செய்திப்பிரிவு

Published : 13 Aug 2019 09:23 am

Updated : : 13 Aug 2019 09:23 am

 

360: ஊரெல்லாம் ஓவியம்

paintings

சுத்தம், சுகாதாரத்துக்கான முன்மாதிரியாக சென்னை கோவளம் பகுதியை மாற்றும் முனைப்புடன் செட்டிநாடு மருத்துவமனை ஊழியர்கள், மாணவர்கள் சிலர் களமிறங்கியிருக்கிறார்கள். ‘டிஎன்1 டீம்’ என்ற பெயரில் இயங்கும் இந்தத் தன்னார்வக் குழுவானது அரசுப் பள்ளிகளையும், பொது இடங்களையும் ஓவியங்களால் அழகூட்டிவருகிறது. 15 பேர் கொண்ட இந்தச் சிறிய அணி தங்கள் சேமிப்பிலிருந்து சிறு தொகையை ஒவ்வொரு வாரமும் பகிர்ந்துகொண்டு ஆக்கபூர்வமான விடுமுறைக் கொண்டாட்டத்துக்குக் கிளம்பிவிடுகிறார்கள். கோவளத்தைத் தொடர்ந்து தங்கள் பணியை சென்னை முழுக்க விஸ்தரிக்கும் கனவோடு களமிறங்கியிருக்கிறார்கள்.

திறப்பு விழா காணும் 2,800 ராஜஸ்தான் பள்ளிகள்

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசு தனது ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில் மூடிய 2,800 பள்ளிகளை மீண்டும் திறக்க முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவெடுத்திருக்கிறது. அவற்றில் உடனடியாக தனியாகத் திறக்கக்கூடிய பள்ளிகள் எவை என்று மாநில கல்வித் துறை இயக்குநரகம் அறிக்கை தயாரித்திருக்கிறது.

மாணவர்கள் போதிய எண்ணிக்கையில் வருவது உறுதியென்றால் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் கோவிந்த் சிங் தெரிவிக்கிறார். மாவட்ட வாரியாகத் திறக்கப்படவுள்ள பள்ளிக்கூடங்கள்: பார்மர் 209, ஜெய்ப்பூர் 104, பில்வாரா 94, ஜெய்சால்மர் 91, ஜோத்பூர் 74, டோங்க் 61, தௌசா 57, நகௌர் 52, பன்ஸ்வாரா 41, உதய்பூர் 36, ஆல்வார் 34, பிகானீர் 34, அஜ்மீர் 30, ஜலோர் 30, பரத்பூர் 28, சுரு 28, ராஜ்சமுந்த் 28, பரத்பூர் 28, பரண் 26, ஜலாவர் 26, தோல்பூர் 26, ஜுன்ஜுனு 25, புண்டி 24, சவாய்மாதோபூர் 22,
கோடா 21, கரௌளி 21, பாலி 20, ஸ்ரீகங்காநகர் 15, சித்தோர்கர் 11, பிரதாப்கர் 9, ஹனுமான்கடி 8, சிரோஹி 5.

தட்டம்மை தடுப்பில் நம்பிக்கையூட்டும் இலங்கை

தட்டம்மையை ஒழிப்பதில் இலங்கை சாதனை படைத்திருக்கிறது. ஆசிய நாடுகளில் பூடான், மாலத்தீவுகள், தைமோர்-லெஸ்டி ஆகியவையும் இச்சாதனையைப் புரிந்துள்ளன. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் புதிதாகத் தட்டம்மை நோய் ஏற்படவில்லை என்றால், அந்நாடு தட்டம்மையை ஒழித்ததாகக் கருதப்படுகிறது. இப்படி அறிவிக்கப்பட்ட நாடுகளில் மீண்டும் இந்நோய் தலைதூக்குவது வழக்கம்தான்.

2018-க்குப் பிறகு 53 ஐரோப்பிய நாடுகளில் 49 நாடுகளில் இந்நோய் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. 2018-ல் 91% பேருக்குத் தட்டம்மை தடுப்பூசி போட்டிருந்தும் இப்படி ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் அங்கே அனைத்து நாடுகளிலும் ஒரே சீராகவும், எல்லோருக்கும் தடுப்பூசி போடப்படாததுதான். இலங்கை தனது கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடம் கற்று, குழந்தை பிறந்த முதல் 9-வது மாதத்திலும், பிறகு 3 வயதிலும் இரண்டு முறை தட்டம்மை தடுப்பூசியைத் தேசிய முகாம்கள் மூலம் போடுகிறது. மீண்டும் தலைதூக்கிவிடாமல் தடுக்கும் முனைப்பில் இருக்கும் இலங்கை, தட்டமை தடுப்பில் ஒரு முன்மாதிரியாக நிமிர்ந்துநிற்கிறது.

திறப்பு விழாராஜஸ்தான் பள்ளிகள்பாஜக அரசுமுதல்வர் அசோக் கெலாட்தட்டம்மை தடுப்புஇலங்கைதடுப்பூசிசெட்டிநாடு மருத்துவமனைஓவியம்

Popular Articles

You May Like

More From This Category

More From this Author