Published : 02 Aug 2019 09:55 AM
Last Updated : 02 Aug 2019 09:55 AM

ஆடிப்பெருக்கு: பொன்னிக் கரையில் பெண்கள் திருவிழா 

தங்க.ஜெயராமன்

காவிரியின் முகக் களை நம் கண் நிறைந்த காட்சியாகும் நாள் ஆடி பதினெட்டு. நமக்கும் ஒரு நதிக்கும் உள்ள உறவு தன் உச்சத்தில் கலை அழகு கொள்வதை அன்றைய விழாவில் காணலாம். பொன் மினுக்கும் வண்டலை நிலம் பரப்பி வரும் வெள்ளம். அது பொன்னைச் சிந்தி, மணியைச் சிதறி, அகிலும் சந்தனமும் அள்ளி வருமாம். புத்தம் புதிய தாலிச் சரடும், மஞ்சள் பொலியும் முகமுமாகக் கரை நெடுக அன்றைக்குப் பெண்கள் கூட்டம் இருக்கும். புது மணப் பெண்ணுக்கு ஆடி பதினெட்டில் தாலி பிரித்துக் கோப்பது வழக்கம். நாளும் கோளும் அன்று பார்ப்பதில்லை. அன்று பெருகும் காவிரியைப் போல் என்றைக்குமே அவரவர்கள் வீட்டில் மங்களம் பொங்கும் என்ற நம்பிக்கை. காவிரி என்ற ஒரு பெண் ஆயிரம் ஆயிரமாக அவதரித்துக் கரை பொழிவதுபோல் இருக்கும்.
தெருவுக்குச் சொல்லி, ஊரைச் சேர்த்துக்கொண்டு கூட்டமாகத்தான் பெண்கள் காவிரிக் கரைக்குச் செல்வார்கள். புது வெள்ளத்தில் குளித்துக் கரையேறி மணல் வீடு கட்டுவார்கள். அந்த வீட்டுக்குள் தலை வாழை இலைபோட்டு ஒரு படையல் உண்டு. அந்தப் பருவத்தில் வரும் நாவற்பழம், வெள்ளரிப் பிஞ்சு, மாம்பழம், பேரிக்காயோடு ஊறவைத்து வெல்லம் கலந்த பச்சரிசியும் காவிரிக்குப் படையலாகும். பனை ஓலையால் ஆன சிவப்புக் காதோலையும், கருகமணி வளையலும் காவிரிக்குப் பெண்கள் தரும் அணிகலன்கள். கும்பிட்டு முடிந்தவுடன் பழங்களை வெள்ளத்தில் வீசிவிடுவார்கள். பிறகு, ஒருவருக்கொருவர் கழுத்தில் மஞ்சள் தோய்த்த சரடு அணிவிப்பார்கள். வீட்டில் உள்ள ஆண்களுக்கும் வலது மணிக்கட்டில் இந்த சரடு அணிவிப்பது உண்டு.

முகம் பார்க்கும் கண்ணாடி

மஞ்சள் சரடு அணிந்துகொண்ட பெண்கள் கையோடு எடுத்துவந்த கண்ணாடியில் முதலில் தங்கள் முகத்தைப் பார்த்துக்கொள்வது ஒரு வழக்கம். அந்தப் பெண்களின் முகத்தைக் கண்ணாடியாகக் கொண்டு காவிரியும் தன் முகத்தை அங்கே பார்த்துக்கொள்வது போலிருக்கும் அன்றைய காவிரிக் கரை. காவிரி தன் முகக் களையைப் பெண்களுக்கு வழங்கியிருப்பாள். இலக்கிய நயத்தை எட்டும் முயற்சியில் இதை நான் சொல்லவில்லை. ஒரு பண்பாட்டு வழக்கம் தான் எடுத்துக்கொள்ளும் கலை வடிவத்தின் விவரங்களைச் சொல்லிவைத்தேன்.

அப்போது இருந்து இன்று காவிரியில் இல்லாமல் போனது நிச்சயமாக இரண்டு. காவிரி வெள்ளமும் மணல் வீடு கட்டுவதற்கான மணலும். தண்ணீர் கண்ட இடத்தில் இப்போது காவிரியைக் கும்பிடுகிறார்கள். குளம், குட்டை, கிணறு, கை பம்பு, ஆழ்துளைக் கிணறு என்று அங்கே நீர் இருந்தாலும் அல்லது அவை நீரின் அடையாளமாகிவிட்டாலும் அந்த இடத்தில் காவிரியைக் கும்பிடுகிறார்கள். கடல் ஓரத்தில் இருப்பவர்கள் கடல் நீரில் காவிரியைக் கண்டு கடற்கரையில் காவிரியை வணங்குகிறார்கள். அந்த ஆண்டு திருமணமானவர்கள் அதுவரை வைத்திருந்த தங்கள் மணமாலைகளைத் தம்பதிகளாக காவிரிக்குச் சென்று வெள்ளத்தில் விட்டுவிடுவார்கள். அன்றைய தினம் மணப்பெண் தாலிகட்டிப் புடவை என்ற தன் திருமணப் புடவையில் காவிரிக்குச் செல்வார். அது காவிரித் தாயிடம் ஆசி கேட்பது போலிருக்கும். சிறுவர்கள் சப்பரம் கட்டி, சாமி படத்தை அதற்குள் வைத்து காவிரிக்கு இழுத்துச் செல்வார்கள். சில தெருக்களில் சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம், தயிர் சாதம் போன்ற சித்திரான்னங்களைச் செய்து வண்டி கட்டிக்கொண்டு காவிரிக்குச் செல்வதும் இருந்தது. அங்கே பெண்களாகக் கூடியிருந்து அவற்றை உண்டு மகிழ்வார்கள்.  ஆற்றுக்குச் சென்றுவந்ததும் சிலர், அன்றைய நாளில் புலால் உணவும் சமைப்பது உண்டு.

