Published : 14 Aug 2019 07:09 AM
Last Updated : 14 Aug 2019 07:09 AM

காந்தி பேசுகிறார்: தீண்டாமை உண்டு எனில் சுயராஜ்யம் இல்லை

தீண்டாமை தங்கள் மதத்தின் ஓர் அம்சமென்று இந்துக்கள் வேண்டுமென்று பிடிவாதமாகக் கருதும் வரையில், தங்கள் சகோதரர்களான ஒரு பகுதியினரைத் தொடுவது பாவமென்று இந்துக்களில் பெரும்பாலோர் எண்ணும் வரையில், சுயராஜ்யம் பெறுவது அசாத்தியமான காரியம். நமது சகோதரர்களை அடக்கி ஒடுக்கிய குற்றத்துக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். அவர்களைத் தரையில் ஊர்ந்துசெல்லும்படி செய்திருக்கிறோம்; அவர்கள் மூக்குகளைத் தரையில் அழுத்தி வணங்கிக் கஷ்டப்படும்படி செய்திருக்கிறோம்; கோபத்தால் கண்கள் சிவக்க அவர்களை ரயில் வண்டிகளிலிருந்து வெளியே பிடித்துத் தள்ளியிருக்கிறோம்.

இதைக் காட்டிலும் அதிகமாக பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு என்ன கொடுமைகளை இழைத்துவிட்டது? டயர் மீதும், ஓட்வியர் மீதும் நாம் என்ன குற்றம் சாட்டினோமோ அதே குற்றத்தை மற்ற நாட்டினரும், நம் சொந்த நாட்டு மக்களும்கூட நம் மீது சாட்ட முடியாதா?
என்னிடத்தில் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. அன்பு உணர்ச்சி பற்றி கவி துளசிதாஸ் மனம் உருகிப் பாடியிருக்கிறார். அன்பு உணர்ச்சிதான் ஜைன, வைஷ்ணவ மதங்களுக்கு அஸ்திவாரக் கல்லாகத் திகழ்கிறது. பாகவதத்தின் சாரமும் இதுதான். கீதையின் ஒவ்வொரு சுலோகத்திலும் அன்பு உணர்ச்சி ததும்புகிறது. இந்தத் தயாள குணம், இந்த அன்பும், இந்தத் தரும குணம் மெதுவாக, ஆனால் உறுதியாக இந்நாட்டு மக்களின் இதயங்களில் வேரூன்றி வளர்ந்துவருகிறது என்பதை இந்தியாவில் நான் பிரயாணம் செய்துகொண்டிருந்தபோது உணர்ந்துகொண்டேன்.

- யங் இந்தியா, 4.5.1921

நமது சொந்த சமூகத்தின் ஆறில் ஒரு பகுதியினரைச் சுரண்டி, தெய்வீக மதத்தின் பெயரால் திட்டவட்டமாக யோசித்து, வேண்டுமென்றே அவர்களை இழிவுபடுத்தி வந்தோம் அல்லவா? கடவுளால் முற்றிலும் நியாயமாக விதிக்கப்பட்ட அந்தக் கொடுமையின் வினையையே இப்போது நாம் அனுபவிக்கிறோம். அந்த வினைதான் அந்நிய ஆதிக்கமாகிற சாபக்கேடும், அதனால் நாம் சுரண்டப்படுவதும் ஆகும்.

அதனாலேயே, சுயராஜ்யம் பெறுவதற்குத் தீண்டாமை ஒழிப்பை இன்றியமையாத ஒரு நிபந்தனையாக நான் வைத்திருக்கிறேன். நாமோ நம்மிடம் அடிமைகளை வைத்துக்கொண்டிருக்கிறோம். நம்மிடம் இருக்கும் அடிமைகளுக்கு நிபந்தனையின்றி விடுதலையளிக்க நாம் தயாராக இல்லையென்றால், அந்நியரிடம் நம்முடைய அடிமைத்தனத்தைக் குறித்துச் சண்டையிட நமக்கு யோக்கியதை இல்லை.

- யங் இந்தியா, 13.10.1921

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x