Published : 08 Aug 2019 07:48 AM
Last Updated : 08 Aug 2019 07:48 AM

பத்மநாப் ஜைனி ஏன் ஒரு முன்னுதாரண மேதை?

ராமசந்திர குஹா

பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1998-ல் பணியாற்றுகையில் என்னைவிடப் பல மடங்கு கற்றவரும், வயதில் மூத்தவருமான பத்மநாப் ஜைனி என்பவரின் நட்பு கிட்டியது. பௌத்தம், சமணம் ஆகிய இரு மதங்களையும் ஆழ்ந்து கற்றவர். ஆறுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஏராளமான நூல்களைப் படித்து ஆராய்ந்தவர். அடக்கமான பண்புள்ளவர், சர்ச்சைகளில் ஈடுபடாதவர், ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவர், எழுத்திலோ – வார்த்தையிலோ யாரையும் காயப்படுத்தாதவர். இந்தக் காரணங்களால் எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. இப்போதும் வாழும் அறிஞர்களில் நான் மிகவும் மதிப்பவர்களில் ஜைனியும் ஒருவர்.

‘யோகயோகா’ (coincidences) என்ற பெயரில், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்களைத் தொகுத்து, 135 பக்கங்களுக்குள் சிறிய நூலொன்றை எழுதியிருக்கிறார் ஜைனி. அவருடைய வாழ்க்கையில் தற்செயலாக நிகழ்ந்த சில சம்பவங்களைச் சுவைபட விவரித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் கடலோரப் பகுதியில் எளிய ஜைனக் குடும்பத்தில் 1923-ல் பிறந்தார் ஜைனி. அவருடைய தந்தையார் கிராமத்தில் பள்ளி ஆசிரியர். தாயார் இல்லத்தரசி. கிராமப்புறத்தில் வாழ்ந்தபோதும் அந்தக் காலத்திலேயே அவருடைய தாயார் கன்னடத்தில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் அச்சேறியிருந்தன. மூடுபித்ரி நகரில் 15-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபங்களைக் கொண்ட கோயில்தான் ஜைனியின் நெஞ்சில் ஆழப் பதிந்திருக்கிறது.

லட்ச தீபத் திருவிழா

“அந்த ஆலயத்தில் நான் கண்டதிலேயே மறக்க முடியாதது லட்ச தீபத் திருவிழா. ஆண்டுக்கொரு முறை விழா நடைபெறும். மிகப் பெரிய திரையைப் போட்டு சந்நிதியை ஒட்டிய பகுதிகளை மறைத்திருப்பார்கள். ஆலயச் சுவரில் ஏராளமான அகல் விளக்குகளை ஸ்வாமி சந்நிதியின் இரு பக்கங்களிலும் வரிசையாக வைத்து திரி போட்டு எண்ணெய் ஊற்றி ஏற்றுவார்கள். எல்லா தீபங்களும் ஏற்றப்பட்ட பிறகு, மின்னல் வேகத்தில் திரையை விலக்குவார்கள். ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஒரே சமயத்தில் எரியும் அந்தக் காட்சி எல்லையில்லாப் பேரின்பக் காட்சியாக விரியும். இந்த உயிர், தான் அடைய வேண்டிய உயரிய ஞானம் எதுவென்பதை விளக்குவதாக அக்காட்சி இருக்கும்” என்று பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார் ஜைனி.

ஜைனி, தான் பிறந்த கிராமத்தில் கன்னடமும் துளு மொழியும் முதலில் பேசக் கற்றார். அவருடைய தந்தையார் இந்தியும் ஆங்கிலமும் கற்றுத்தந்தார். அவருடைய தாயார், ஜைன தீர்த்தங்கரர்களின் பெயர்களை மனப்பாடம் செய்யப் பழக்கினார். தன்னுடைய மகனைச் சிறந்த கல்விமானாக வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் தந்தை. பத்தாவது வயதில் தனது மகனை மராட்டிய மாநிலத்தின் விதர்பா பகுதியில் உள்ள கராஞ்சா என்ற ஊருக்கு, ஆசிரமப் பள்ளிக்கூடத்தில் படிப்பதற்காக அனுப்பிவைத்தார். அத்தகைய கல்வி துளு நாட்டில் கற்றுத்தரப்படுவதில்லை.

