Published : 16 Aug 2019 07:30 AM
Last Updated : 16 Aug 2019 07:30 AM

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடலாமா?

கே.சந்துரு

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் போக்குவரத்து வழித்தடங்களைத் தேசியமயமாக்கியதன் பயனைக் குறித்து கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளது. ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பளித்ததைத் தவிர மக்களுக்கோ அல்லது அரசின் பொருளாதார நலனுக்கோ அவை சேவைபுரிவதாகத் தெரியவில்லையே என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

லாபம் மட்டுமே பொதுச் சேவைகளின் நோக்கமில்லை என்றிருப்பினும் அரசு போக்குவரத்துத் துறையின் ஊழியர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், மக்களை அவர்கள் செயலின் மூலம் அலறவிடுவதுடன் அவர்களது கவனக்குறைவால் பல்வேறு விபத்துகள் நடப்பதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். இதையெல்லாம் தாண்டி வங்கத்தின் கம்யூனிஸ்ட் ஆட்சியின் நிர்வாகத்திறனைப் பற்றியும் குறைகூறியிருந்தனர். மத்திய அரசைப் போல் அரசு பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் துறைக்குத் தாரைவார்ப்பதைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளனர்.

இப்படிப்பட்ட கருத்துகளைப் பதிவுசெய்து மேலும் அரசுக்கு சில கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ள இரண்டு நீதியரசர்கள் அமர்விடம் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், இதையெல்லாம் கூறுவதற்கான வழக்கு உங்கள் முன்னால் விசாரணைக்கு வந்ததா? மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் இவ்வழக்குக்குக் கட்சிக்காரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனரா?

வழக்கோடு தொடர்பில்லாத விவாதம்

வாணி என்ற பெண்மணி தொடுத்த வழக்கு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தின் முன்னால் விசாரிக்கப்பட்டு, அந்தத் தீர்ப்பாயம் கொடுத்த இழப்பீட்டுத் தொகை திருப்திகரமாக இல்லை என்று அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மேல்முறையீட்டில் எதிர்க்கட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்தது நகரப் போக்குவரத்து நிறுவனம் மட்டுமே. அப்பெண்மணியின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அதைக் குறிப்பிட்ட காலவரைக்குள் கொடுக்கும்படி உத்தரவிட்டிருந்தனர். அத்துடன் வழக்கின் கோப்பு முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு வழக்கில் எழுப்பப்பட்ட எழுவினாக்களுக்கு மட்டும் முடிவு சொல்ல வேண்டிய நீதிபதிகள் தங்களுடைய சொந்தக் கருத்துகளைப் பதிவுசெய்வதுடன், அவ்வழக்குக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் கருத்து சொல்வதுடன் அரசிடமிருந்து எதிர்வினை கோருவது சரிதானா? மேலும் நீதியரசர்களிடம் இருந்த வழக்கில் உள்ள இரு தரப்பைத் தவிர அரசோ அல்லது போக்குவரத்துத் தொழிலாளர்களோ அல்லது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களோ அவர்கள் முன்னால் இல்லாதபோது இப்படிப்பட்ட கொள்கைப் பிரச்சினைகளில் நீதிமன்றம் தலையிடலாமா என்ற கேள்வியும் எழுகிறது.

உலகப் புகழ்பெற்ற சட்ட மேதை பெஞ்சமின் கார்டோஸோ ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார்: ‘நீதிபதி சுதந்திரமான தன்மை பெற்றவர் என்றிருப்பினும் உண்மையில் அவருக்கு முழு சுதந்திரமில்லை. அவர் தன் இச்சைக்கேற்ப புதுமைகளைத் தேட முடியாது. தன்னுடைய அழகின் லட்சியத்தையோ நன்மைகளையோ தேடிப் போர்வாளுடன் புறப்பட்ட போர்வீரன் அல்ல அவர். ஸ்தாபிக்கப்பட்ட விதிகளின்படியே அவர் ஈர்க்கப்பட வேண்டும். ஒழுங்கற்ற உணர்ச்சிகளுக்கோ தெளிவற்ற அல்லது ஒருமுகப்படுத்தப்படாத இரக்க மனப்பான்மைக்கு அவர் ஆளாகிவிடக் கூடாது. தன்னுடைய விருப்புரிமையை மரபுரீதியான அறிவுடன் ஏற்படுத்தி வைக்கப்பட்ட ஒப்புநோக்குடன் அமைப்பின் ஒழுக்கத்துடனும் மட்டுமே அவர் நடந்துகொள்ள வேண்டும்.’
அந்த சட்ட மேதையின் இக்கருத்தை இந்திய உச்ச நீதிமன்றமும் மீரட் வளர்ச்சிக் குழுமம் வழக்கில் தனது ஒப்புதலுடன் பதிவுசெய்தது. ஆனால், அதன்படி நீதிபதிகள் நடக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

உள்நோக்கம் கற்பிப்பது தவறு

1970-களில் போக்குவரத்து வழித்தடங்கள் தமிழ்நாட்டில் தேசியமயமாக்கப்பட்டபோது அதை எதிர்த்து பல பேருந்து நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன. அதை இரு நீதிபதிகள் அமர்வு ரத்துசெய்தபோது ஒரு வார இதழில் அதை விமர்சிக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டது. தேசியமயம் என்பது ஏமாற்று வித்தை. கலைஞர் சட்டம் போடுவதுபோல் போடுவார், அதை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்றும், பேருந்து நிறுவனங்களுக்கு ஏற்கெனவே வாக்குறுதி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்தச் செய்தித்தாள் கூறியது.

