Published : 13 Aug 2019 08:49 AM
Last Updated : 13 Aug 2019 08:49 AM

இப்படிக்கு இவர்கள்:‘அந்த மஞ்சள் நிறப் பூனை’- பதிப்பும், சில வரலாற்று உண்மைகளும்

நகுலன் குறித்து ‘வானவில் அரங்கம்’ பகுதியில் சி.மோகன் எழுதியிருந்தார். ‘அந்த மஞ்சள் நிறப் பூனை’ நாவல்தான் நகுலனின் முதல் நாவல் என்றும், அதன் கையெழுத்துப் பிரதி பற்றியும் குறிப்பிட்டிருந்தார். 1976-ல் சி.மோகனுக்குத் தன் முதல் நாவலின் கையெழுத்துப் பிரதியை அனுப்பியுள்ளார் நகுலன். என்ன காரணத்தினாலோ அது பிரசுரமாகவில்லை. நகுலனை நான் நேரில் சந்திக்கும்போது, இந்நாவல் குறித்து என்னிடம் கூறினார். உடன் கோணங்கியும் இருந்தார். ஊர் திரும்பிய பின், அந்நாவல் மா.அரங்கநாதனிடம் இருப்பது தெரியவந்தது.

வெளி ரங்கராஜனின் உதவியுடன், அந்தக் கையெழுத்துப் பிரதியைப் பெற்று, ‘புது எழுத்து’ இதழுக்காக மனோன்மணியிடம் தந்தேன். அதை அவர் ‘புது எழுத்து’ இதழில் வெளியிட்டார். ‘அந்த மஞ்சள் நிறப் பூனை’ என்பது மா.அரங்கநாதனின் விருப்பத்துக்கிணங்க ‘அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி’ என்று பிரசுரமானது. அதற்குப் பின் என் திருமண விழாவில், இந்நாவலை ‘அடவி’ முரளியின் உதவியுடன் அச்சிட்டு நண்பர்களுக்குத் தந்தேன்.

பிறகு, இந்நாவலின் கையெழுத்துப் பிரதியை மனோன்மணி எங்கோ தவறவிட்டிருந்தார். 1976-க்கு முன் எழுதப்பட்ட நாவல், எழுத்தாளரின் காலத்திலேயே நூலாக்கம் பெறாதது துரதிர்ஷ்டவசமானது. அந்த நாவலை எவ்வித அனுமதியும் காப்புரிமையும் பெறாமல், ஒரு பதிப்பகம் பத்தோடு பதினைந்தாக வெளியிட் டிருப்பதும் முறையானதல்ல. கையெழுத்துப் பிரதி தொலைந்துபோனதும் துரதிர்ஷ்டவசமானது.

- ராணிதிலக், கவிஞர்.

புத்தக அட்டைப்படத்தின் வல்லமை

ஆகஸ்ட்-11 அன்று வெளியான புத்தக அட்டைப்பட வடிவமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பேட்டி வித்தியாசமானதாக இருந்தது. அட்டைப்படத்தை வைத்து ஒரு புத்தகத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கக் கூடாது என்பார்கள். ஆனால், அறிமுகமில்லாத ஒரு புத்தகத்தை நோக்கி நம்மை ஈர்க்கும் வல்லமை அட்டைப்படத்துக்கு உண்டு. முன்பு கிரைம் நாவல்களின் மன்னர்களான ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோரின் நாவல்களுக்கான வடிவமைப்புக்கே வாசகர்களை வாங்க வைத்துவிடும் வல்லமை உண்டு.

அப்படி அட்டைப்படத்துக்கான புகைப்படங்களை எடுத்தவர்தான் இன்று திரையுலகில் மிகப் பெரிய இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த. சந்தோஷ் நாராயணனிடமும் புத்தகத்தின் மீதான ஆர்வத்தைப் பார்க்க முடிகிறது. ‘எழுத்தாளர்களுக்கு இருப்பது நிறைய பக்கங்கள்; ஆனால், எனக்கிருப்பதோ ஒரே பக்கம்தான்’ என்ற வரிகள் அவருடைய வேலையின் மீதான நாட்டத்தைக் காட்டுகிறது. புத்தகங்களின் ஆக்கத்தில் அட்டை வடிவமைப்பாளர்களுக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை வாசகர்களுக்குப் புரிய வைத்தது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x