இதற்குள் ஜைனி மூன்று மொழிகளில் சரளமாகப் பேச தேர்ச்சி பெற்றுவிட்டார். புதிய இடத்து மொழியைப் பற்றி அவருக்குக் கவலை ஏற்பட்டது. கராஞ்சாவில் முதல் நாள் நடந்ததை அவர் பின்வருமாறு நினைவுகூர்கிறார்: ‘மிகப் பெரிய அந்த விளையாட்டுத் திடலில் நீண்ட நேரம் தனியாகவே நின்றுகொண்டிருந்தேன். மராட்டிய மொழி தெரியாமல் எப்படி இங்கு வாழப்போகிறேன் என்று கவலையுடன் என்னையே கேட்டுக்கொண்டேன். பாடங்கள் எப்படி இருக்கும், எப்படி மராட்டியில் அவற்றைப் படிப்பது என்று நினைத்தவுடனேயே அச்சம் ஏற்பட்டது. உடனே, வீட்டு நினைவு வந்து மேலும் சோகத்தை ஏற்படுத்தியது!’

படிப்பிலே ஆழ்ந்தவுடன் வீட்டைப் பற்றிய நினைவுகளும் கவலையும் பறந்தன. அந்தப் பள்ளிக்கூடத்தின் விதிமுறைகள் கடுமையானவை. எல்லாவற்றையும் நேர அட்டவணைப்படி செய்தாக வேண்டும். மாணவர்கள் அதிகாலை 5 மணிக்குப் படுக்கையிலிருந்து எழுந்துவிட வேண்டும். காலைக் கடன்களை முடித்த பிறகு இறைவழிபாட்டுக்குப் பொது இடத்தில் கூட வேண்டும். காலையில் உணவு தரும் வரை அவரவர் இடத்திலிருந்து படிக்க வேண்டும். உணவு முடிந்த பிறகு, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் முறையான வகுப்புகள் நடைபெறும். மாலையில் உடற்பயிற்சி, இரவில் உணவு, படுக்கப்போகும் முன்பு மீண்டும் இறைவழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

பத்தாண்டுகள் தீவிரமான படிப்புக்குப் பிறகு, கோலாப்பூரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்பட்டார். ஜைன மதம் குறித்து அங்கு மேலும் விரிவாகக் கற்றுத்தந்தனர். 1943-ல் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். இளங்கலை பட்டம் பெற நாசிக் நகருக்குச் சென்றார். பையன்களுக்கான விடுதியில் இவரை வார்டனாக நியமித்தார் அன்புமிக்க ஒரு ஜைனத் தனவந்தர். கல்லூரிப் படிப்புக்குத் தேவைப்படும் பணத்தை, அந்த விடுதி மாணவர்களுக்குப் பாடம் நடத்திச் சம்பாதித்தார். நாசிக் நகரில் சம்ஸ்கிருதம், பிராகிருதம் கற்றார். அவருடைய புலமையையும் ஆற்றலையும் கண்டு மகிழ்ந்த கல்லூரி முதல்வர், ‘உனக்கு இந்த ஊர் படிப்பு மட்டும் போதாதப்பா, மிகப் பெரிய நகரில் போய்ப் படித்துப் புகழ்பெற வேண்டும்’ என்று யோசனை கூறி வாழ்த்தினார்.

ஆசிரியர்களுக்குப் புகழாரங்கள்

அதன் பிறகு, குஜராத்தின் ஆமதாபாத் நகருக்குச் சென்றார். அங்கு அவர் முதுகலைப் படிப்பை முடிக்க, அதே தனவந்தர் சாப்பாட்டுக்கும் தங்குவதற்குமான செலவை ஏற்றார். மகாத்மா காந்தி வசித்த ஆமதாபாத் நகர வீதிகளில் குஜராத்தியையும், வகுப்பறையில் பாலி மொழியையும் கற்றார். இப்போது அவருக்கு ஜைன மதம் போலவே பௌத்தத்திலும் ஆர்வம் அதிகரித்தது. இரு மதங்களின் மத நூல்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்து கற்றார்.

1949-ல் எம்.ஏ., பட்டம் பெற்றார். அதற்கு முந்தைய ஆண்டுதான் காந்தி மறைந்தார். அவர் இறப்பதற்கு முன்னால் தன் நண்பர் தர்மானந்த் கோசாம்பி பெயரில், கல்வி உதவித்தொகைகள் வழங்க அறக்கட்டளை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். காந்தியின் இன்னொரு சீடரான காகா கலேல்கரை வெகு தற்செயலாக அங்கு சந்தித்தார் ஜைனி. கோசாம்பி பெயரிலான முதல் கல்வி உதவித்தொகை ஜைனிக்கு வழங்கப்பட்டது. பாலி மொழியை நன்கு கற்பதற்கு அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அவர் கொழும்பு நகரில் இருந்தபோது பௌத்தர்களுக்கு, உலக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கொழும்பு மாநாட்டில் பங்கேற்ற பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கர், ‘சாதிப் பிணக்குகள் நிரம்பிய இந்தியாவுக்கு பௌத்தமே ஒரே மீட்சி’ என்று மிகுந்த கரகோஷத்துக்கிடையே அறிவித்தார்.

