Published : 31 Jul 2019 08:04 AM
Last Updated : 31 Jul 2019 08:04 AM

காந்தி பேசுகிறார்: நல்ல கல்வி...

நல்ல கல்வி...

இலக்கிய ருசியுள்ள நம் இளைஞர்களும் யுவதிகளும் தாங்கள் விரும்பும் அளவுக்கு ஆங்கிலத்தையும் உலகத்தின் மற்ற மொழிகளையும் கற்க வேண்டும் என்று விரும்புவேன். ஒரு சர் ஜகதீஷ் சந்திர போஸும், ஒரு சர் பி.சி.ரேயும், ஒரு கவிஞரும் (தாகூர்) செய்ததைப் போன்று தாங்கள் கற்றதன் பலனை இந்தியாவுக்கும் உலகத்துக்கும் அளிக்க வேண்டும் என்றும் விரும்புவேன். ஆனால், எந்த ஓர் இந்தியனும் தாய்மொழியை மறப்பதையோ, உதாசீனம் செய்வதையோ, தாய்மொழிக்காக வெட்கப்படுவதையோ, ஆணோ பெண்ணோ சொந்தத் தாய்மொழியில் எண்ணவும் சிறந்த எண்ணங்களைத் தாய்மொழியில் வெளியிடவும் முடியாமல் இருப்பதையோ நான் விரும்பவே மாட்டேன்.
...
என் திட்டத்தின் கீழ் சிறந்த புத்தகசாலைகள் அதிகமாக இருக்கும்; சிறந்த ஆராய்ச்சி நிலையங்களும் இன்னும் அதிக சிறந்த ஆராய்ச்சி ஸ்தாபனங்களும் இருக்கும். அதன் கீழ், விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் மற்ற நிபுணர்களும் ஒரு பட்டாளமே இருப்பார்கள். அவர்கள் நாட்டின் உண்மையான சேவகர்களாக இருப்பார்கள். நாளுக்கு நாள் தங்கள் உரிமைகளையும் தேவைகளையும் உணர்ந்துகொள்ள ஆரம்பித்துவிடும் மக்களின் வளர்ந்து வரும் பலவகைப்பட்ட தேவைகளைப் பூர்த்திசெய்பவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

இந்த நிபுணர்கள் எல்லோரும் அந்நிய மொழியில் பேச மாட்டார்கள். ஆனால், மக்களின் மொழியிலேயே பேசுவார்கள். அவர்கள் பெற்றிருக்கும் அறிவு. எல்லோருக்கும் பொதுவான சொத்தாக இருந்துவரும். இன்னொருவரைப் பார்த்துச் செய்வதாக இல்லாமல் இவர்கள் செய்வது தாங்களாகச் செய்யும் அசலானவையாக இருக்கும்.
...
வாழ்க்கையின் உண்மைகளைத் தெரிந்துகொள்வதில் குழந்தைகளுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பொறுத்தவரையில் - நமக்குத் தெரிந்தால் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்; நமக்குத் தெரியாவிட்டால் நமது அறியாமையை ஒப்புக்கொண்டுவிட வேண்டும். அவர்களுக்குச் சொல்லக் கூடாததாக இருந்தால், அவர்களைத் தடுத்து, இத்தகைய கேள்வியை அவர்கள் மற்றவர்களையும்கூடக் கேட்கக் கூடாது என்று சொல்ல வேண்டும்.

அவர்களை எப்போதும் தட்டிக்கழிக்கவே கூடாது. நாம் நினைப்பதைவிட அவர்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கிறது. அவர்களுக்குத் தெரியாமலிருந்து, நாமும் சொல்ல மறுத்துவிடுவோமானால், ஆட்சேபகரமான வகையில் அக்கேள்விக்குப் பதிலைப் பெற அவர்கள் முயல்வார்கள். ஆனால், அவர்களுக்குச் சொல்லக் கூடாதவற்றின் விஷயத்தில் இந்த ஆபத்துக்கும் தயாராயிருக்க வேண்டியதே. 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x