Published : 12 Aug 2019 07:44 am

Updated : 12 Aug 2019 07:44 am

 

Published : 12 Aug 2019 07:44 AM
Last Updated : 12 Aug 2019 07:44 AM

போரிஸ் ஜான்ஸன்... கேளிக்கை மன்னர், பிரெக்ஸிட்டர், பிரிட்டனில் ஒரு ட்ரம்ப்!  

a-trump-in-britain

ரிச்சர்ட் சீமோர்

ரிச்சர்ட் சீமோர்பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பதவியேற்றதும் உலகின் பார்வை மீண்டும் லண்டன் நோக்கித் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. “இன்னும் சில ஆண்டுகள் காத்திருங்கள், உலகிலேயே மிகச் சிறந்த நாடாக பிரிட்டன் தலையெடுத்துவிடும்” என்று பிரிட்டனின் காமன்ஸ் சபையில் அறிவித்திருக்கிறார் ஜான்ஸன். கன்சர்வேடிவ் (டோரி) என்ற பழமைவாத அரசியல் கட்சியின் தலைவராகக் கட்சித் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தலைவரான ஜான்சன் தன்னம்பிக்கை மிகுந்தவர். ‘வரும் அக்டோர் 31-க்குள் பிரெக்ஸிட்டைச் சாத்தியமாக்கிக் காட்டுகிறேன்’ என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் மயங்கும்படியாகக் கால்களால் தாளமிட்டுக்கொண்டே அறிவித்தார்.


காலனிகளாக உலகின் பெரும்பகுதி நாடுகளை ஒரு காலத்தில் கட்டியாண்ட பிரிட்டன், மீண்டும் உலக வரைபடத்தில் மிகச் சிறந்த நாடாகப்போகிறது என்ற கனவை விதைத்திருக்கிறார் ஜான்ஸன். காமன்ஸ் சபையின் கடைசி மேஜையில் உட்கார்ந்துகொண்டு அவர் ஒவ்வொரு வாக்கியத்தையும் பேசி முடிக்கும்போது ‘ஹா... ஹா...’ என்று உரத்து கோஷமிட்டுக்கொண்டும் உறுமிக்கொண்டும் இருந்த டோரி கட்சி எம்.பி.க்களுக்கும் அப்படியெல்லாம் எதையும் அவரால் செய்துவிட முடியாது என்று தெரியும். ஆனாலும், எல்லோரும் அவரை இன்று கவனிக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள ஜான்ஸனுக்கு அவகாசம் இல்லை.

அப்படியே எதையேனும் அவை அளிக்க முன்வந்தாலும், ஒன்றியம் அளிக்கும் புதிய ஒப்பந்தம் எதையும் இப்போதைய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றவும் முடியாது. அப்படி புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாமல் பதவியிலிருந்து விலக ஜான்ஸன் முற்பட்டால் டோரி கட்சியே இரண்டாக உடைந்துவிடும். அமைச்சரவையில் அவர் நியமித்துள்ள அமைச்சர்கள், ஆலோசகர்கள் குறித்து பிரிட்டிஷ் ஊடகங்கள் மிகத் தீவிரமாக விவாதித்தன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று வாக்களித்தவர்களும், வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்த வழிகாட்டிகளும்தான் அவர்களில் அதிகம்.

வலதுசாரி சிந்தனையாளர்களை அருகில் வைத்திருப்பதாலேயே தான் நினைத்ததை நிறைவேற்ற அவருக்கு வாய்ப்புகள் ஏற்பட்டுவிடவில்லை. பிரெக்ஸிட்டுக்குப் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றால், இப்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் புதிய தேர்தலுக்கு அவர் உத்தரவிட வேண்டும். ஆனால், ஜான்ஸனோ ‘விரைவில் இன்னொரு பொதுத் தேர்தலைச் சந்திக்க நேர்ந்துவிடாது’ என்றே இதுவரை தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறிவந்திருக்கிறார். ஏன்? ஏனென்றால், நாடாளுமன்றத்துக்குப் பொதுத்தேர்தல் வந்தால் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின்தான் பிரதமர் ஆவார் என்பது ஜூன் 2017 முதலே தெளிவாகிவிட்டது.

ஐரோப்பியத் தேர்தல்களுக்குப் பிறகு புதிய வலதுசாரிக் கட்சியான பிரெக்ஸிட் கட்சியானது, டோரி கட்சியின் ஆதரவாளர்களில் பாதிப் பேரைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டது. போரிஸ் ஜான்ஸன் தலைவரான பிறகு டோரி கட்சிக்கு மக்களிடையே உள்ள ஆதரவை அறிய நடந்த வாக்கெடுப்பில் 25% பேர் மட்டுமே ஆதரிப்பது தெரிந்தது.. இது அதற்கும் முன்பிருந்த நிலைதான். அப்படியென்றால், புதிய தலைவரின் வருகைக்குப் பிறகும் டோரி கட்சி ஆட்சிக்கு வர முடியாது என்பது அக்கட்சி ஆதரவாளர்களுக்கு ஏமாற்றமளித்துவிடும்.