பத்மநாப் ஜைனியின் சுயசரிதையில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவென்றால், தன்னை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு அவர் செலுத்தியுள்ள புகழாரங்கள். துளுநாடு, கராஞ்சா, கோலாப்பூர், நாசிக், ஆமதாபாத், பம்பாய், கொழும்பு ஆகிய இடங்களில் தனக்குக் கற்றுத்தந்த ஆசிரியர்களை நன்றிப் பெருக்கோடு விவரித்திருக்கிறார். அவர்களுடைய தனித்துவமான குணங்கள், அறிவார்ந்த தன்மை, அவர்கள் தனக்குக் கற்றுத்தந்தது என்ன என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் ஜைனி

ஜைனி தானே எழுதிப் பதிப்பித்த நூல்கள் இப்போது அமெரிக்க அகாடமியின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 1967-ல் மனைவி, இரண்டு குழந்தைகள் உடன்வர, ஆன் ஆர்பர் நகரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். ‘பசிபிக் பெருங்கடலோர நகரில் வாசம். நெல்லிகார், மூடுபித்ரி, கராஞ்சா, நாசிக், ஆமதாபாத், பனாரஸ், லண்டன், ஆன் ஆர்பர் என்று பயணித்த என்னுடைய வாழ்க்கை ரயில், கடைசியாக அழகிய இந்த பெர்க்லி நிலையத்தை அடைந்துவிட்டது’ என்று குறிப்பிடுகிறார்.

எந்தத் தகவல் வேண்டுமானாலும் இணையத்தில் கிடைக்கும் இந்த யுகத்தில் இருந்துகொண்டு, படிப்புக்காக மிக நீண்ட தொலைவு இள வயதிலிருந்தே பயணப்பட்ட அறிஞரின் வரலாற்றை மிக எளிதாகப் படித்துவிடுகிறோம். கூகுள், யூடியூப் இருப்பதால் நாம் சோம்பேறிகளாகிவிட்டோம். இப்படிப்பட்ட வசதிகள் ஏதுமில்லாமல், தனக்கு ஏற்பட்ட கல்விப் பசி காரணமாக அலைந்து திரிந்து, படித்துப் பெரிய அறிஞராகியிருக்கிறார் ஜைனி.

ஜைனியின் பின்புலமும் அறிவும் அவருடைய தலைமுறையில்கூட மற்றவர்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமானவை. அவருடைய சமகாலத்தவர்களான அமர்த்திய சென், ஜகதீஷ் பகவதியுடன் ஒப்பிட்டாலே இந்த வேறுபாடு புரியும். சென், பகவதி இருவருமே உயர் குலத்தினர், பணக்காரக் குடும்பத்தினர். பிறந்தது முதலே ஆங்கிலம் புழங்கும் குடும்பத்தில் படித்து அறிஞர்களாயினர். சாந்தி நிகேதனில் பணியாற்றிய பேராசிரியரின் மகனாகப் பிறந்தவர் அமர்த்திய சென், அவருக்குப் பெயரிட்டவரே கவியரசர் ரவீந்திரநாத் தாகூர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மிக உயர்வான கல்விக்கூடங்களிலேயே படித்தார். சதீஷ் பகவதியோ உச்ச நீதிமன்ற நீதிபதியின் மகனாகப் பிறந்தவர். அவருடைய சகோதரரும் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். அமர்த்திய சென்னைப் போல, பகவதியும் கேம்பிரிட்ஜில் படித்தார். இருவருக்கும் சொல்லித் தந்தவர்கள் சர்வதேசப் புகழ்பெற்ற பேராசிரியர்கள். இருவரும் மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள்தான் என்றாலும் இந்தியாவில் அதிகம் அறியப்படாதவர்கள்.

சென், பகவதி ஆகியோரை மட்டம்தட்டுவதற்காக நான் ஒப்பிடவில்லை. சென், பகவதி ஆகியோரின் சாதனைகளும் பாராட்டப்பட வேண்டியவையே. மிகச் சாதாரணக் குடும்பத்தில், ஏதோ ஒரு சிற்றூரில் பிறந்தவர் தனது கல்வி வேட்கை காரணமாக, எப்படி உலகின் தலைசிறந்த பேராசிரியர்களில் ஒருவராக முடிந்தது என்பதைக் காட்டவே இதை எழுதுகிறேன். பத்மநாப் ஜைனி குறிப்பிடத்தக்க மனிதர், அறிஞர். அவருடைய நினைவு நூலை ஏராளமானோர் படிக்க ஆசைப்படுகிறேன்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x