Published : 30 Jul 2019 10:01 AM
Last Updated : 30 Jul 2019 10:01 AM

கல்வி தனியார்மயமாவதை நான் கெடுதலாகப் பார்க்கவில்லை: பத்ரி சேஷாத்ரி பேட்டி

பதிப்பக நிறுவனமான ‘நியூ ஹொரைசன் மீடியா (கிழக்கு பதிப்பகம்)’வின் மேலாண்மை இயக்குநர் பத்ரி சேஷாத்ரி, அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கல்வித் துறை குறித்து தீவிரமான பார்வைகளைக் கொண்டவர். ‘நான் நடுநிலையாளன் அல்ல; பாஜக ஆதரவாளன்’ என்று ட்விட்டரில் அவர் பிரகடனப்படுத்திக் கொண்டாலும், கட்சி சார்புக்கு அப்பாற்பட்டு தமிழக வலதுசாரிகளில் நிதானமான, முக்கியமான குரல்களில் ஒன்று அவருடையது. புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து அவர் விரிவாக அளித்த பேட்டியிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்...

தமிழகத்தைப் பொறுத்தவரையில் எல்லா முனைகளிலிருந்தும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இந்த எதிர்வினைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னுடைய பார்வை, இந்த வரைவானது பல்வேறு அம்சங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் முயற்சி என்பதுதான். இந்த வரைவு, நிறைய யோசனைகளைச் சொல்கிறது, முக்கியமான சிந்தனைகளைக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்ற அணுகுமுறைக்கு மாறாக, அனைத்துச் சீர்திருத்தங்களையும் ஒருசேர மேற்கொள்ள வேண்டும் என்கிறது.

இந்தியா மாதிரியான பல்வேறு கலாச்சாரங்களைப் பின்பற்றுகிற ஒரு நாட்டில், கல்வித் துறையில் மத்திய - மாநில அரசு இரண்டுமே பொறுப்பேற்றிருக்கும்போது, தனியார் துறையும் பெரும்பங்கு வகிக்கும்போது, இந்தச் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு ஒரு தேசம் முழுவதும் திரளுமா, அதைச் செயல்படுத்துவதில் எவ்வளவு நடைமுறைச் சிக்கல்கள் வரும் என்ற திகில்தான் வருகிறது.

இது ஒரு தொலைநோக்குப் பார்வை மட்டும்தான், திட்டம் அல்ல. என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களேயொழிய ஏன் செய்ய வேண்டும் என்று சொல்வதில் கொஞ்சம் பலவீனமாகத்தான் தோன்றுகிறது. இதன் காரணமாகத்தான் இந்தப் பரிந்துரையை அளித்திருக்கிறோம், இதைச் செய்யாவிட்டால் இந்தந்தக் கேடுகள் விளையக்கூடும், செய்தால் என்னென்ன நன்மைகள் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. அதனால்தான் இந்த வரைவைப் பற்றிய விமர்சனங்கள் வேறு திசையில் சென்றுகொண்டிருக்கின்றன.

குறிப்பாக, இந்தப் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கக்கூடிய அனைத்துக் கருத்துகளிலும் அந்தப் பிரதியைப் படிக்காமலே அல்லது படிக்கும் முன்பே அதை எப்படியெல்லாம் தவறாக அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம் என்ற அணுகுமுறையுடனேயே இருக்கிறது. கட்சிக்காரர்கள் அப்படித்தான் செய்வார்கள். உள்நோக்கம் கொண்ட தன்னார்வ அமைப்புகள் அப்படித்தான் செய்யும். கல்வியாளர்கள் என்று சொல்லக்கூடியவர்களும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி  மட்டுமே பேசுகிறார்கள். ‘இது கெடுதல், இது கெடுதல்’ என்று சொல்கிறார்களேயொழிய, ஒரு முழுமையான பார்வையை யாரும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. இது இல்லாவிட்டால் வேறு என்ன மாதிரியெல்லாம் நாம் செய்ய வேண்டும் என்று யாரும் பரிந்துரைத்ததாகவும் தெரியவில்லை.

