Published : 02 Sep 2019 08:57 AM
Last Updated : 02 Sep 2019 08:57 AM

ஏன்? யார்? எப்படி?  - ரிசர்வ் வங்கியின் கையிருப்பு அரசுக்குச் சொந்தமானதா?

செ.இளவேனில்

ரிசர்வ் வங்கி தனது கையிலிருப்பிலிருந்து அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடியை அளிக்க முடிவெடுத்திருக்கிறது. ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையிலான உறவு, ரிசர்வ் வங்கியின் பொறுப்புகளும் பணிகளும், ரிசர்வ் வங்கி பராமரித்துவரும் கையிருப்புகள், அதற்கான நிதியாதாரங்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ரிசர்வ் வங்கியின் கையிருப்புகள் என்னென்ன?

ரிசர்வ் வங்கியானது மூன்று வகையான கையிருப்புக் கணக்குகளைப் பராமரித்துவருகிறது. 1. ரொக்கம் மற்றும் தங்க இருப்பு, 2. அவசரத் தேவைகளுக்கான நிதி, 3. சொத்து மேம்பாட்டு நிதி. இவற்றில் ரொக்கம் மற்றும் தங்க இருப்புதான் ரிசர்வ் வங்கியின் கையிருப்புகளிலேயே மிகவும் அதிகமானது. இக்கையிருப்பின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 2010 தொடங்கி 25% ஆக அதிகரித்துவருகிறது. 2017-18 நிதியாண்டில் ரொக்கம் மற்றும் தங்க இருப்பில் உள்ள அந்நியச் செலாவணி மற்றும் தங்கத்தின் மதிப்பு ரூ. 6.91 லட்சம் கோடியாகும். அவசர காலத் தேவைகளுக்கான நிதி, ரிசர்வ் வங்கியின் இரண்டாவது பெரிய கையிருப்பாகும். அந்நியச் செலாவணி நெருக்கடிகளின்போதும் பணவியல் கொள்கை முடிவுகளால் ஏற்படும் நெருக்கடிகளின்போதும் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகும். 2017-18 ஆண்டில் இந்நிதியின் கையிருப்பு ரூ.2.32 லட்சம் கோடி. இவ்விரண்டு நிதிகளோடு ஒப்பிடும்போது சொத்து மேம்பாட்டு நிதியின் அளவும் பங்கும் மிகமிகக் குறைவானதாகும்.

ரிசர்வ் வங்கியை அரசின் வங்கி என்று அழைக்கிறார்களே ஏன்?

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934-ன் கீழ், 1935-ல் தனியார் வங்கியாகத் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, வங்கிப் பணிகள் தவிர, கூடுதலாக இரண்டு பொறுப்புகளையும் வகித்தது. 1. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது. 2. அரசின் வங்கியாகச் செயல்படுவது. 1949-ல் ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது. அதன்பின் வழக்கமான வணிக வங்கியைப் போலன்றி, இந்தியாவின் மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி செயல்பட ஆரம்பித்தது. ஒரு ரூபாய் தவிர, மற்ற பணத் தாள்களையும் நாணயங்களையும் அச்சடித்து விநியோகிக்கும் முகமையாகவும் இந்திய அரசின் வங்கியாகவும் வங்கிகளின் வங்கியாகவும் கடன் கட்டுப்பாட்டாளராகவும் பணவியல் கொள்கையை வகுக்கும் அமைப்பாகவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகவும் இந்திய ரூபாயின் மாற்றுச் செலாவணி மதிப்பை நிலைப்படுத்தும் அமைப்பாகவும் அது செயல்பட்டுவருகிறது. மேலும் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பராமரித்துவருவதோடு, பன்னாட்டுச் செலாவணி நிதியத்தில் இந்திய அரசின் வங்கியாகவும் பொறுப்பு வகிக்கிறது. தவிர, இந்தியத் தொழில்துறை மேம்பாட்டு வங்கி, இந்திய சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி, நபார்டு ஆகிய வங்கிகளை நிறுவி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் முக்கியப் பங்காற்றிவருகிறது.

ரிசர்வ் வங்கியின் கையிருப்புக்கு வரம்பு உண்டா?

ரிசர்வ் வங்கி தன்னுடைய கையிருப்பில் உள்ள நிதிகளில் எவ்வளவு தொகையைப் பராமரித்துவர வேண்டும் என்பது பற்றி எந்த விதிகளும் இல்லை. மொத்த சொத்துக்களில் 14% நிரந்தரக் கையிருப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உலகளாவிய நடைமுறையாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. இந்தியாவில் தற்போது நிரந்தரக் கையிருப்பு, ரிசர்வ் வங்கியின் மொத்த சொத்து மதிப்பில் 28% என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கையிருப்பை மத்திய அரசு தனது தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளலாமா?

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசு கேட்டுப் பெறலாம். இது குறித்து முடிவெடுக்கவே மத்திய அரசு 2018 நவம்பரில் முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவர் விமல் ஜலான் தலைமையில் வல்லுநர் குழுவை நியமித்தது. அவசரத் தேவைகளுக்கான நிதிக்கான கையிருப்பு ரிசர்வ் வங்கியின் மொத்த சொத்து மதிப்பில் 5.5-6.5% இருந்தால் போதுமானது, இந்திய ரிசர்வ் வங்கியில் இது 6.8% ஆக இருக்கிறது. கட்டாயக் கையிருப்புத் தேவை 5.5% எனக் கொண்டால் உபரி ரூ. 52,637 கோடி. இதுபோல ரிசர்வ் வங்கியின் ரொக்கம் மற்றும் தங்கக் கையிருப்புக்கு ஆதாரமான மூலதன நிதியானது மொத்த சொத்து மதிப்பில் 20-24.5% ஆக இருந்தால் போதும் என்றும் விமல் ஜலான் குழு பரிந்துரை செய்திருக்கிறது. ஜூன் 2019-ல் இக்கையிருப்பு 23.3% ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து பராமரித்துவந்தாலே போதுமானது, மேற்கொண்டு அதன் அளவை அதிகரிக்கத் தேவையில்லை என்றும் தற்போது உபரியாக உள்ள ரிசர்வ் வங்கியின் வருவாய் ரூ. 1,23,414 கோடி மத்திய அரசுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. மேற்கண்ட இரு நிதிகளின் கூட்டுத் தொகையே ரூ.1.76 லட்சம் கோடியாகும். இதில் ஏற்கெனவே ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளிப்பதாகக் கூறியிருந்த பங்கு ஈவுத்தொகையான ரூ.28,000 கோடியும் இதில் உள்ளடக்கம். விமல் ஜலான் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு அளிக்கிறது. ஆனால், இவ்வாறு உபரி நிதியை அளிப்பது ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் தலையிடுவது என்றும் மத்திய வங்கியின் களஞ்சியத்தை முற்றுகையிடும் முயற்சி என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைத் தலைவர் விரால் ஆச்சார்யா விமர்சனம் செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x