ஃபராஜ் பேரம் பேச வந்தால்…

ஒரேயொரு சந்தர்ப்பத்தில் மட்டுமே, வருவது வரட்டும் என்று ஜான்ஸனால் தேர்தலைச் சந்திக்கத் துணிவு ஏற்படும். பிரெக்ஸிட் கட்சித் தலைவரும் வலதுசாரியுமான நைஜல் ஃபாரேஜ், கூட்டணி உடன்பாடு காண ஜான்ஸனும் ஏற்கும்படியாக ஏதாவது ஊக்குவிப்பு அளித்தால் மட்டுமே தேர்தல் பேரம் படியும். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இனி பேச்சு கிடையாது என்று அறிவித்துவிட்டு, அக்டோபர் 31-க்கு முன்னதாக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தலை அறிவித்தால், தன்னுடைய பிரெக்ஸிட் கட்சி வேட்பாளர்களைப் போட்டியிட வேண்டாம் என்று ஃபராஜ் கேட்டுக்கொள்ளக்கூடும். ஆனால், அது ஃபராஜ் கை உயரத்தான் வழிவகுக்குமே தவிர, ஜான்ஸனுக்கு அதனால் பெரிய ஆதாயம் இல்லை.

ஆகையால், இப்போதிருக்கும் சூழலில் அடுத்து நடக்கக்கூடியது எது என்றால், புதிய பேரத்துக்காக பிரெக்ஸிட் தொடர்பாகப் பேச மேலும் அவகாசம் தேவை என்பார் ஜான்ஸன். அவரால் பெறக்கூடிய ஒப்பந்தமும் அவருடைய கட்சியிலேயே பெரும்பான்மையினரால் ஏற்கப்பட முடியாததாகவே இருக்கும். எனவே, தன்னுடைய கட்சிக்காரர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களுடனும் பேச வேண்டியிருக்கும். ஆனால், அவரால் அப்படிச் செய்யவும் முடியாது. கோர்பினுடன் பேச ஆரம்பித்தபோதுதான் தெரசா மே தலைமையிலான அரசும் மாற நேரிட்டது. காரணம், தெரசாவின் அமைச்சரவையில் இருந்தவர்கள் கோர்பினைத் தேசத் துரோகியாகத்தான் பார்த்தார்கள். அப்படிப் பேசியதற்காக தெரசா மேயை முதலில் கண்டித்தவரே போரிஸ் ஜான்ஸன்தான். இப்போது அவரே கோர்பினுடன் பேசினால் தன்னையே அழித்துக்கொள்வதற்குச் சமம்.

ஏன் போரிஸ் ஜான்சன்?

சரி, பிரெக்ஸிட் விவகாரத்தில் ஜான்சன் ஏன் அப்படி நடந்துகொள்ள வேண்டும்? டோரி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அவரையே தலைமைக்குச் சிறந்தவர் என்று தேர்ந்தெடுக்க வேண்டும்? கட்சித் தொண்டர்கள் ஏன் அவரையே நம்புகிறார்கள்? ஏன் பழமைவாதிகளை ஆதரிக்கும் செய்தித்தாள்கள் - பிரெக்ஸிட் ஆதரவு நாளிதழ் ‘டெய்லி டெலிகிராப்’ முதல் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நாளிதழ் ‘ஈவினிங் ஸ்டாண்டர்ட்’ வரை ஏன் ஜான்ஸனைக் கொண்டாடுகின்றன? வலதுசாரி பத்திரிகைகள் ஏன் புளகாங்கிதப்பட்டு அவரை ஆதரிக்கின்றன? இவற்றுக்கெல்லாம் காரணம், கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டிஷ் அரசியல் களத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மன உறுதிக் குலைவுகள், தோல்விகள் ஆகியவைதான். அவற்றையெல்லாம் மறக்கவைக்கும் போதைப் பொருளாகக் காட்சிதருகிறார் போரிஸ் ஜான்ஸன்.

அரசியல் சட்டரீதியாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குப் பதில் இல்லை; நம்முடைய அரசியல் அமைப்பு முறையே சரிதானா என்று பிரிட்டிஷார் சந்தேகப்படத் தொடங்கியுள்ளனர்; பொருளாதாரமோ தேங்கிக் கிடக்கிறது; வேறு என்ன செய்யலாம் என்றால் எதுவுமே தோன்றவில்லை. இந்த நிலையில்தான் இவற்றையெல்லாம் மறக்கவைக்கும் போதையை வலதுசாரிகள் தேடினர். ‘கொண்டுவாருங்கள் சூரிய ஒளியை’ என்று பழைய திரைப்படப் பாடல் ஒன்றின் வரியையே தன்னுடைய செய்தியின் தலைப்பாக ‘டெய்லி மெயில்’ வைத்திருந்தது. அதே நாளிதழ் ‘நாசவேலை செய்பவர்களை நசுக்குங்கள்’ என்று முன்னர் தெரசா மே பிரதமராக இருந்தபோது தலைப்பிட்டிருந்ததையும் சேர்த்துப் பார்த்தால், இந்த விஷயத்தின் உட்பொருள் புரியும். சூரியன் மறையாத பேரரசாக இருந்தோம், இப்போது செல்வாக்கில்லாத நாடாகச் சுருங்கிவிட்டோம் என்று கருதும் பிரிட்டிஷ் வலதுசாரிகளின் மனச்சோர்வை நீக்க வந்த போதை மருந்துதான் பிரெக்ஸிட் முழக்கம்.

