Published : 23 Aug 2019 09:48 AM
Last Updated : 23 Aug 2019 09:48 AM

விசாரணையின் தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் 

அற்புதம்மாள்

நான் கல்விரீதியாகச் சட்டம் பயின்றவள் இல்லை. ஆனால், சட்டத்தை வாழ்க்கைப் பாடமாகக் கற்கும் சூழலைக் காலம் எனக்கு வழங்கியிருக்கிறது. கடந்த 28 ஆண்டுகளாகவே என் மகன் நிரபராதி என்று நான் உறுதியாகச் சொல்லிவருகிறேன். அதை ஏற்போரும் உண்டு. மறுப்போரும் உண்டு. மறுப்போர், “உச்ச நீதிமன்றமே உன் மகனைக் குற்றவாளி என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டது. அவனுக்கு அத்தனை வாய்ப்புகள் வழங்கப்பட்டும், அதில் அவன் தோற்றுவிட்டான். எனவே, உனது மகன் குற்றவாளிதான். நிரபராதி என்று குரல் எழுப்ப உனக்கு எந்த அருகதையும் இல்லை” என்கின்றனர்.

ராஜீவ் கொலை வழக்கில் மே 22, 1991 அன்று இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டங்களின் கீழ் மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. திடீரென அதில் தடா சட்டப் பிரிவினரைச் சேர்த்தனர். அதன் காரணமாக, வழக்கமான நீதிமன்ற விசாரணை நடைமுறைகள் இவ்வழக்கில் பின்பற்றப்படவில்லை. தடா சட்டம் பறித்த அடிப்படை உரிமைகளில் ஒன்று, உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு வாய்ப்பு.

தண்டிக்கப்பட்டது தடாவில் அல்ல

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.டி.தாமஸ், டி.பி.வாத்வா, எஸ்.எஸ்.முகமது காத்ரி ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு விசாரித்து மே 11, 1999 அன்று தீர்ப்பு வழங்கியது. ‘தடா எனும் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1987-ன் கீழ் எந்தக் குற்றமும் இவ்வழக்கில் நடக்கவில்லை’ என்று சொல்லி, மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரையும் அச்சட்டத்திலிருந்து விடுவித்த நீதிபதிகள், இந்திய தண்டனை சட்டப் பிரிவான கொலைச் சதிக் குற்றத்திலிருந்து 19 பேரை விடுவித்து, 7 பேரைத் தண்டித்தனர். அந்த ஏழு பேரில் என் மகனும் ஒருவன். ஆக, என் மகன் உட்பட ஏழு பேரும் தண்டனை பெற்றது இந்திய தண்டனை சட்டப் பிரிவில்தானே தவிர, பயங்கரவாத வழக்கில் அல்ல.

இவ்வழக்கை தடாவிலிருந்து விடுவித்தபோதும், அதில் ஒரு பிரிவை மட்டும் ஏற்றுக்கொண்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அளித்ததாகப் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இது தவறான சட்ட நிலைப்பாடு என்று முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் டிசம்பர் 12, 2017 அன்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் பேட்டியளித்திருந்தார்.

அரசமைப்புச் சட்டக் கூறு 137-ன்படி, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரும் வாய்ப்பு ஒன்றுள்ளது. சீராய்வு மனுவிலும் தவறு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்பதைப் பற்றி விவாதிக்கவில்லை. நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி சீராய்வு மனுவுடன் அனைத்துச் சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துவிடுகின்றன. “உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது; ஆனால், அது குறையற்றது அன்று” என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் பணி ஓய்வுபெற்ற மறுநாள் ஊடகத்தில் பேட்டியளித்தார். குற்றமற்ற ஒருவரின் உயிரும் வாழ்வும் பிழையான விசாரணை முறையின் தவறுகளால் சிக்கலுக்கு ஆளாகலாமா?