மணல் கூம்புகள்

நீரும் மணலுமாக அள்ளிக் கரையில் ஊற்றினால் அது கூம்பு கூம்பாக வளரும். இந்தக் கூம்புகளைச் சாமியாகப் பாவித்து ஏழு கூம்புகளுக்குப் படையலிட்டுக் கும்பிடுவது சில இடங்களில் வழக்கம். எல்லா இடங்களிலும் காவிரிக் கரையில் மணல் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபடுவதும் உண்டு.

நிலத்தில் பரவி, வயலாகிய புலத்திலும் பரவி நிற்கும் காவிரி என்று பாடியிருக்கிறார்கள் புலவர்கள். காவிரிப் படுகை ஒரு புனல் நாடு என்பதற்கு ஆடி பதினெட்டு சரியான ஆதாரமாக இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அப்போது தண்ணீராகவே இருந்தது. காவிரியும் ஒரு மன அவசரத்தில் விரைவது போலவே வெள்ளமாகச் செல்லும். சமுத்திர ராஜனான தன் கணவனைச் சேரும் அவசரம் அது என்று கவிகள் சொல்லியிருப்பது ஒன்றும் அதீதக் கற்பனையல்ல என்று அன்றைக்குக் கண்டுகொள்ளலாம். இத்தோடு அன்றைக்குக் காவிரிக் கரைக்குச் செல்லும் புதுமணத் தம்பதிகளையும், மஞ்சள் சரடு அணிந்துகொள்ளும் பெண்கள் கூட்டத்தையும் சேர்த்துப் பாருங்கள். காவிரியின் முகக் களை முழுதாகத் தெரியும் உங்களுக்கு.

சாமியும் கலந்துகொள்வார்

அந்தந்த ஊர் பெருமாளும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார். எங்கள் ஊரிலும் தீர்த்தவாரிக்கு அன்றைய நாளில் பெருமாள் காவிரிக்குச் செல்வார். ஸ்ரீரங்கத்திலும் சுவாமி அம்மா மண்டப படித்துறைக்குத் தீர்த்தவாரி காணச் செல்வார். செல்வர் என்ற சுவாமியின் பிரதிமை ஆற்றில் இறங்கித் தீர்த்தவாரி முடிந்ததும் பெருமாள் கோயிலுக்குத் திரும்புவார். எங்கள் ஊர் கோபாலன் கோயிலுக்குத் திரும்பியதும் அவரது நாயகி அவரை எதிர்கொண்டு அழைத்து வருவார். பிறகு, கோயில் முற்றவெளியில் இருவரும் மாலை மாற்றிக்கொள்வார்கள். இருவரும் சேர்ந்தே தாயார் சன்னதி பிரகாரத்தில் ஊர்வலம் வருவார்கள். இதனோடு புது மணத் தம்பதிகள் அன்றைய நாளில் காவிரிக்குச் செல்வதைச் சேர்த்துப் பாருங்கள். ஒரு பழைய பண்பட்டு வழக்கம் எப்படியெல்லாம் புது வடிவங்களை எடுத்து மிளிர்கிறது என்பதை ஊகிக்கலாம்.

இப்போது பெருமாள் ஆற்றுக்குச் சென்று தீர்த்தவாரி நடத்த இயலாது. காவிரியில் தீர்த்தவாரிக்கு நீரில்லை. பெயருக்கு பெருமாள் ஆற்றுக்குச் சென்று திரும்பிவிடுகிறார். வரும் வழியில் அவரை ஒரு மண்டபத்தில் இறக்கி அங்கு அண்டாவில் இருக்கும் நீரில் தீர்த்தவாரி நடத்துகிறார்கள்.

விதைக்கு அலைவதும், புது உழவுமாட்டுக்கு அலைவதும், வயலை விதை விடுவதற்குத் தயார் செய்வதுமாக விவசாயிகள் மும்முரப்படும் நேரம் ஆடி பதினெட்டு. விவசாயம் என்ற மண்ணுடனான போராட்டத்தில் இறங்கும்போது காவிரியை வேண்டிக்கொள்வது இயற்கையை வேண்டிக்கொள்வதாகும். நமக்குக் காவிரியோடு இருக்கும் உறவு பொருளாதார உறவு என்ற அந்த மட்டத்திலேயே நின்றுபோவதல்ல. அதைக் கடந்து அது கலையழகு பெற்ற பண்பாட்டு வழக்கமாகிறது இந்த உறவு. பொருளாதாரத்தால் வரும் மன நிறைவுக்கும் அப்பால் மனித இனம் ஒன்றைத் தேடுவதைக் காட்டுவதுதானே பெண்கள் விழாவான பதினெட்டாம் பெருக்கு!

- தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர்,
‘காவிரி வெறும் நீரல்ல’ நூலின் ஆசிரியர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x