செய்திப்பிரிவு

Published : 14 Aug 2019 06:51 am

Updated : : 14 Aug 2019 06:51 am

 

இந்திய நுகர்வோரின் அதிகாரம் அதிகரிக்கட்டும்

indian-consumers

நுகர்வோருக்கு அதிகாரமளிக்கும் சட்ட முன்வடிவு மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. முதல் நுகர்வோர் சட்டம் கொண்டுவரப்பட்ட 1986-க்குப் பிறகு, பொருட்களை விற்பதிலும் சேவைகளை அளிப்பதிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதை மனதில் கொண்டு இணைய வழி விற்பனை, தொலைக்காட்சி வழி விற்பனை, நேரடி விற்பனை, வெவ்வேறு நிலைகளில் விற்பனை, பாரம்பரிய விற்பனை என்று அனைத்தும் இந்தப் புதிய சட்ட முன்வடிவின் விசாரணை வரம்பில் இடம்பெற்றுள்ளன.

வீடுகள் - அடுக்கக வீடுகள் விற்பனை, தொலைத்தொடர்பு சேவைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் வகையில் சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டிருக்கிறது. முறையற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடைசெய்தது முந்தைய சட்டம். இப்போதைய சட்டம் அப்படிப்பட்ட எல்லாவித முறைகேடுகளையும் தடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் முறையற்ற ஒப்பந்தங்கள் எவை என்ற விளக்கமும் சேர்க்கப் பட்டிருக்கிறது. நல்ல விஷயம்!

ஒரு பொருளால் அல்லது சேவையால் நுகர்வோருக்குத் தீங்கு ஏற்பட்டால் பொருளைத் தயாரித்தவர் அல்லது சேவையை வழங்குபவரைப் பொறுப்பாக்கும் வகையில் இந்த சட்ட முன்வடிவு உள்ளது. உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், சேவை அளிப்பவர்கள் நுகர்வோருக்கு உரிய இழப்பீடு வழங்கியாக வேண்டும்.

இப்போதுள்ள நுகர்வோர் பாதுகாப்புப் பேரவைகள் வெறும் ஆலோசனை அமைப்புகளாக மட்டுமே இருக்கின்றன. சரக்கு - சேவை விற்பனைகளில் குறை இருந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுள்ள ‘மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்’ ஏற்படுத்தப்பட புதிய சட்டம் வகைசெய்கிறது. தீங்கு விளைவிக்கும் பொருட்களைச் சந்தையிலிருந்து திரும்பப் பெறவும், நுகர்வோர் செலுத்திய பணத்தைத் திருப்பித்தருமாறு உத்தரவிட அதிகாரம் உள்ளதாகவும் இது இருக்கும்.

நுகர்வோர் நீதிமன்றங்களிலும் இப்போது வழக்குகள் தேங்கத் தொடங்கிவிட்டதால் ‘மாற்று வழிகளில்' நுகர்வோர் புகார் வழக்குகளை விரைந்து தீர்க்கவும் சட்ட முன்வடிவு வகைசெய்கிறது. இதற்கான ‘மத்தியஸ்த அமைப்பு' மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஏற்படுத்தப்படவுள்ளன. தோனி, மாதுரி தீட்சித் போல, விளம்பரத் தூதர்களாகும் பிரபலங்கள் நுகர்வோர்களுக்குத் தவறான வழிகாட்டுவதைத் தடுக்க சட்ட முன்வடிவு ஆலோசனை கூறுகிறது.

எந்த ஒரு பொருளையும் சேவையையும் உண்மையாகப் பயன்படுத்திய பிறகே விளம்பரத் தூதர்களாக நடிக்க வேண்டும், இல்லாவிட்டால், நுகர்வோர் வழக்கு தொடர்ந்தால் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் அபராதம் செலுத்துவதுடன் மேற்கொண்டு எந்த விளம்பரப் படத்திலும் ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரையில் தலைகாட்டக் கூடாது என்றும் சட்ட முன்வடிவு அறிவுறுத்துகிறது.

நுகர்வோரின் உரிமைகளை அவர்கள் அடைவதில் பெரிய இடையூறு இந்தியாவில் நிலவுகிறது. இந்நிலை மாற வேண்டும். நுகர்வோர் நீதிமன்றங்களை எளிதில் அணுகவும் எளிதாகப் புகார்களைத் தெரிவித்து வழக்கு தொடரவும் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து நீதி வழங்கப்படவும் அரசு உறுதிசெய்தால் முழுப் பலனும் கிடைக்கும்.

இந்திய நுகர்வோர்அதிகாரம்முன்வடிவு மக்களவைவிற்பனைதொலைத்தொடர்பு சேவைகள்நுகர்வோர் நீதிமன்றங்கள்விளம்பரத் தூதர்கள்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author