Published : 31 Jul 2019 07:42 AM
Last Updated : 31 Jul 2019 07:42 AM

இப்படிக்கு இவர்கள்: செபி - மறுபார்வை தேவை!

செபி: மறுபார்வை தேவை!

ஜூலை 29 அன்று வெளியான ‘செபியின் தன்னாட்சி நீடிப்பது அவசியம்’ என்ற தலையங்கம் வாசித்தேன். செபி எனும் தன்னாட்சி அமைப்பின் அலுவல்களில் மத்திய அரசும் நிதி அமைச்சகமும் எந்த விதத்திலும் தலையிடவில்லை. 1990-களில் ‘கன்ட்ரோலர் ஆஃப் கேபிடல் இஷ்யூஸ்’ என்ற நிதி அமைச்சகத்தின் ஒரு பகுதியை செபி கலைத்துவிட்டு, தன்னாட்சி அமைப்பை உருவாக்கியது. அதுவரை குறிப்பிடும்படியான பங்குச் சந்தை மோசடிகள் ஏதுமில்லை. ஆனால், செபி வந்த பின் மிகப் பெரிய பங்கு வர்த்தக மோசடிகள் நடந்தேறின.

அதன் பிறகுதான் ‘ஃப்லை பை நைட் கம்பெனிஸ்’, ‘வானிஷிங் கம்பெனிஸ்’ என்ற புது வகையான கம்பெனிகள் உருவாகின. ‘இன்டிபென்டண்ட் டைரக்டர்ஸ்’ என்ற ஒவ்வாத மேற்கத்திய வழக்கத்தை நடைமுறைப்படுத்தியது. ஆனால், அரசு நிறுவனங்களில் அந்த வழக்கத்தை ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை? தேசிய பங்குச் சந்தையில், அதன் பொறுப்பில் உள்ளவர்களே ஊழல் செய்ததை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? இறுதியாக, செபி என்ற அமைப்பு தன் நிதியை ‘பெனால்டி’ என்ற பெயரில் பெருக்குவதிலும் அந்த நிதியைத் தன்னிச்சையாய் செலவழிப்பதிலுமே கவனம் செலுத்தியது. ஆக, மத்திய அரசின் முடிவை மேற்கண்ட கண்ணோட்டத்தில் அணுக வேண்டியது முக்கியம்.

- கா.முத்துசாமி, மின்னஞ்சல் வழியாக...

எல்லாத் தரப்பு வாதங்களையும் கேளுங்கள்

பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் ‘சமூகத்திடமிருந்து குழந்தைகளைப் பிரித்துவைக்கும் கல்விக் கொள்கை இது!’ (ஜூலை 29) பேட்டி வாசித்தேன். அவரது பதில்களின் வழியாகப் புதிய தேசிய கல்விக் கொள்கையில் எத்தகைய மாற்றங்கள் தேவை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பொதுமக்களின் கருத்துகள், ஊடகங்களில் வெளியாகும் கல்வியாளர்களின் பரிந்துரைகள் என எல்லாத் தரப்பு வாதங்களையும் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டும்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

சமத்துவமற்ற சமூகத்தை உருவாக்க முற்படும் தேசிய கல்விக் கொள்கை

‘சமூகத்திடமிருந்து குழந்தைகளைப் பிரித்து வைக்கும் கல்விக் கொள்கை’ என்று புதிய கல்விக் கொள்கையைப் பற்றி கருத்து தெரிவித்திருக்கும் பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் ஆழமான கருத்துகள் வரவேற்கத்தக்கவை. ஏழைக் கல்வி, பணக்காரக் கல்வி என்று கல்வியைப் பிரிக்கச் செய்யும் அநீதியானது, சமத்துவமற்ற சமூகத்தை உருவாக்கிடும். ஆசிரியர்களைக் கற்பித்தல் பணிக்கு மட்டுமே பயன்படுத்தி கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அவசியம் இன்றைய தேவையாக இருக்கிறது.

- கூத்தப்பாடி மா.பழனி, பென்னாகரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x