Published : 04 Sep 2019 09:13 AM
Last Updated : 04 Sep 2019 09:13 AM

இணையகளம்: எங்கெங்கு காணினும் சூரைமொக்கை இளைஞர் குழாமா? 

செல்வேந்திரன்

அரங்கில் குழுமியிருக்கும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். மொக்கை எனும் தூய தமிழ்ச் சொல்லுக்குக் கூர்மையற்ற எனும் பொருளைக் காட்டுகிறது தமிழகராதி. மொக்கு அல்லது மொண்ணை எனும் சொல்லிலிருந்து மொக்கை எனும் சொல் உருவாகியிருக்கலாம். மொக்கச்சாமியாக வடிவேலு அரிதாரம் ஏற்றதன் வழியாக இச்சொல் தமிழர்களால் மீள்கண்டுபிடிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று ஊகிக்கிறேன். மொக்கை ஃபிகர், மொக்கைப் படம், மொக்கை ஜோக், மொக்கை சாப்பாடு என்று கல்லூரி மாணவர்கள் அன்றாடம் பல தடவை இந்தச் சொல்லை உபயோகிக்கிறார்கள். அவர்களின் உலகில் வாத்தியார் மொக்கை, வகுப்புகள் மொக்கை, நூலகம் மொக்கை, புத்தகங்கள் மொக்கை, பேச்சாளன் மொக்கை, அரசியல் மொக்கை. காணும் யாவையும் மொக்கையென விளிக்கும் உங்களின் கூர்மைதான் என்ன என்பதை அறியும் பொருட்டே இந்த அரங்கில் பல வினாக்களை எழுப்பினேன்.

திராவிடம், இடஒதுக்கீடு, ஹைட்ரோ கார்பன், கீழடி, போக்ஸோ, ஆர்ட்டிக்கிள் 370, தேசிய கல்விக் கொள்கை, ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ், நீர் மேலாண்மை, ஆவாஸ் போஜனா, ஸ்மார்ட் சிட்டி திட்டம், பொருளாதார நெருக்கடி என இந்த அரங்கில் கேட்கப்பட்ட எந்த ஒரு கேள்விக்கும் உங்களிடம் பதிலில்லை. சினிமாவைப் பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் மாய்ந்து பாய்ந்து பதில் சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய எந்தவொரு சமகால விஷயத்திலும் உங்களுக்குப் பிடிமானம் ஏதுமில்லை.

ஐநூறு ரூபாய்க்கு வரைவோலை எடுத்து வா என வங்கிக்கு அனுப்பி வைத்தால், இங்குள்ள பலர் திரும்ப வராமலேயே போய்விட வாய்ப்புள்ளது. ஐந்து செலான்களை எழுதிக் கிழிக்காமல் நம்மால் பஸ் பாஸ் எடுக்க முடியவில்லை. ஆதார் அட்டையில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்த வழியுண்டா என பூங்கா ஜோசியனிடம் விசாரிக்கிறோம். எங்கும் எதிலும் திகைப்பும் தெளிவின்மையும்.
ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு என்னுடைய நேரடி பதில் கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு. ஒரு மொக்கைப் பீஸாகவே வாழ்ந்து முடிந்துபோகாமல் இருப்பதற்கு. ‘ஒரு எழவும் தெரியாது… வந்துட்டான்யா முடியைச் சிலுப்பிக்கிட்டு…’ என அவமானப்பட்டுக் கூசி நிற்காமல் இருப்பதற்கு.

