Published : 19 Aug 2019 08:52 AM
Last Updated : 19 Aug 2019 08:52 AM

360: வதந்திகளால் வதைபடும் லிச்சி விவசாயிகள்

லடாக்கின் எதிர்காலம் என்னவாகும்?

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, மத்திய ஆட்சிக்கு உட்பட்ட ஒன்றியப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது லடாக். ஸ்ரீநகரே அவர்களுக்குத் தொலைதூரமாக இருந்தபோது, அடுத்து நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டிய டெல்லி எப்படி அண்மையாகும் என்ற கேள்வியை உள்ளூர் சமூகங்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கியுள்ளன. காற்றாலைகள் மூலம் மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், அங்குள்ள கனிம வளங்களை அகழ்வது ஆகிய லட்சியங்கள் டெல்லிக்கு இருக்கின்றன. இங்கு மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அடித்தளக் கட்டமைப்புகளும், கூடுதல் பாதுகாப்புக்கு அதிக அளவில் நிறுத்தப்படப்போகிற ராணுவப் படைப்பிரிவுகளும் இப்பிரதேசத்தின் பெரும்பகுதி நிலத்தை ஆக்கிரமித்துவிடும். ராணுவ மோதல்களுக்கான மிக உயரமான போர்க்களமாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. அந்தமான் நிகோபாரில் காடுகள் வெட்டப்படுவதும் இயற்கைச் சூழல் குலைக்கப்படுவதும் தடையின்றி நடக்கின்றன. வியாபார நோக்கிலான நடவடிக்கைகளை அரசு தடுப்பதில்லை. லடாக் மலைப் பிரதேசத்தில் சூழல் கெட்டுப்போனால் நிலச்சரிவு, மண் அரிப்பு, திடக் கழிவுக் குவியல், வன உயிரிகளுக்கு உயிராபத்து என்று தீமைகளே வரிசைகட்டி நிற்கும். அரசியல்ரீதியிலான முடிவில் வெற்றி கண்ட மத்திய அரசு, மக்களுடைய சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையில் செயல்படுவதே இதற்கான பதிலாக அமையும்.

வதந்திகளால் வதைபடும் லிச்சி விவசாயிகள்

மூளை அழற்சியால் பிஹாரில் குழந்தைகள் இறந்துபோனதற்கு லிச்சி பழங்கள்தான் காரணம் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளும், சமூக ஊடகங்கள் அதை ஊதிப் பெருக்கியதும் லிச்சி விவசாயிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டன. பிஹாரில் மட்டும் ஆண்டுக்கு 1.98 லட்சம் லிச்சி பழங்கள் விளையும். இதன் சந்தை மதிப்பு ரூ.600 கோடி. லிச்சி பழங்களைச் சாப்பிடுவதால் மூளை அழற்சி நேரடியாக ஏற்படுவதில்லை. ஏற்கெனவே, ஊட்டச்சத்துக் குறைவால் வயதுக்கேற்ற உயரமும் எடையும் இல்லாத சிறுவர்கள் இரவில் வெறும் வயிற்றோடு படுத்துவிட்டு, அதிகாலையில் பசிக்காக லிச்சி பழங்களைத் தின்பதால் உடலில் சர்க்கரைச் சத்து வேகமாகக் குறைந்துவிடும் சூழலிலேயே, மூளை அழற்சி ஏற்படுகிறது. எனவே, ஏழைக் குழந்தைகளுக்கு இரவிலும் காலையிலும் அரசு உணவு வழங்க வேண்டும் என்றும், ஊட்டச்சத்துக் குறைவைப் போக்க சத்துணவு வழங்க வேண்டும் என்றும், லிச்சிப் பழம் விளையும் மாநிலங்களில் சுகாதாரத் துறை மூலம் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

பாஜக-பிஜத: எதிரியல்ல தோழன்!

மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மை வலு கிடைக்கவில்லைதான். ஆனால், பல சட்ட முன்வடிவுகளை வெகு எளிதாக நிறைவேற்ற ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் (பிஜத) அதற்குத் துணைநின்றது. ஜம்மு-காஷ்மீர் மாநில மறுசீரமைப்புச் சட்ட முன்வடிவை ஆதரித்த பிஜத உறுப்பினர் பிரசன்ன ஆசார்யா, மாநிலக் கட்சியாக நாங்கள் இருந்தாலும் தேசத்துக்குத்தான் முன்னுரிமை தருவோம் என்றார். முத்தலாக் சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டத் திருத்தம், சட்டவிரோத நடவடிக்கைகள் திருத்தச் சட்டம் என்று எல்லாவற்றுக்குமே பிஜத ஆதரவு தந்தது. இந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இரண்டுமே கடுமையாக மோதிக்கொண்டன. பிஜத மீண்டும் ஆளுங்கட்சியானது, பாஜக பிரதான எதிர்க்கட்சியானது. 2014-ல் மோடி பிரதமராகப் பதவியேற்றபோது வங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, பிஜத தலைவர்கள் பலரும்கூட, சீட்டு நிறுவன நிதி மோசடியில் நேரடியாக ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். சிபிஐ அவர்களுடைய வீடுகளில், அலுவலகங்களில் சோதனையிட்டது. பலர் நீண்ட காலம் சிறையில் இருந்தனர். இதனால், நவீன் பட்நாயக்கின் செல்வாக்கும் குறைந்துபோனது. அந்த வழக்குகளிலிருந்து தப்பிக்கத்தான் பிஜத, பாஜகவுக்கு ஆதரவு தருகிறது என்று காங்கிரஸ் இப்போது குற்றஞ்சாட்டுகிறது.

கோபக்காரக் கவிதை

நடிகை, எழுத்தாளர், கதைசொல்லி, டெட்எக்ஸ் பேச்சாளர், நகைச்சுவைக் கலைஞர் எனப் பன்முகம் கொண்ட ப்ரியா மாலிக், பிக் பாஸ் சீசன் 9-ல் காரம் தூக்கலாக இருப்பதற்காகவே களம் இறக்கப்பட்டவர். பெண்ணியம் சார்ந்த காட்டமான கருத்துகளுக்காகவும் பேர்போனவர். கிடாரை ரம்மியமாக இசைக்கவிட்டுக் கவிதைகள் வாசிப்பதும், சூடான பேச்சுகள் தருவதும்தான் ப்ரியாவின் புதிய அவதாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x