Published : 02 Aug 2019 10:01 AM
Last Updated : 02 Aug 2019 10:01 AM

நம்மூரில் ஏன் சாதாரண வீடுகள் கட்டவும் அதீத கான்கிரீட்டை நாடுகின்றனர்?

மு.இராமனாதன்

சொந்த வீடு எனும் லட்சியம் இல்லாத மனிதர்களைக் காண்பது அரிது. தலைக்கு மேல் ஒரு கூரை இருப்பது பாதுகாப்பு உணர்வையும், அந்தக் கூரை நம்முடையதாக இருக்கும்போது பெருமித உணர்வையும் தருகிறது. ‘வீட்டைக் கட்டிப் பார்’ என்ற சொல்லாடல் நம் சமூகத்தில் உண்டு. பணம் மட்டும் அல்லாது, நல்ல திட்டமிடல், ஆகிருதியான ஆட்கள், தரமான பொருட்கள் யாவையும் ஒருங்கிணைக்க வேண்டிய பெரிய சவாலை வீடு கட்டுபவர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் சொல்லாடல்தான் அது. ஆனால், கடந்த காலம்போல அல்லாது தொழில்நுட்பம் வளர்ந்து, படித்துப் பட்டம் பெற்ற தொழில்முறை ஆட்களும் கோலோச்சும் காலம் இது. ஆனாலும், இன்றும் ‘வீட்டைக் கட்டிப்பார்’ என்ற சொல்லாடல் உயிர்ப்புடனேயே நம் சமூகத்தில் இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் தொழில்நுட்பமானது வேலைகளை எளிதாக்கியிருக்கிறதே அன்றி, வீடுகளை உயிர்ப்புடன் ஆக்கவில்லை. ஒரு பொறியாளனாக நம்மூர்களில் இன்று கட்டப்படும் பெரும்பான்மை வீடுகளைப் பார்க்கும்போது தொழில்நுட்பம் சார்ந்த பார்வையையே நம் ஆட்கள் முறையாகப் பெறவில்லையோ என்று தோன்றுகிறது.

அன்றைய வீடும் இன்றைய வீடும்

பழங்காலக் கட்டிடங்களில் மிகுதியும் ஒன்றோ இரண்டோ தளங்கள்தான் இருக்கும். காரணம், தளங்களின் பாரத்தைச் சுவர்கள் தாங்கும். சுவர்களின் பாரம் பெரும்பாலும் கருங்கல் அடித்தளத்தின் வழி பூமிக்குக் கடத்திவிடப்படும். அதிகமான தளங்கள் பாரத்தைக் கூட்டும். சுவர்களின் கனத்தை ஓரளவுக்கு மேல் கூட்ட முடியாது. ஆதலால்தான் பழைய கட்டிடங்களில் தளங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. ஆனால், இப்படியான வீடுகள் ஒரு வசிப்பிடமாகச் சிறந்த சூழலைக் கொண்டிருப்பவை.
நாளடைவில் தளங்களின் எண்ணிக்கை தேவை அதிகமானபோது, கான்கிரீட்டின் வருகை நிகழ்ந்தது; அதன் பயன்பாடு அதிகமானது. தளங்களின் பாரம் கான்கிரீட் உத்தரங்களின் வழி கான்கிரீட் தூண்களுக்கும், இந்தத் தூண்கள் கான்கிரீட் அடித்தளத்தின் வழி நிலத்துக்கும் பாரத்தைக் கடத்துகின்றன. நவீனத் தொழில்நுட்பம் வலிமை மிகுந்த கான்கிரீட்டுக்கும் ஊடுகம்பிகளுக்கும் வழிகோலியிருக்கிறது. ஆகவே, பல மாடிக் கட்டிடங்கள் இன்று சாத்தியமாகின்றன. இந்தப் புதுயுகக் கட்டிடங்களில் சுவர்கள் பாரம் தாங்குவதோ பாரம் கடத்துவதோ இல்லை. அவை வெறும் தடுப்புகளாய் மட்டுமே செயல்படும். அந்நாள் வீடுகளுக்கும் இந்நாள் வீடுகளுக்கும் இடையேயான முக்கியமான வேறுபாடு.

