Published : 20 Jul 2015 09:10 AM
Last Updated : 20 Jul 2015 09:10 AM

சிறை சென்றுவந்த ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஓக்லஹாமா நகரில் உள்ள எல் ரெனோ மத்தியச் சிறைக்கு வியாழக்கிழமை சென்று பார்வையிட்டார். பல ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைகள் அனுபவித்துவரும் அமெரிக்கர்களுக்கு நீதி வழங்கும் முயற்சியாகச் சிறைக்குச் சென்றிருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் அதன் அதிபர் ஒருவர் மத்தியச் சிறைக்குள் நுழைவது இதுவே முதல் முறை.

ஒரு தலைமுறையைச் சேர்ந்த லட்சக்கணக்கான அமெரிக்க மக்களைச் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைத்த அக்கிரமத்தை எதிர்த்துக் குரல்கொடுத்தார் ஒபாமா. குறிப்பாக, எண்ணிலடங்காக் கறுப்பின மக்களும், அவர்களுடைய குடும்பத்தினரும், முறையாக வரி செலுத்திவந்த குடிமக்களும் ஏன் ஒட்டுமொத்தச் சமூகமே இதனால் பாதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

சிறையைப் பார்வையிட்டுத் திரும்பிய பிறகு, “நானும் நீங்களும் அவ்வளவு ஏன், பெரும்பாலானவர்கள் செய்துவரும் தவறுகளைத்தான் இந்த இளைஞர்களும் செய்திருக்கிறார்கள். ஆனால் என்ன, செய்த தவறுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க அவர்களுக்கு உகந்த சூழலோ, பலமான பின்னணியோ, இரண்டாம் வாய்ப்போ அளிக்கப்படவில்லை என்பது மட்டும்தான் ஒரே வித்தியாசம்” எனப் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஒபாமாவின் இந்தக் கூற்றுக்கு ஒப்பான வார்த்தைகளை நீதித் துறையில் பதவி அதிகாரம் உடைய முன்னாள் அரசு வழக்கறிஞர் எரி ஹோல்டர் ஜூனியர் இதற்கு முன்பே கூறியுள்ளார். இருப்பினும், ஒரு அதிபரிடமிருந்து வெறும் வார்த்தைகளாக அல்லாமல் செயல் வடிவில் இவ்விஷயம் வெளிவருவது கவனத்துக்குரியது.

போதை வஸ்துக்கள் பயன்படுத்திய குற்றங்களுக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் 46 சிறைவாசிகளின் தண்டனைக் காலத்தைச் சென்ற திங்கள் அன்று குறைத்தார். 30,000-க்கு அதிகமான அமெரிக்கர்கள் இதுபோன்ற குற்றங்களுக்காகக் கொடூரமான தண்டனைகளை அனுபவித்துவருகின்றனர். இருப்பினும், ஒபாமாவின் இந்த முதல் முயற்சியை நல்ல சமிக்ஞையாகக் கருதலாம்.

‘கொடூரமான குற்றச் செயல்கள் புரிந்தவர்களால் மத்தியச் சிறை நிரம்பி வழியவில்லை. மாறாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் புரிந்ததற்காக உச்சபட்ச தண்டனை விதிக்கப்பட்டவர்களே இங்கு அதிகம்’ என அமெரிக்கப் பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினருக்கான அமைப்பு ஒருங்கிணைத்த கூட்டம் ஒன்றில் பேசினார் ஒபாமா. அப்போது, “நீங்கள் போதைப் பொருள் வியாபாரி என்றால், நன்னடத்தைக்கான தண்டனைக் குறைப்பு உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். அதற்காக நீங்கள் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ அனுபவிக்க வேண்டியதில்லை” என்றார். மேலும், ‘‘இதுபோன்ற கொடூரமான தண்டனைகள் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியது நீதிபதிகளின் கடமை’’ எனவும் குறிப்பிட்டார்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சிறிய தவறிழைத்தவர்கள் என்று சொல்லித் தினந்தோறும் நாடு முழுவதிலும் இருந்து 80,000 மக்கள் சிறைப் பிடிக்கப்படுகிறார்கள். “ஒரு குறுகிய சிறை அறைக்குள் பலரை 23 மணி நேரம் தொடங்கி, மாதக் கணக்கிலும், ஏன் ஓர் ஆண்டுவரைக்கும் அடைத்து வைப்பதில் என்ன அர்த்தம் உள்ளது எனக் கேள்வி எழுப்பினார். இதை நீதித் துறை பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

‘‘அடித்தட்டு மக்களுக்கான வசதிவாய்ப்புகள் அதிகரித்தால் மட்டுமே இச்சூழலைச் சரி செய்ய முடியும் என்றவர், முன்னாள் சிறைவாசிகளுக்கு வேலைவாய்ப்பு, குடியிருப்பு, ஓட்டுரிமை உள்ளிடவை மறுக்கப்படக் கூடாது. ஒடுக்கப்படாமல் இருப்பது மட்டும் நீதி அல்ல. நல்ல வாய்ப்புகள் அளிக்கப்படுவதே உண்மையான நீதி” என்றார்.

இதில் தனக்குரிய அதிகாரம் குறைவுதான் என்றவர், இத்தனை காலம் கடுமையான சிறை தண்டனைச் சட்டங்களைப் பிறப்பித்த காங்கிரஸ் மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் முயன்றால் மட்டுமே இதை மாற்ற முடியும் என்றார். ஒபாமாவின் இத்தகைய எழுச்சிமிகு முயற்சிக்குப் பல்வேறு எதிர்வினைகள் வந்துகொண்டிருக்கின்றன.

“இந்தப் பிரச்சினை மோசமடையக் காரணம், நான் கையெழுத்திட்டுப் பிறப்பித்த ஒரு மசோதா. நான் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” எனப் புதன்கிழமை அன்று முன்னாள் அதிபரும் 1994-ல் அமெரிக்க சிறை சட்டத்தைக் கடுமையாக மாற்றியவருமான பில் கிளின்டன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த தருணமாகும்.

'தி நியூயார்க் டைம்ஸ்' அமெரிக்க நாளிதழ்

தமிழில் சுருக்கமாக: ம.சுசித்ரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x