‘கருணை மனு’க்கள் மீது முடிவெடுக்கும்போது, இறுதியாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மாறாகக் குற்றத்தன்மை குறித்து ஆராய்ந்து மாறுபட்ட முடிவுக்கு வர குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு என கெகர் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர் கருணை மனு என்பது, செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரும் மனு என்பதாக மட்டுமே அதுவரை இருந்துவந்த சட்ட நிலைப்பாடு அன்று முதல் தகர்க்கப்பட்டது. விசாரணை நடைமுறைகளில் பிழைகள் இருப்பின் அதைச் சுட்டிக்காட்டி, நிரபராதி என நிறுவ வழிவகை உண்டு என்றானது. அந்த அடிப்படையில்தான் என் மகன் பேரறிவாளன், ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு மரண தண்டனையின்போது மனுக்கள் அளித்தான். அவை ஏற்கப்படாமல் நிராகரிக்கப்பட்டன.

குடியரசுத் தலைவருக்கு எனது மகன் அளித்த கருணை மனு நிராகரிக்கப்பட்டு செப்டம்பர் 9, 2011 அன்று தூக்கிலிட நாளும் குறிக்கப்பட்டது. மனு மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்ட 11 ஆண்டுகள் 8 மாதம் என்ற நீண்ட காலதாமதத்தின் அடிப்படையில் தனது தண்டனையைக் குறைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தான். பின்னர், 2012-ல் அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில் நேர்ந்த தவறு

இந்நிலையில், என் மகனைக் குற்றவாளியாக முடிவுசெய்வதற்கு ஆதாரமாக இருந்த அவனது ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த அதிகாரி தியாகராஜன், தான் செய்த தவறைச் சரிசெய்ய முயன்றார். நீதிமன்றம் சென்று வாக்குமூலம் அளிக்கவும் தயாரானார். பிப்ரவரி 18, 2014 அன்று பேரறிவாளனுக்கும் மற்ற இருவருக்கும் மரணதண்டனையை ஆயுளாகக் குறைத்து, உரிய அரசு விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். அதற்கு அடுத்த நாளே அதாவது, பிப்ரவரி 19, 2014 அன்று முதல்வர் ஜெயலலிதா, எழுவரையும் விடுதலைசெய்யத் தீர்மானித்து, குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 435(1)ன்படி மத்திய அரசின் ஆலோசனை வேண்டி கடிதம் எழுதினார். இந்த முடிவுகளில் தியாகராஜனின் வெளிப்படையான வாக்குமூலம் பேருதவி புரிந்தது.

ஆனாலும், சீராய்வு மனுவை எனது மகன் 1999-லேயே தொடர்ந்துவிட்டதால் நீதிமன்றம் வழியே தீர்வுகாண எந்த வாய்ப்பும் இல்லாமல்போனது. ராஜீவ் கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்து விசாரணையை மேற்கொண்டுவரும் மத்தியப் புலனாய்வுத் துறையின் பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் விசாரணை முடிவு தெரியும் வரையில், தியாகராஜனின் அபிடவிட்டின் அடிப்படையில் தண்டனையை இடைநிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. தியாகராஜன் தாக்கல் செய்த வாக்குமூலத்தை ஏற்றபோதிலும் 1999 தீர்ப்பைத் திரும்பப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது என்றிருந்த நிலையில், மார்ச் 5, 2019 அன்று ஷிண்டே வழக்கில் தனது தீர்ப்பையே மாற்றி எழுதி, ஆறு மரண தண்டனைக் கைதிகளை 16 ஆண்டுகளுக்குப் பிறகு, நிரபராதி என விடுவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டனர் என்று ஏ.கே.சிக்ரி, எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர்.ஷா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த முன்னோடித் தீர்ப்பை அளித்திருக்கிறது. விசாரணை நடைமுறைகளில் பிழைகள் நேர வாய்ப்புள்ள இந்திய நீதித் துறையில் ஒரு புதிய திருப்பத்தைத் தந்திருக்கிறது அந்த முன்னோடித் தீர்ப்பு. இனியாவது என் மகன் பேரறிவாளனைப் போன்றவர்களின் தொடர் முறையீட்டுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்குமா? உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டுக்கு மேலும் ஒரு வழி பிறக்குமா? தமிழ்மக்கள்தான் என்னோடு சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x