மும்மொழிக் கொள்கை கெட்டது என்று சொல்கிறார்கள். இந்த வரைவை எடுத்துக்கொண்டால், இந்த வரைவிலேயே அது மிகவும் சிறிய பகுதி. அதைப் பற்றி கேள்வி கேட்டால், நீங்கள் விரும்பினால் இரண்டு மொழிகளையே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடப்போகிறார்கள். அதைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகள் இந்த வரைவில் இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் எந்த விவாதங்களுமே இல்லை. எனவே, எனக்கு இந்த வரைவின் மீது ஏமாற்றமில்லை.

இந்த வரைவு மீது தமிழக அரசுக்கோ அதிமுகவுக்கோ எந்தக் கருத்தும் இருப்பதாகத் தெரியவில்லை. திமுகவும் மற்ற கட்சிகளும் இந்த வரைவை எதிர்க்க வேண்டும் என்று ஆரம்பித்துவிட்டன. திமுக போட்டிருக்கும் குழு தங்களது அறிக்கையை எப்போது கொடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. சூர்யாவாக இருக்கட்டும், அவருக்கு ஆதரவு கொடுத்த ரஜினியாக இருக்கட்டும், இவர்கள் யாரும் இந்த வரைவை முழுமையாகப் பார்க்கவில்லை என்று என்னால் சொல்ல முடியும்.

இந்த வரைவுக்கு தமிழக அரசின் என்சிஇஆர்டி ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு கொண்டுவந்திருக்கிறார்கள். ஆங்காங்கே கொலைக்குத்து, கொடூரமாக அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இடதுசாரியினர் சேர்ந்து ஒரு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள். அதுவும் திகிலூட்டுவதாகத்தான் இருக்கிறது. எளிமையான மொழியில் ஒருவர் முதலில் ஒரு சுருக்கத்தைச் செய்தால்கூடப் போதும். வரிக்கு வரி மொழிபெயர்ப்பையெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

அரசு வரைவுக் கொள்கையை வெளியிட்டபோதே பிராந்திய மொழிகளிலும் அதை மொழிபெயர்த்துக் கொடுத்திருந்தால் இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியும் அல்லவா?

ஆமாம். இவ்வளவு மொழிகள் புழங்கிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் பிராந்திய மொழிகளில் இந்த வரைவு கண்டிப்பாக மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து மக்களோடும் தொடர்புள்ள விஷயம் இது. 450 பக்கங்களுக்கு மேல் உள்ள வரைவு இது.

பல முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது. கடைக்கோடி மக்களையும் இது சென்று சேர வேண்டும் என்றால், அனைத்து முக்கிய பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியில்கூட மொழிபெயர்ப்பு வந்ததாகத் தெரியவில்லை. முக்கியமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

வரைவை மொழிபெயர்க்க வேண்டிய வேலையை ஒவ்வொரு மாநிலத்தின் எஸ்சிஇஆர்டியிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். எஸ்சிஇஆர்டியை குறிப்பாக தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அது ஒரு அய்யோ பாவம் அமைப்பு. கல்வித் துறை சார்ந்து ஆங்கிலத்தில் ஒரு பிரதி இருக்கிறதென்றால், வரைவு இருக்கிறதென்றால் அதைப் பொருள் மாறாமல் எளிமையாக மொழிபெயர்க்கக்கூடிய ஆள் யார் என்று கண்டுபிடிக்கக்கூட திறனில்லாத ஒரு அமைப்பு இது.

