Published : 09 Aug 2019 08:54 AM
Last Updated : 09 Aug 2019 08:54 AM

டோனி மாரிஸன்: அமெரிக்காவின் எழுத்துப் பாட்டி

அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் எழுத்தாளரான டோனி மாரிஸன் தன் 88-வது வயதில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதியன்று காலமானார். 1931-ல் ஆப்பிரிக்க-அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த டோனி மாரிஸனுக்கு சிறுவயதிலிருந்தே இலக்கிய ஈடுபாடு அதிகம். ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான ஹோவர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்ற டோனி, அங்கேயே ஆசிரியராகவும் திரும்பிவந்தார்.

1958-ல் கட்டிடக்கலை நிபுணர் ஹெரால்டு மாரிஸனைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர். 1964-ல் விவாகரத்து ஆனதையடுத்து, ஒற்றைப் பெற்றோராகத் தனது இரண்டு பிள்ளைகளையும் டோனி வளர்த்தார். 1965-ல் அவருக்குப் பிரபல பதிப்பகமான ரேண்டம் ஹவுஸில் பதிப்பாசிரியராக வேலை கிடைக்கிறது. அங்கே வேலைபார்த்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு தன் படைப்புப் பயணத்தை ஆரம்பித்தார். இவர் எழுதியிருக்கும் 11 நாவல்களும் முழுக்க முழுக்க ஆப்பிரிக்க-அமெரிக்கர் துயரத்தைப் பேசுபவை. இவற்றில் பலவும் விற்பனையில் சாதனை படைத்தவை. குறிப்பாக ‘சாங் ஆஃப் சாலமன்’, ‘சுலா’, ‘பிலவ்டு’ போன்ற நாவல்கள் இவருக்கு சர்வதேசப் புகழைப் பெற்றுத்தந்தன. புலிட்சர் பரிசில் ஆரம்பித்து நோபல் பரிசு (1993-ல்) வரை இவர் வென்ற விருதுகளின் பட்டியல் நீளமானது. ‘அமெரிக்காவின் பாட்டி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட டோனி மாரிஸனுக்கு 2012-ல் அந்நாட்டின் உயரிய அங்கீகாரமான ‘பிரெஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ வழங்கியது. ஒரு சமூகம் தன் எழுத்தாளரை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதற்கு டோனி மாரிஸனை அமெரிக்கா கொண்டாடுவதை உதாரணமாகக் கொள்ளலாம்! ‘நாம் இறந்துபோகிறோம். அதுவே வாழ்வின் அர்த்தமாக இருக்கலாம். ஆனால், நாம் மொழியைச் செய்கிறோம். அது நம் வாழ்க்கையின் அளவுகோலாக இருக்கக்கூடும்’ என்றார் டோனி மாரிஸன். மொழியைச் செய்ததன் மூலம் வாழ்க்கையை அளந்துவிட்டுப்போயிருக்கிறார், சென்றுவாருங்கள் டோனி மாரிஸன்!
அருகில் ஒருவர் நெருங்கிச் சாய்கிறார்
உன் கண்கள் உதிர்த்த உப்பைக் காண்கிறார்.
வெறுமையான நாளை நோக்கி
உன்னை அடித்துச் செலுத்தும் அல்லது உறங்க வைக்கும்
தர்க்கத்தின், காதலின் அல்லது விளையாட்டின் சொற்களைக்
கேட்க ஏங்கிக் காத்திருக்கிறாய்.
உதிர்ந்திறங்கி இங்கே இந்த அறைகளை
மூட்டமாக நிறைக்கும்
நொறுங்கிய விண்மீன் சாம்பல் குறித்த உன் பயத்தை
அமைதி பிசைகிறது.
ஓடுவதற்குத் தயாராக உன் இதயத்தைத் திரட்டிக்கொண்டுள்ளாய். நிற்க.
குறுகிய வழியைக் குறிக்கும் அறிகுறியோ வடிவமைப்போ ஏதும் தெரியவில்லை.
அப்புறம் உன் தோலில் ஒரு மூச்சு தடவிக்கொடுக்கிறது
உன் கண்கள் சிந்திய உப்பு.
மேலும் ஒரு அழைப்பைத் தெளிவாக, அவ்வளவு தெளிவாக நினைவுகூர்கிறாய்
“நீ ஒருபோதும் மறுபடியும் இறப்பதில்லை.”
இன்னொரு முறை தெரிந்துகொள்கிறாய்
நீ ஒருபோதும் மறுபடியும் இறப்பதில்லை
என்பதை.

டோனி மாரிஸனின் கவிதை இது. மொழிபெயர்ப்பு: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x