Published : 04 Sep 2019 09:15 am

Updated : 04 Sep 2019 09:16 am

 

Published : 04 Sep 2019 09:15 AM
Last Updated : 04 Sep 2019 09:16 AM

காந்தியைப் பேசுதல்: காந்தியை உலுக்கிய இரண்டு மரணங்கள்

mahatma-gandhi

ஆசை

“மகாதேவ்... மகாதேவ், எழுந்திரு!” என்று தன் மடியில் கிடந்த மகாதேவ் தேசாயை நோக்கிக் கூக்குரலிட்டார் காந்தி! காந்தியின் தனி உதவியாளர் மகாதேவ் தேசாய் அசைந்துகொடுக்கவில்லை. மகாதேவ் தேசாயின் மூச்சிலும் இதயத் துடிப்பிலும் எந்தச் சலனமுமில்லை. அவருடைய உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். காந்தி உண்மையில் கலங்கித்தான் போனார்.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9-ம் தேதி காந்தியுடன் கைதுசெய்யப்பட்டு, பூனாவில் உள்ள ஆகா கான் மாளிகைக்குக் கொண்டுவந்து சிறைவைக்கப்பட்டவர்களில் மகாதேவ் தேசாயும் ஒருவர். கூடவே, கஸ்தூர்பா காந்தி, பியாரிலால் நய்யார், அவரின் தங்கையும் மருத்துவருமான சுசீலா நய்யார், மீரா பென் ஆகியோரும் ஆகா கான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

மகாதேவ் தேசாயின் மரணம்

ஆகஸ்ட் 15 அன்று காலையில் எப்போதும்போல சீக்கிரம் எழுந்த மகாதேவ் தேசாய், தன் குருவுக்குப் பழச்சாறும் காலை உணவும் தயாரித்தார். அதன் பிறகு, கொஞ்ச நேரம் புத்தகம் படித்தார். அதையடுத்து, காந்தியுடன் காலை நடையில் கலந்துகொண்டார். காலை நடை முடிந்தவுடன் சுசீலா நய்யாரைப் பார்க்கச் சென்றார் காந்தி. சுசீலா நய்யார் காந்திக்கு உடம்பைப் பிடித்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் அங்கு கஸ்தூர்பா அவசர அவசரமாக ஓடிவருகிறார். மகாதேவ் தேசாய் மயங்கி விழுந்துவிட்டதாக மருத்துவர் சுசீலா நய்யாரிடம் கூறினார். சுசீலா நய்யாரும் காந்தியும் உடனே மகாதேவ் தேசாய் இருக்கும் இடத்துக்குச் சென்றனர். விழுந்து கிடந்த மகாதேவ் தேசாயின் தலையைத் தூக்கித் தன் மடிமேல் கிடத்திக்கொண்டார் காந்தி. மகாதேவ் தேசாயைப் பரிசோதித்த சுசீலா நய்யார், மகாதேவ் தேசாய் இறந்துவிட்டார் என்று அறிவித்தார்.

காந்தியுடன் அவர் நிழல்போலவே 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடன் இருந்தவர் மகாதேவ் தேசாய். 1892-ல் பிறந்த மகாதேவ் தேசாய், காந்தியைவிட 22 வயது இளையவர். தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி திரும்பிய 1915-ல்தான் காந்தியை மகாதேவ் சந்திக்கிறார். தான் மொழிபெயர்த்த ஒரு புத்தகத்தின் வெளியீடு குறித்து காந்தியின் கருத்தைக் கேட்பதற்காக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அதற்குப் பிறகு இருவரும் பல முறை சந்தித்துக்கொண்டார்கள். 1917-ல் முழு நேரம் காந்தியுடன் இணைந்துகொண்டார். மகாதேவ் தேசாய் சட்டம் படித்தவர், இலக்கியத்தில் தீவிர வாசிப்பு கொண்டவர், கூர்மையான பார்வை கொண்டவர். அவருக்கு 13 வயதிலேயே துர்காபென்னுடன் திருமணமாகியிருந்தது. 1917-ல் சம்பாரண் போராட்டத்துக்கு காந்தி சென்றபோது மகாதேவ் தேசாயும் துர்காபென்னும் கூடவே சென்று சம்பாரண் மக்களுக்குச் சேவையாற்றினார்கள்.

மகாதேவ் தேசாய் காந்தியின் ஆசிரமத்தில் இணைந்த 1917-ல் தொடங்கி, 1942-ல் தன் இறப்புக்கு முந்தைய நாள் வரை நாட்குறிப்பு எழுதிக்கொண்டுவந்தார். வேறு யாரை விடவும் காந்தியைப் பக்கத்திலிருந்து பார்த்த அனுபவப் பதிவுகள் அவை; காந்தியை நன்கு புரிந்துகொள்வதற்கு உதவக்கூடியவை. அந்த நாட்குறிப்புகளெல்லாம் மகாதேவ் தேசாயின் மரணத்துக்குப் பிறகு 19 தொகுதிகளாக வெளியிடப்பட்டன. மகாதேவ் தேசாய் ஆங்கிலம், குஜராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் நல்ல புலமை வாய்ந்தவர். காந்தியின் ‘சத்திய சோதனை’ குஜராத்தி மொழியில் ‘நவஜீவன்’ இதழில் வெளிவந்துகொண்டிருந்தபோது, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் மகாதேவ் தேசாய்தான். ஆக, உலகப் புகழ்பெற்ற நூலொன்றின் மொழிபெயர்ப்பாளர் மகாதேவ் தேசாய்.
மகாதேவ் தேசாய் மட்டும் இல்லையென்றால், காந்தியின் ஆயுளில் பத்து ஆண்டுகள் குறைந்திருக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காந்திக்காகவும் அதன் மூலம் நாட்டுக்காகவும் உழைத்தவர் மகாதேவ். காந்திக்கு முன்பு எழுந்து காந்திக்குப் பின்பு உறங்கச் செல்பவர். காந்தியின் மிகச் சிறந்த தகவல் தொடர்பு அலுவலராக இருந்து, இந்த உலகத்துக்கு அவரை அறியச் செய்ததில் பெரும் பங்கு மகாதேவ் தேசாய்க்கு இருந்தது. இருவருக்கும் இடையிலான உறவின் வெளிப்பாடுதான் ஆகா கான் மாளிகை வளாகத்தில் காந்தியே மகாதேவ் தேசாய்க்குக் கொள்ளியிட்டது.