இதை ஏன் நான் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், தேசம் முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கையை அறிவிக்க நீ யார், எங்களுக்குத் தேவையான கல்விக் கொள்கையை நாங்களே தயாரித்துக்கொள்வோம் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். 1947 தொடங்கி, இப்போது வரைக்கும் தமிழ்நாட்டுக்கு என்று இதுவரை கல்விக் கொள்கை என்று கால் பக்கமாவது எழுதிக்கொடுத்திருக்கிறார்களா? ஆண்டுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் கல்விக்காகச் செலவு செய்கிற மாநிலத்தில் கல்வித் துறை சார்ந்து ஒரு அறிக்கையாவது நம்மிடம் உண்டா? இந்தியாவிலேயே மிக உயர்ந்த கல்வித் தரத்தை எட்டியுள்ளோம் என்ற பேச்சை மட்டும் நாம் விடுவதே இல்லை. மேடைப் பேச்சு மட்டும்தான் நம்மிடம் இருக்கிறதேயொழிய, கல்விக் கொள்கை குறித்து என்ன தொலைநோக்குப் பார்வை நம்மிடம் இருக்கிறது? இந்த வரைவின் மீது எனக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன.

ஆனால், இந்த வரைவுக்கு நெருங்கிவரும் வகையில் ஒரு வரைவை எழுதுவதற்கு முயற்சியாவது இங்கே நடந்திருக்கிறதா? எனக்குத் தெரிந்தவரையில், தமிழகத்தில் கல்விக் கொள்கை குறித்து உருவாக்கப்பட்டதில் முத்துக்குமரன் கமிட்டி முக்கியமானது. சமச்சீர் கொள்கையைக் கொண்டுவருவதற்காக கருணாநிதியின் காலத்தில் உருவாக்கப்பட்ட கமிட்டி அது. அந்த கமிட்டியின் அறிக்கையே இன்னும் நமது பார்வைக்குக் கிடைக்கவில்லையே. நிபுணர் குழுவின் அறிக்கைப்படிதான் சமச்சீர்க் கல்வியை அறிமுகப்படுத்துகிறோம் என்று நீதிமன்றத்தில் காட்டத்தான் அந்த அறிக்கையைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அந்த அறிக்கையிலும் மும்மொழித் திட்டம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் எல்லாமே ஒரு கண்துடைப்பாகத்தான் இருக்கிறது.

இதே குற்றச்சாட்டு மத்திய அரசின் மீதும் வைக்கப்படுகிறது. கஸ்தூரிரங்கன் கமிட்டிக்கு முன்னால் நியமிக்கப்பட்ட சுப்ரமணியன் கமிட்டியின் அறிக்கை வெளியிடப்படவே இல்லையே?

இல்லையில்லை! அந்த அறிக்கை வெளிவந்தது. அதனால்தான், அந்த அறிக்கையைப் பற்றிய விமர்சனங்கள் எல்லாம் முன்வைக்கப்பட்டன. ஆனால், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டவை தற்போதைய அறிக்கையில் இடம்பெறவில்லை. இரண்டு கமிட்டிகளுமே வெவ்வெறு அணுகுமுறைகளைக் கையாண்டன. சுப்ரமணியன் கமிட்டி அறிக்கை ஒரு சில விஷயங்களை மட்டும்தான் கவனத்தில் எடுத்துக்கொண்டது. ஆனால், கஸ்தூரிரங்கன் கமிட்டியின் அறிக்கை கல்வித் துறையில் கீழிருந்து மேலாக அனைத்து நிலைகளிலும் சீர்திருத்தங்கள் அவசியம் என்கிறது.

மாநில அளவில் பாட நூல்களை உருவாக்கும் அமைப்புகள் பலவீனமாக இருக்கின்றன. எனவே, என்சிஇஆர்டியே போதும் என்று சொல்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

இந்த அறிக்கையின் எந்த இடத்திலும் என்சிஇஆர்டியே போதும் என்று சொல்லப்படவில்லை. பள்ளிக் கல்வியைப் பொறுத்தமட்டில், இப்போது இருக்கும் முறையில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து நான்கு வெவ்வேறு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள். கட்டளையாக அல்ல. ஏனென்றால், கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசு இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது.

