Published : 19 Aug 2019 09:42 AM
Last Updated : 19 Aug 2019 09:42 AM

சிக்கிம் காட்சி மாற்றங்கள் ஜனநாயகத்துக்கு அவமரியாதை

சிக்கிம் சட்டமன்றத் தேர்தல் நடந்து மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், ‘சிக்கிம் ஜனநாயக முன்னணி'யின் (எஸ்டிஎஃப்) சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரை பாஜக தன் பக்கம் தூக்கியிருக்கிறது. தொடர்ந்து, ஆளும் ‘சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா' (எஸ்கேஎம்) தன் பங்குக்கு அதே கட்சியைச் சேர்ந்த மேலும் இரு உறுப்பினர்களைத் தன் பக்கம் தூக்கியிருக்கிறது. ஆக, அதிகார வேட்கை எல்லோரையும் பிடித்தாட்ட மூன்று மாதங்களுக்குள் அரசியல் குழப்பச் சூழலுக்கு ஆளாகியிருக்கிறது சிக்கிம்.

32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டமன்றத்தில் 25 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி. நாட்டிலேயே அதிகமான காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமைக்குரியவர் அக்கட்சியின் தலைவர் பவன்குமார் சாம்லிங். இந்தத் தேர்தலிலும் 47.63% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் அது வந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 17 தொகுதிகளை அக்கட்சியால் பெற முடியவில்லை. அது வென்ற 15 தொகுதிகளில் இரு தொகுதிகள், ஒரே நபர்கள் இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தொகுதிகள். ஆகையால், 13 இடங்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக அது அமர்ந்தது. ஆனால், சமீபத்திய கட்சித் தாவல்கள் அதன் 12 உறுப்பினர்களை அக்கட்சியிடமிருந்து பறித்துவிட்ட நிலையில், இன்றைக்கு அதன் ஒரே உறுப்பினராக முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் மட்டும் எஞ்சியிருக்கிறார். தேர்தலில் ஒரு இடத்தையும் வென்றிடாத, வெறும் 1.6% வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜக பிரதான எதிர்க்கட்சியாக மாறியிருக்கிறது.

ஆளுங்கட்சியான ‘சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா'வுக்கு இப்போதைக்குப் பெரும்பான்மை இருந்தாலும், முதல்வராக இருக்கும் பி.எஸ்.கோலாய் என்கிற பிரேம் சிங் தமாங், சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்கிறார். ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, 2016-ல் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, 2018 ஆகஸ்ட் வரை சிறையில் இருந்த அவர், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமலேயே நேரடியாக முதல்வர் ஆகிவிட்டார். 2001-ல் தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றபோது, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக இருக்கிறது பிரேம் சிங் தமாங்கின் செயல்பாடு. ஆக, எந்த நேரத்திலும் பாஜக அங்கு இன்னொரு காட்சி மாற்றத்தை உண்டாக்கி, ஆளுங்கட்சியாக உருவெடுக்கலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

முதல்வர் பிரேம் சிங் தமாங்கின் இத்தகு அணுகுமுறை மோசம் என்றால், அதையே பகடைக்காயாக்கித் தனக்கு மக்கள் செல்வாக்கே இல்லாத ஒரு மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முற்படும் பாஜகவின் அணுமுறை மேலும் மோசம். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற எதையும் செய்யலாம் என்பதைத் தவிர, இது வெளிப்படுத்துவது ஏதுமில்லை. மேலதிகம், இன்று நடைமுறையில் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் போதாமையையும் இது நமக்குச் சுட்டுகிறது. இனக் குழுக்களின் போட்டியும் பிரிவினைவாதத் தீப்பொறிகளும் பறக்கும் வடகிழக்கு மாநிலங்கள் அரசியலமைதிச் சூழல் நோக்கி நகர அங்கு நிலவிய ஜனநாயகச் சூழலும் அது உருவாக்கிய அதிகாரப்பகிர்வுமே முக்கியக் காரணம். இந்தியக் கூட்டாட்சி உருவாக்கிய மாற்றம் இது. மத்தியக் கட்சிகளை ஓரத்திலேயே வைத்திருக்கும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் டெல்லியிலிருந்து மறைமுக மாநிலங்களை இயக்கும் போக்கை பாஜக உண்டாக்குவது ஜனநாயகத்தை அவமதிப்பதாக மட்டும் அல்லாமல், தேச நன்மைக்கும் எதிர்காலத்தில் ஊறு விளைவிக்கக் கூடும். மேலதிகம், கட்சித் தாவல் தடைச் சட்டத்தை அதன் போதாமைகளிலிருந்து மீட்டு, மறுசீரமைப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இத்தகு நிகழ்வுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x