Published : 09 Aug 2019 08:56 AM
Last Updated : 09 Aug 2019 08:56 AM

இளைஞர்களிடம் பெருகிவரும் வன்முறைக் கலாச்சாரம்

சிவபாலன் இளங்கோவன்

எந்த ஒரு விஷயத்தையும் சுயஅறிவின் வழி அணுகாமல், உடனடியான உணர்வெழுச்சியின் வழியாக அணுகும் போக்கு இன்றைய இளைஞர்களிடம் மிகவும் அதிகமாகியிருக்கிறது. இளைஞர்களின் மனதில் வெறுப்பும் வன்மமும் மிகச் சுலபமாக விதைக்கப்படுகிறது. அந்த வெறுப்பையும் வன்மத்தையும் வெவ்வேறு தருணங்களில் அவர்கள் வெளிப்படுத்திக்கொண்டே செல்கிறார்கள். அதுவும் கும்பலாகக் கூடிவிட்டால், அந்த வெறுப்பு விஸ்வரூபம் எடுக்கிறது. அதன் வெளிப்பாடுகளைத்தான் நாம் அவ்வப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் ஒன்றுதான், சமீபத்தில் சாலையில் அரிவாள்களோடு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டது.

மாணவர்களிடையே பரவும் வன்முறைக் கலாச்சாரத்தையும் ஆயுதப் புழக்கங்களையும் நாம் மேற்கத்திய நாடுகளில்தான் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், சமீப காலங்களில் வெவ்வேறு வடிவங்களில் அது நம்மைச் சுற்றி நடக்கத் தொடங்கியிருக்கிறது. ஒரு விசாலமான பார்வையோ லட்சியமோ சுயசிந்தனையோ இல்லாத இளைஞர்களின் உணர்வுகளை மிகச் சுலபமாகத் தூண்ட முடியும். ஒரு காய்ந்த தீக்குச்சிபோல அவர்களின் உணர்வுகள் எப்போதும் பற்றி எரியத் தயாராகவே இருக்கின்றன. அந்த அதீத உணர்வெழுச்சியை நெறிப்படுத்தவும் கட்டுக்குள் வைக்கவும் ஒரு சமூகம் தன்னளவில் தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்பதுதான் இங்கே துரதிர்ஷடவசமானது.

சினிமா எனும் அபாயம்

கடந்த காலங்களில் இளைஞர்களின் உணர்வெழுச்சியை நேர்மறையான வழிகளில் நெறிப்படுத்துவதற்கு ஆளுமைகள் இருந்தார்கள். அந்த ஆளுமைகளுக்கும் இளைஞர்களுக்கும் இருந்த இணக்கமும் தொடர் உரையாடல்களும் அவர்களை மிகக் கவனமாகக் கையாள உதவின. இளைஞர்களின் இந்த அதீத உணர்வெழுச்சியை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு மடைமாற்றி அதைச் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும்படி மாற்றிக்கொண்டார்கள். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லாததன் விளைவாக இளைஞர்களின் அத்தனை கவனத்தையும் சினிமாவும் இணைய ஊடகமும் முழுமையாகத் தங்கள் பக்கம் ஈர்த்துக்கொண்டன.

இதையெல்லாம் சினிமா பொறுப்புடன் அல்லவா கையாண்டிருக்க வேண்டும்? ஆனால், அதைச் செய்யத் தவறியது மட்டுமின்றி, வன்முறையை அத்தனைக்குமான தீர்வாக மிகைப்படுத்தியும் விட்டது. எந்த ஒரு பிரச்சினைக்கும் அறத்தின் வழியும், அஹிம்சையின் வழியும் நின்று தீர்ப்பதை சினிமாவின் கதாநாயக பிம்பங்கள் ஒருபோதும் செய்வதில்லை. சினிமா கதாநாயகர்களைத் தங்களின் ஆதர்ச பிம்பமாக உள்வாங்கிக்கொள்ளும் இளைஞர்களோ வன்முறையை நியாயப்படுத்தும் அவர்களின் போக்கையும் சேர்த்தே உள்வாங்கிக்கொள்கிறார்கள்.

சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், கல்லூரி மாணவர்களிடம் நெறியாளர் சில கேள்விகளைக் கேட்டார்: ‘பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’, ‘அரசியலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’, ‘இந்தச் சமூகத்தில் இளைஞர்களாகிய உங்களின் பங்கு என்ன?’ அதற்கான அவர்களின் பதில்களைப் பார்த்து எனக்குள் ஒரு அச்சம் தொற்றிக்கொண்டது. ‘பெண்கள் என்றால் ஆண்களை ஏமாற்றுபவர்கள்’, ‘அரசியல் என்றால் ஊழல்’, ‘சமூகமா? அப்படி என்றால் என்ன?’ இப்படித்தான் இருந்தது அவர்களின் பதில். இன்னும் சில பேர் ‘நோ கமென்ட்ஸ்’ என்பதைப் பதிலாகத் தந்தார்கள். இந்த பதில்களில் ஒளிந்திருக்கிறது நமது இளைய சமூகத்தின் உண்மையான முகம். அவர்களிடம் எதைப் பற்றியும் ஒரு தெளிவான பார்வை இல்லை, அவர்களுக்கென்று ஒரு கருத்து இல்லை, தனிப்பட்ட விஷயங்களுக்குக்கூட சொந்தமாக அபிப்பிராயங்கள் இல்லை. சுயசிந்தனை அற்றவர்களாகவே பெருங்கூட்டம் இருக்கிறது. அவர்களுடைய கருத்தாக வெளிப்பட்டது அத்தனையும் சினிமா வசனங்கள்தான். சினிமா அவர்களது சிந்தனையை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது.