வாசிக்கும் இளைஞரை வழிகாட்டும் தலைவர் என்பேன் நான். நீங்கள் அறிவுறுதிகொண்டவராக இருந்தால் மதிப்புக்குரிய நபராவீர்கள். சமகாலப் பிரச்சினை ஒன்றைப் பற்றி உங்களது கருத்துகளைச் சொல்லுங்கள் என வகுப்பில் ஆசிரியர் உங்களைப் பேசப் பணித்தால், அது எவ்வளவு பெரிய கவுரவம்? உங்கள் நண்பர்கள் வட்டத்திலேயே விஷய ஞானமுள்ளவர் என அறியப்பட்டால் எவ்வளவு பெரிய மரியாதை? உங்கள் சொந்தபந்தங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவெடுக்க சிந்தனைத் தெளிவுடன் வழிகாட்ட முடியும் என்பது எவ்வளவு பெரிய முக்கியத்துவம்? வாசிக்கும் பழக்கம் உள்ளவன் எந்த சபையிலும் தன் தலையைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்க வேண்டியதில்லை. இரண்டாயிரம் பேர் கூடியுள்ள சபைமுன் நின்று ‘கூமுட்டைகளே’ என்று நான் உங்களைக் கூவி அழைக்கும் அதிகாரத்தையும் துணிச்சலையும் எனக்கு எது தந்திருக்கிறது என்று நீங்கள் யோசித்துப்பாருங்கள்.

அச்சமூட்டுகிற வகையில் அறியாமை இருளுக்குள் இருப்பதற்குப் பதிலாக நாளொன்றுக்கு இருபது நிமிடங்கள் நாளிதழ்களை வாசிக்கலாம். லட்சோப லட்சம் மாணவர்கள் பத்திரிகைகளைப் புறக்கணிப்பதன் வழியாக ஒருவகையில் ஜனநாயகத்தின் குரல்வளையை மிதிக்கிறார்கள் என்பேன். தன்னைச் சுற்றி நிகழும் எந்த ஒன்றைப் பற்றியும் ஒன்றும் தெரியாதவர்களாக, இந்தச் சமூகத்தை மேலும் பாதுகாப்பற்ற, வாழ லாயக்கற்ற ஒன்றாக மாற்றுகிறார்கள். தன் உரிமைகளை, தனக்கான சலுகைகளை, வாய்ப்புகளைப் பற்றிய அறிவில்லாதவர்களாகவும், தன் மீது நிகழும் சுரண்டலைப் பற்றிய தெளிவில்லாதவர்களுமாக இருக்கிறார்கள். தன்னை ஒரு ஆளுமையாக முன் வைக்காமல் அஞ்சி நடுங்குபவர்களாக உள்ளனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் அரசுத் திட்டங்களைப் பற்றி கேள்வி கேட்டால், பள்ளி இயக்குநர் முதல் மாணவர்கள் வரை ஒருவருக்கும் ஒன்றாகிலும் தெரியவில்லை. ஓங்கிய வாளுடன் ஓடும் பேருந்தில் தீப்பொறி பறக்க விட்டு காவல்நிலையத்தில் வழுக்கிவிழுகிறார்கள். ஓரொரு இந்தியனும் போற்ற வேண்டிய பாபாசாகேப் அம்பேத்கரின் சிலையைக் காலால் நசுக்கி உடைக்கிறார்கள். தஞ்சாவூர் அரண்மனை ஓவியங்களில் ‘சிந்துஜா சீக்கிரம் வா’ எனக் கிறுக்கி வைக்கிறார்கள். லட்சம் ஆண்டுகள் பழமை கொண்ட பிம்பேத்கா குகை ஓவியங்களை பைக் சாவியால் கீறிப்பார்க்கிறார்கள். மலை முகடுகளில் ஏறி நின்று மனம் பொங்க சூரியோதயம் பார்க்கும் ஆன்மிகத் தருணத்தில் கூச்சலிடுகிறார்கள். அருவிக் கரைகளை பீர் பாட்டில்களால் அலங்கரிக்கிறார்கள். எங்கெங்கு காணினும் சூரை மொக்கை இளைஞர் குழாம்.

கொஞ்சமேனும் வாசிக்கிற வழக்கமுள்ள ஒரேயொருவன் இந்த அவையில் இருந்தால்கூட எழுந்து நின்று என்னோடு சமர்செய்வான். அடுத்த முறையேனும் அப்படி ஒருவனை சந்திக்க விழைகிறேன். நன்றி வணக்கம்.

(சமீபத்தில் ஒரு கல்லூரியில் ஆற்றிய உரையிலிருந்து)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x