இந்தச் சூழலில் அதிகம் பயனடைய சரியான நபர் போரிஸ் ஜான்ஸன் மட்டுமே. காரணம், ட்ரம்ப் போல பொழுதுபோக்குத் துறையின் வார்ப்பு அவர். ‘உங்களுக்குச் சொல்ல என்னிடம் சேதி இருக்கிறதா?’ என்ற நிகழ்ச்சியில் தோன்றி நேயர்களை மகிழ்வித்தவர் ஜான்ஸன். ஆபத்தில்லாத உளறல் தலைவர் என்றே அவருடைய பிம்பம் உருவானது. அந்த ஆளுமையே அவர் யாரென்று யாராலும் சரியாக அடையாளம் காண முடியாமல் தடுத்தது. பத்திரிகையாளர்களுக்கு அவர் மிகவும் நெருங்கியவராகிவிட்டார். இத்தகைய குணங்களால் அவரால் லண்டனுக்கு இருமுறை மேயராக முடிந்தது.

தவறாகப் பேசுவது, மன்னிப்புக் கேட்பது

தாட்சரின் சீடகோடியாக அவர் எழுதிய அரசியல் கட்டுரைகளில் ஆப்பிரிக்கர்களுக்கு அவர் சூட்டிய அடைமொழிகளும் அவர்களைப் பற்றிய வர்ணனைகளும் பலத்த கண்டனங்களை எழுப்பின. யாரையாவது தனது எழுத்தாலும் பேச்சாலும் உசுப்பிவிட்டுக்கொண்டே இருப்பார். காலனிகளைப் பிடித்து வைத்திருந்த நாடுகள் தங்களுடைய பழைய செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும் என்பார். இப்படி பேசுவதற்காக யாராவது கண்டித்தால், கோமாளியைப் போல எதையாவது பேசிச் சமாளித்துவிடுவார். பேசியதற்காகவும் எழுதியதற்காகவும் அவர் கேட்ட மன்னிப்புகள் ஏராளம்.

வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் பதவி வகித்த காலம் வசந்தமாக இல்லை. காமன்வெல்த் அலுவலகமும் வெளியுறவு அமைச்சகமும் பழைய பேரரசின் எச்சங்களாகவே தொடர்கின்றன. இதனால், பிரிட்டனின் பழைய பெருமையை, மக்களுக்கு அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார். இப்படித் தனது ஆதிபத்திய உணர்வை போரிஸ் ஜான்சன் அடிக்கடி வெளிப்படுத்துவதைப் பழமைவாதிகள் மிகவும் ரசிக்கின்றனர்.

காப்பாற்றுகிறது கவர்ச்சி

எல்லாவற்றையும்விட ட்ரம்பைப் போலவே தனது அடிப்படைக் கொள்கைகள் சரியானவை என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறார். பத்திரிகை ஆசிரியர்களுக்குத் தனது பேச்சால் தீனிபோடுகிறார், டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு நிறைய வேலை தருகிறார், சமூக ஊடகங்களுக்குத் தினமும் விமர்சிக்க எதையாவது தந்துகொண்டே இருக்கிறார். தலைமைப் பதவிக்குத் தேர்தல் என்றால் - தன்னிடம் எது இருக்கிறதோ இல்லையோ - கவர்ச்சியால் கவனம் பெற்றுவிடுகிறார்.

ஈடன் பல்கலைக்கழகத்தில் பயின்று பிரிட்டனின் பிரதமரானவர்களில் ஜான்ஸன் இருபதாவது ஆள். கொண்டாட்டம் மட்டும் அவருடைய குணமல்ல, அற்பமான சிந்தனைகளும் பேச்சுகளும்கூட அவருடைய சொத்தாக இருக்கின்றன. இதன் விளைவு என்ன? உச்சத்துக்குப் போய், பிறகு சரக்கில்லாமல் உருண்டு விழுவதுதான் நடைபெறும்; அதன் எதிர்விளைவு மிகவும் கசப்பாகவே இருக்கும். டோரி கட்சிக்கும் இது அந்திமக் காலச் சிக்கலாகவும் மாறிவிடக்கூடும். அக்கட்சி அப்படி முடிவது பிரிட்டனுக்கு நல்லதல்ல. ஆனால்!

‘தி டிவிட்டரிங் மெஷின்’ நூலின் ஆசிரியர்,
லண்டனைச் சேர்ந்த எழுத்தாளர்.
தமிழில்: சாரி

மன்னர்பிரெக்ஸிட்டர்பிரிட்டன்ட்ரம்ப்ரிச்சர்ட் சீமோர்வலதுசாரி சிந்தனையாளர்கள்போரிஸ் ஜான்சன்மன்னிப்புக் கேட்பது

You May Like

More From This Category

More From this Author