அசட்டுத்தனங்களில் திளைக்கும் இளைஞர்கள்

அவர்களிடம் சென்று ‘உங்களுக்குப் பிடித்தது எது?’ என்று கேட்டால்கூட அவர்களுக்குத் தெரியாது. எதைச் சொன்னால் மற்றவர்களுக்குப் பிடிக்குமோ அதையே தனக்குப் பிடித்ததாகச் சொல்வார்கள். தன்னைப் பற்றியோ, தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றியோ, சமூகத்தைப் பற்றியோ அவர்களிடம் எந்தப் புரிதலும் இல்லை. அவர்களது நடவடிக்கைகளை அந்தந்த நாளே தீர்மானிக்கின்றன. கேளிக்கைகளையும் வெற்று கவனஈர்ப்பையும் தவிர, அவர்களின் அன்றாட வாழ்வில் வேறு எதுவுமில்லை.

போதைப் பொருட்கள், விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள், வித்தியாசமான சிகை அலங்காரம் போன்ற அசட்டுத்தனங்களில் அவர்கள் ஈடுபடுவதுகூட கவனம்ஈர்க்கும் ஒரு உத்தியே. தான் சார்ந்த குழுவின் மைய கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதன் மூலம் தனது சுயத்தை நிரூபிக்கும் அங்கீகார வெறி மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. அதன் பிறகு கிடைத்த இந்த அடையாளத்தைத் தக்கவைப்பதற்காகத் தன்னை ஒரு வீரதீர ஆண்மகனாகச் சித்தரிக்க விரும்புகிறார்கள். அதற்காக இவை போன்ற வன்முறைச் சம்பவங்களை உருவாக்கிக்கொண்டு அதில் அணிதிரள்கிறார்கள். தன்னை முன்னிறுத்துவதும், தனது அதிகாரத்தன்மையை நிறுவுவதும் மட்டுமே இந்தச் சம்பவங்களின் அடிப்படை நோக்கம்.

கட்டற்ற சுதந்திரத்தின் ஊறு

சமூகத்திலிருந்து இன்றைய இளைஞர்களில் சிலர் விலகி தங்களை மட்டும் தனியொரு அதிகாரமாகக் காட்ட முற்படுவதும், சகமனிதர்களின் மீதான கரிசனங்களும் அறவுணர்ச்சியும் குறைந்துபோயிருப்பதும்தான் இளைஞர்களுக்கிடையே ஊடுருவியிருக்கும் வன்முறைக் கலாச்சாரத்துக்கான அடிப்படை உளவியல்.

பதின்ம வயதில் ஒரு இளைஞரின் பார்வையில் அவருக்கென்று இருக்க வேண்டிய சுதந்திரங்கள் ஓரளவு நியாயமானதாகத் தெரிந்தாலும்கூட வாழ்க்கை நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இந்த ‘கட்டற்ற சுதந்திரம்’ என்பதால் புறந்தள்ளப்பட்டிருப்பது ஆரோக்கிய மானதல்ல. ‘சுதந்திரம்’ என்பதை முற்றிலும் தங்களுக்குச் சாதகமானதாக மாற்றிக் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு மோசமான முன்னுதாரணங்களாகவே மாறிக்கொண்டிருக் கின்றன.

நமது இளைஞர்களில் சிலர் நிச்சயம் தடம் மாறிக் கொண்டிருக்கிறார்கள். லட்சியவாத எண்ணங்களோ எதிர்காலக் கனவுகளோ அவர்களுக்கு இல்லை. சிறு தோல்வியையும் அவமானங்களையும் வலியையும் தாங்குவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை. சகிப்புத்தன்மை குறைந்திருக்கிறது. இதன் பின்னணியில் பல சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவை அத்தனையிலிருந்தும் இளைஞர்களை மீட்டெடுப்பது மிக அவசியமான ஒன்று.

இளைஞர்களிடம் இந்த வன்முறைக் கலாச்சாரம் பரவிவருவதையும், அது சார்ந்த குற்றவுணர்ச்சி கொஞ்சமும் இல்லாததையும் நாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் பச்சையப்பன் கல்லூரி சம்பவத்தை வெறும் அந்த மாணவர்களின் பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது. அப்படி நினைத்துக்கொண்டு, அவர்கள் கழிப்பறையில் வழுக்கி விழுவதைக் கைதட்டி ரசித்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், வழுக்கி விழுவது அவர்கள் அல்ல; ஒரு பக்குவப்பட்ட, அறிவார்ந்த எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் பொறுப்பிலிருந்து நாம்தான் வழுக்கி விழுகிறோம்.

- சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: sivabalanela@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x