Published : 10 Jul 2015 08:29 AM
Last Updated : 10 Jul 2015 08:29 AM

மாறுவது நம் பார்வையல்ல; நம் முகம்!

பாலஸ்தீனம் தொடர்பான இந்திய அரசின் கொள்கை கடந்த சில ஆண்டுகளாகவே மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அந்தக் கொள்கையை வலுவாக ஆதரித்தோம்; அணி சாரா நாடுகள் இயக்கத்துக்குத் தலைமை வகித்தபோது நம்முடைய ஆதரவு உச்சத்தில் இருந்தது. இப்போதோ இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிப்பதில் தயக்கமும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு காட்டுவதில் மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு இஸ்ரேலிய ராணுவம் நிகழ்த்திய போர்க் குற்றங்கள் தொடர்பான டேவிஸ் அறிக்கையை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐ.சி.சி.) பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கமிஷனில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்துவிட்டார் இந்தியப் பிரதிநிதி. அது ஏன் என்று கேட்டபோது, “சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்படுத்தும் ரோம் சட்ட நடைமுறையில் இந்தியா கையெழுத்திடவில்லை” என்று பதில் தரப்படுகிறது. இது பதில் அல்ல பசப்பல் என்று அனைவருக்கும் தெரியும். 2012-ல் இதே போன்ற தீர்மானம் சிரியா மீது கொண்டுவரப்பட்டபோது இந்தியா ஆதரித்தது. ரோம் சட்ட நடைமுறையில் கையெழுத்திடவில்லை என்று அப்போது நம் நினைவுக்கு வரவில்லை போலிருக்கிறது.

காசா பகுதி மீது இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் அத்துமீறித் தனது குடியிருப்புகளை ஏற்படுத்தியதைக் கண்டித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை இந்தியா ஆதரித்திருக்கிறது. ‘பாலஸ்தீனத்துக்குத் தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு’ என்று இந்திய அரசால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது. இப்போதும், ‘பாலஸ்தீனம் தொடர்பாக இந்திய நிலையில் மாற்றம் இல்லை’ என்றுதான் வெளியுறவுத் துறை தெரிவிக்கிறது. அப்படியானால், இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருந்தது ஏன்? உண்மையான காரணம் என்னவென்றால், இஸ்ரேலுடன் ராணுவ உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. இஸ்ரேல் நாட்டின் ராணுவத் தயாரிப்புகளை அதிக எண்ணிக்கையில் இப்போது வாங்கிவருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் இஸ்ரேலுடன் உறவும், ராணுவக் கொள்முதலும் இருந்தன என்றாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தபிறகு அது வேகம் பெற்றிருக்கிறது. பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்களையும், சர்வதேசச் சட்டங்களையும், உலக நாடுகளின் அறிவுறுத்தல்களையும் மதிக்காமல் முரட்டுத்தனமாகவே நடந்துவருகிறது இஸ்ரேல்.

இஸ்ரேலை இடைவிடாமல் தூக்கிப் பிடிக்கும் அமெரிக்காவே சலித்துக்கொள்ளும் அளவுக்கு இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல்கள் நடந்துவருகின்றன. இத்தனை ஆண்டுகளாக பாலஸ்தீனத்தை - அதன் இயற்கையான நியாயம் கருதி - ஆதரித்துவிட்டு இப்போது ராணுவ ஒத்துழைப்புக்காகத் தடம் மாறுவது இந்திய நாட்டுக்கு அழகல்ல; மனித உரிமைகளையும் சர்வதேச நியதிகளையும் மீறும் இஸ்ரேலிய அரசுக்கு நாம் துணை நிற்கக் கூடாது. சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பும் தீர்மானமானது இஸ்ரேலியர்கள்மீது தாக்குதல் தொடுக்கும் ஹமாஸ் இயக்கத்தையும் கண்டிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய கால அரசியல் லாபத்துக்காக நீண்ட காலமாகப் பின்பற்றி வரும் நல்ல மரபுகளையும் வெளியுறவுக் கொள்கையையும் இந்திய அரசு மாற்றிக்கொள்ளக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x