எளிய வீடுகளின் அழகு

சின்ன வீடாக இருந்தாலும், பாரம்பரியக் கட்டுமான முறையைக் கொண்டு கட்டப்படும் எளிய வீடுகளின் அழகே அவற்றின் எளிமையும், சூழலோடு இயைந்த அவற்றின் கட்டுமான முறையும்தான். ஆனால், இன்று பல தளங்களைக் கொண்ட அடுக்ககத்துக்குத் தேவைப்படும் பொருட்களையும் தொழில்நுட்பத்தையும் நம்மூரில் பெரும்பான்மை பொறியாளர்கள் எளிய வீடுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

பழைய வீடுகளில் மேற்கூரைகள் ஓடுகளால் வேயப்பட்டு சரிவாக இருக்கும்; அல்லது செங்கற்களாலும் சுண்ணாம்புச் சுருக்கியாலும் கெட்டிக்கப்பட்ட தளங்கள் தட்டையாக இருக்கும். இவை இரண்டுக்கும் மாற்றாக கான்கிரீட் தொழில்நுட்பம் கனங்குறைந்த தளங்களை வழங்கியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க மாற்றம்தான். ஆனால், ஒரு தளத்தில் ஒரு சின்ன வீடு வேண்டும் என்று வீட்டுக்காரர் கேட்டால்கூட கான்கிரீட் அடித்தளம், கான்கிரீட் தூண்கள், கான்கிரீட் உத்தரங்கள் என்று கான்கிரீட்மயமான வீடுகளே அதிகம் நம்மூரில் கட்டப்படுகின்றன. இது தேவையற்ற செலவு என்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிப்பது; வீட்டில் வசிப்பதற்கான சூழலையும் வலிய நாசமாக்குவதாகும். “ஏன் ஐயா இப்படித் தேவையற்ற விஷயங்களைச் சின்ன வீடுகளின் மீது சுமத்துகிறீர்கள்?” என்று கேட்டால், அதற்கு அவர்கள் வைத்திருக்கும் உடனடி பதில், “இப்படிக் கட்டினால்தான் வீடு வலிமையாக இருக்கும்!”

வலிமையும் எளிமையும் எதிரெதிரானவையா?

உள்ளபடி பாரம்பரியக் கட்டுமான முறை எந்த வகையிலும் வலிமை குன்றியதில்லை; இப்படிக் கட்டப்பட்டு, நீடித்த உழைப்பின் மகத்துவத்தைச் சொல்லும் பல கட்டிடங்கள் தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் உண்டு. சென்னை உயர் நீதிமன்றம், சேப்பாக்கத்தின் பொதுப்பணித் துறை அலுவலகம், மதுரை அமெரிக்கன் கல்லூரி என்று நீளமான பட்டியலே கொடுக்கலாம். இந்தக் கட்டிடங்களைக் காணும்போது அவை வெளிப்பூச்சின்றி செங்கல் தோற்றத்தோடு விளங்குவதைக் காணலாம். பல மேலைநாடுகளிலும், ஒன்றிரண்டு தளங்கள் உள்ள வீடுகள் இப்போதும் இதுபோல செங்கல் புறத்தோற்றத்தோடுதான் கட்டப்படுகின்றன.
இந்தக் கட்டுமானத்தில் உள்ள ஒரே சவால் என்னவென்றால், தரமான ஒரே அளவிலான செங்கற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்; சாந்துக் கலவை ஒரே கனத்தில் அமைந்திருக்க வேண்டும்; மழைநீர் கசியாத வண்ணம் கெட்டிப்பானதாக அது இருக்க வேண்டும்; திறமையான தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். இவை எதுவும் சாத்தியமற்றது அல்ல.
 ஒரே பிரச்சினை என்னவென்றால், இன்றைய பொறியாளர்கள் இந்தப் பொறுப்பை ஏற்கத் தயங்குகிறார்கள். விளைவாக, தேவையில்லாத கான்கிரீட் முறையையும், பெருங்கட்டுமானங்களுக்கு உரிய கடினப் பொருட்களையும் ‘தரம் - வலிமை’ என்ற பெயரில் வீட்டுக்காரர்கள் முதுகில் ஏற்றிவிடுகிறார்கள்.