கஸ்தூர்பாவின் மரணம்

மகாதேவ் தேசாயின் மரணம் நிகழ்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கஸ்தூர்பாவின் மரணம்.
1943-ன் இறுதிவாக்கில் கஸ்தூர்பாவுக்கு உடல்நலம் குன்றியது. இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. எனினும், ஆங்கிலேய அரசு அவரை விடுதலை செய்யவில்லை. நெருங்கிய உறவினர்கள் வந்து கஸ்தூர்பாவைச் சந்தித்தால், அவரது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதால், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு காந்தி கடிதம் எழுதினார். அதன் விளைவாக தேவதாஸ் காந்தி உள்ளிட்டோர் அடிக்கடி வந்து தன் அன்னையைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.

ஆங்கில மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், இயற்கை மருத்துவர் என்று பலரும் முயன்றுபார்த்தார்கள். எந்த முன்னேற்றமும் இல்லை. இரண்டாம் உலகப் போர் காலகட்டம் என்பதால், பென்சிலின் கிடைப்பது மிகவும் அரிதாகையால், இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க ராணுவத்திடமிருந்து கேட்டுப் பெறப்பட்டது. ஏற்கெனவே கஸ்தூர்பாவின் உடலைப் பல ஊசிகள் துளைத்திருப்பதால் பென்சிலின் ஊசி போடுவதில் காந்திக்கு விருப்பம் இல்லை. அந்த ஊசி போட்டுத்தான் ஆக வேண்டுமா, போட்டால் பிழைப்பாரா என்றெல்லாம் சுசீலா நய்யாரிடம் காந்தி கேட்டார். “உறுதியாகச் சொல்ல முடியாது” என்றதும் ஊசி போடும் முடிவு கைவிடப்பட்டது. பிப்ரவரி 22 அன்று ஆகா கான் மாளிகையில் கஸ்தூர்பா காந்தி உயிர் துறந்தார்.

காந்திக்கும் கஸ்தூர்பாவுக்கும் இடையிலான திருமண உறவு அறுபது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. இந்தியா, ஆப்பிரிக்கா என்று இரண்டு கண்டங்களிலும் தம்பதியராக வாழ்ந்தவர்கள் அவர்கள். கஸ்தூர்பாவுக்குப் படிப்பு வாசனை சிறிதும் கிடையாது என்றாலும், தன் கணவர் மீது அபாரமான நம்பிக்கையும் பக்தியும் இருந்தது. அதே நேரத்தில், காந்தி கூறியதையெல்லாம் செய்வதையெல்லாம் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டவர் அல்ல. சிறார் பருவத்திலேயே இருவருக்கும் திருமணமாகிவிட்டது என்பதால், ஆரம்ப காலத்தில் இருவருக்கும் இடையிலான உறவு சிக்கலாகத்தான் இருந்தது. ஆரம்பத்தில் கஸ்தூர்பாவைத் தன்னுடைய உடைமையாகவும் போகப் பொருளாகவும்தான் காந்தி நினைத்திருந்தார். தென்னாப்பிரிக்கக் காலத்தில்தான் அந்த உறவு மாறுகிறது. அங்கேயும்கூடச் சில சமயம் இரண்டு பேருக்கும் கடுமையான சண்டை ஏற்படுவதுண்டு.

கஸ்தூர்பாவிடம் கற்றுக்கொண்ட பாடம்

ஒருமுறை, தாழ்த்தப்பட்டவரும் தமிழருமான லாரன்ஸ் என்பவர் காந்தியின் குடும்பத்துடன் தங்கியிருந்தார். அவரது சிறுநீர் பாத்திரத்தை எடுக்கும்படி கஸ்தூர்பாவிடம் காந்தி கூற, அதை மறுக்கிறார் கஸ்தூர்பா. உடனே கோபம் கொண்ட காந்தி, இனிமேல் என்னுடன் நீ இருக்க முடியாது என்று கைகளைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் வெளியில் தள்ளினார். எனினும், தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது தான் உருவாக்கிய சத்தியாகிரகப் போராட்டத்துக்கு நதிமூலமாக அவர் தன் மனைவியையே குறிப்பிடுவதுண்டு. “என் ஆதிக்கத்துக்கு எதிர்த்து என் மனைவி செயல்படும் வழிமுறையிலிருந்தே சத்தியாகிரகத்தை நான் கற்றுக்கொண்டேன்” என்பார் காந்தி.

ஆகவேதான் கஸ்தூர்பா, மகாதேவ் தேசாய் இருவரும் காந்திக்கு மட்டுமல்லாமல், தேசத்துக்கும் முக்கியமானவர்களாக ஆகிறார்கள். எனினும், காந்தியை நாம் நினைவுகூரும் அளவுக்கு இந்த இருவரையும் நினைவுகூர்வதில்லை.

(காந்தியைப் பேசுவோம்)

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in


காந்தியைப் பேசுதல்காந்தியை உலுக்கிய இரண்டு மரணங்கள்Mahatma gandhi

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author