பின்னர் பேருந்து வழித்தடங்கள் தேசியமயமாக்கப்பட்ட சட்டம் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், செய்தி வெளியிட்ட அவ்விதழின் ஆசிரியர் மீது உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வார இதழ் ஆசிரியருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த உச்சநீதிமன்றம் தீர்ப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறு என்று கூறியது.

நீதிபதிகளுடைய தீர்ப்பை, குறிப்பாக இழப்பீட்டுத் தொகையை அதிகரித்ததைப் பற்றி நாம் குறைகூறவில்லை. பேருந்துகளைத் தனியார்மயப்படுத்த வேண்டுமென்று வழக்குக்கு சம்பந்தமில்லாமல் கருத்து தெரிவித்ததைத்தான் குறைகூறுகிறோம். தமிழ்நாடு அரசு பேருந்துகள் தேசியமயமாக்கியதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்டது. தனிநபர்களின் ஏகபோகத்தை ரத்துசெய்து தொழில்களைத் தேசியமயமாக்குவதன் மூலம் பொதுநலனை நிலைநாட்டுவதைத்தான் அரசமைப்புச் சட்டம் தனது வழிகாட்டு நெறிமுறைகளாக அரசுக்கு வழங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்டதைப் போல் இந்தியா ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிஸக் குடியரசு என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

அரசின் கொள்கை முடிவு

தேசியமயமாக்கப்பட்ட பேருந்துகள் தனியார்மயமாக்கப்பட வேண்டுமா என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பிரதிநிதிகள் எடுக்க வேண்டிய கொள்கை முடிவுக்கு உட்பட்டது. அதை நீதிமன்றம் முடிவுசெய்ய முடியாது. அரசின் அதிகாரப் பங்கீட்டில் நீதிமன்றத்துக்கு சட்டத்தை சீராய்வு செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ளது. நீதிமன்றமே அரசை எடுத்து நடத்த முடியாது.
அரசுப் போக்குவரத்து நிர்வாகங்களில் குறை இருக்கலாம். போக்குவரத்து ஊழியர்கள் தங்களது நிலையாணையை மீறி தவறிழைத்திருக்கலாம். அதற்கெல்லாம் அவர்கள் தண்டிக்கப்பட்டால் அதை உறுதிசெய்யும் கடமை தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு உள்ளது. இதற்கு அப்பால் ஊழியர்களையும் நிர்வாகங்களையும் குறைகூறுவது என்பது நீதியரசர்களின் பணிதானா? மேலும், இந்தியாவிலேயே சிறப்பாகப் போக்குவரத்துச் செயல்பாடு இருக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. வங்கத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியில் போக்குவரத்து சிறப்பாகச் செயல்படவில்லை என்பதைக் கூற வேண்டியவர்கள் அரசியல் கட்சிகளும் அதன் பிரதிநிதிகளும் மட்டுமே.

போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதென்னவோ உண்மைதான். அதற்குப் பல காரணங்களைக் கூற முடியும். இன்றைக்கும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுடைய ஓட்டுனர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. இதுபோல் பல இலவசங்களை அக்கழகங்கள் நிறைவேற்ற வேண்டிய கடமையுள்ளது. அதனால், எல்லா நிர்வாகச் சீர்கேட்டுக்கும் ஊழியர்களைக் குறைசொல்வது சரியல்ல.

ஊழியர்கள் அல்ல பிரச்சினை

நகரத்தில் ஓட்டப்படும் பேருந்துகளில் உள்ள இருக்கைகள் தவிர 25 பேர் மட்டுமே நின்று செல்லலாம் என்று உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால், புளிமூட்டைகள்போல் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இதை எதிர்த்த ஓட்டுனர் மாயாண்டி, நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது அதை ரத்துசெய்த உச்ச நீதிமன்றம், ஊழியர் ஒருவர் நிர்வாகத்தின் சட்டவிரோத உத்தரவுகளை ஏற்கத் தேவையில்லை என்று கூறியது. அதன் பின்னரும் நிலைமை மாறியதா?

இன்று வரை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பிரச்சினை உள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் பல அளித்தும் ஓய்வூதியம் பெறாத ஊழியர்களே அதிகம். அதற்காகவும், ஊதிய உயர்வுக்காகவும் அவர்கள் போராட்டத்தில் குதித்தபோது அந்தப் போராட்டத்தைத் தடைசெய்தது உயர் நீதிமன்றம். ஆனால், இன்று வரை ஓய்வூதியம் பெறாத ஊழியர்களின் வாழ்க்கையைப் பற்றியும் யோசிக்க வேண்டிய கடமை நீதிமன்றத்துக்கு இருக்கிறது.

ஒரு பிரச்சினையைப் பற்றி முடிவுசெய்ய வேண்டுமென்றால் அதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கருத்துகள் கேட்டு அதன் பின்னர் தனது கருத்துகளை நீதிமன்றம் வெளியிட்டால் அதைப் பாராட்டலாம். ஆனால், ஒருதலைப்பட்சமாக தேசியமயக் கொள்கையை விமர்சித்து பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கூறும் அதிகாரம் நீதிபதிகளுக்குக் கிடையாது. எனவே, நீதிபதிகள் தங்கள் சட்டக் கடமைக்கு உட்பட்டு பணியாற்றும் போதுதான் சமூகத்துக்கு மேலும் மேலும் நன்மைகள் விளையும்.

- கே.சந்துரு,

நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x