயன்படுத்துகிறார்கள்” என்று உதாரணம் காட்டியவர் ஆங்கிலத்துக்கு எதிரான தன்னுடைய பேச்சில் எந்த இடத்திலும் இந்தியை மாற்றாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த இடத்தில் அவர் அமர்த்த விரும்பும் மொழியைப் புரிந்துகொள்ள அரசியல் தெரிந்த ஒருவர் தடுமாற வேண்டியதில்லை.

இந்தியா என்பது எல்லாச் சமூகங்களையும் உள்ளடக்கியது; சொந்த மொழி என்று பேசும்போது இந்தியைத் தவிர ஏனைய மொழிகளை ஏன் சங்கப் பரிவாரங்கள் அந்நியமாகப் பார்க்கின்றன; இந்தி நலன் என்ற பெயரில் ஏனைய மொழிகளையும் மொழியினரையும் ஏன் பின்னுக்குத் தள்ளுகின்றன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x