எந்தத் தரம் எதற்குத் தேவை?

இன்று சிமென்ட், ஊடுகம்பி இந்த இரண்டில் மட்டுமே தரத்தின் பெயரால் பெருவிளையாட்டு நடக்கிறது. ஆனால், எந்தத் தரம் எதற்குப் பயன்படுத்தப்படுவது என்பதை நாம் பார்ப்போம். சிமென்ட்டானது ‘தரம்-33’, ‘தரம்-43’, ‘தரம்-53’ என மூன்று தரங்களில் தயாராகிறது. இந்த எண்கள் மெகா பாஸ்கல் எனும் அலகில் சிமென்ட்டின் தாங்குதிறனைக் குறிப்பன. உதாரணமாக, ‘தரம்-53’ சிமென்ட்டானது, பாலங்களுக்கும் அணுமின் நிலையங்களுக்கும் பல மாடிக் கட்டிடங்களுக்கும் அவசியமான உயரழுத்த கான்கிரீட் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாகும்.

வீடுகளின் தளங்களுக்கான கான்கிரீட்டுக்குத் ‘தரம்-33’ அல்லது ‘தரம்-43’ சிமென்ட்டைப் பயன்படுத்தலாம். சாந்துக் கலவைக்கு ‘தரம்-33’ போதுமானது. பூச்சு வேலைகளில் ‘தரம்-53’ சிமென்ட்டைப் பயன்படுத்துவது உசிதமல்ல. அது கூடுதல் வெப்பத்தைக் கடத்தக் கூடியது. விரைவில் இறுகக் கூடியது. ஆகவே, பூச்சில் விரிசல்கள் வரக்கூடும். ஊடுகம்பிகள் ‘தரம்-415’, ‘தரம்-500’, ‘தரம்-550’ போன்ற தரங்களில் தயாராகின்றன. வீடு கட்டுவதற்குத் ‘தரம்-415’ போதுமானது. ஆனால், தேவைக்கு அப்பாற்பட்ட பொருட்கள் சர்வ சாதாரணமாக நம்மூரில் பயன்படுத்தப்படுகின்றன.

என்ன தீர்வு?

கட்டுமானத் தொழிலை அரசு முறைப்படுத்த வேண்டும். தரமான கட்டிடக் கலைஞர்களையும் பொறியாளர்களையும் ஒப்பந்தக்காரர்களையும் அரசு அங்கீகரிக்க வேண்டும். தொழிலாளர்களுக்குப் பயிற்சிப் பள்ளிகள் தொடங்க வேண்டும். அதேபோல, வீட்டுக்காரர்கள் சான்று பெற்ற தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த ஊக்குவிக்க வேண்டும். தரங்குறைந்த கட்டுமானப் பொருட்கள் புழக்கத்தையும், தேவையற்ற பொருட்களின் பயன்பாட்டையும் கண்காணித்துத் தடுக்க வேண்டும். மேலதிகமாகக் கட்டுமானம் குறித்த அடிப்படைக் கல்வியைப் பொதுமக்களுக்கு வழங்கலாம். பள்ளிப் பிள்ளைகளின் பாடத்திட்டத்திலும் சேர்க்கலாம். முக்கியமாக வீடு கட்டும்போது அது வசிப்பதற்கான, சூழலுக்கு இயைந்த தன்மை எவ்வளவு முக்கியம் என்பது குறித்த விழிப்புணர்வு உண்டாக்கப்பட வேண்டும்.

- மு.இராமனாதன், 
ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x