பள்ளிக் கல்வித் துறைதான் புதிதாக ஒரு பள்ளிக்கூடம் தொடங்குவதற்கு அனுமதிக்கிறது. பள்ளி நிர்வாகத்தையும் அதுதான் கண்காணிக்கிறது. தேர்வுகள் நடத்துவதும் அதே துறைதான். எஸ்சிஇஆர்டி அதன்கீழ் சுதந்திரம் இல்லாத ஒரு குட்டி அமைப்பாக இருந்துகொண்டிருக்கிறது. நீதிபதிகளும் அவர்கள்தான், வழக்கை நடத்துபவர்களும் அவர்கள்தான் என்பதுபோல இருக்கிறது. இந்த முறையை மாற்ற வேண்டும் என்றுதான் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.

எப்படி மாற்றுவது? அனைத்துப் பள்ளிக்கூடங்களையும் கட்டுப்படுத்தும் அனைத்து அதிகாரங்களையும் படைத்த ஒரு தன்னாட்சி அமைப்பு வேண்டும். அந்த அமைப்பு அரசுப் பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள் இரண்டையும் கட்டுப்படுத்தும். பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கான அனுமதியை அந்த அமைப்புதான் வழங்கும். தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்று கண்காணிக்கிற பொறுப்பும் அந்த அமைப்பிடம் இருக்கும்.

இரண்டாவதாக, பள்ளிக் கல்வித் துறை என்பது என்னவாக மாறும்? அரசுப் பள்ளிகளை நடத்தும் ஒரு நிர்வாக அமைப்பாக மட்டுமே இருக்கும். மூன்றாவதாக, எஸ்சிஇஆர்டி என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்ற பலம் பொருந்திய ஒரு அமைப்பாக மாறும். அதன் பணிகள் இரண்டு. பாடத் திட்டத்தை உருவாக்குவது, பாட நூல்களை உருவாக்குவது. இந்த வேலைகள் பள்ளிக் கல்வித் துறையின் வேலைகள் அல்ல. நான்காவதாக, தேர்வுகளை நடத்தி சான்றிதழ் வழங்கும் வேலைகளை இன்னொரு அமைப்பு செய்யும். இப்படிப் பிரிக்கும்போது நிறைய குழப்பங்களைத் தவிர்க்க முடியும். எனவே, இந்தப் பரிந்துரையை நான் ஆரோக்கியமானதாகவே பார்க்கிறேன்.

பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரையில் பாட நூல்களை உருவாக்கவும் தேர்வு நடத்தவும் தனித்தனி அமைப்புகளை அறிமுகப்படுத்துகிற இந்தக் கல்விக் கொள்கை, உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் இந்த அனைத்து அதிகாரங்களையும் ஒருசேர வழங்குவது எப்படி முறையாகும்?

இரண்டு கல்வி முறைகளுமே முற்றிலும் வேறானவை. நாம் எந்தக் காலத்திலுமே பள்ளிக் கல்விக்குத் தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியதே இல்லை. ஆனால், உயர்கல்வியில் ஏற்கெனவே பல நிறுவனங்களுக்கு நாம் தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியாகிவிட்டது. மத்திய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை என்ன கூறுகிறது என்றால், பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கல்லூரிகள் அனைத்தும் அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குள் தங்களது தரத்தை உயர்த்திக்கொண்டு தன்னாட்சி பெற்ற நிறுவனங்களாக வளர வேண்டும் என்கிறது. எனவே, புதியக் கல்விக் கொள்கையில் முரண்பாடு இருப்பதாக நான் நினைக்கவில்லை. உயர்கல்வியைப் பொறுத்தவரை, சூழலுக்கு ஏற்றாற்போல பாடங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் நாள்தோறும் அவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு ஆண்டும் பாடங்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ, ஏழாண்டுகளுக்கு ஒருமுறையே மாற்றினாலே போதுமானது.

இது உயர்கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்கிற உள்நோக்கம் கொண்டது அல்லவா?

தனியார்மயத்தை நான் கெடுதலாகப் பார்க்கவில்லை.

சாமானியர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புக்கு அது தடையாக இருக்காதா?

நிச்சயமாக இருக்காது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் நிறைய பொறியியல் கல்லூரிகள் வந்திருப்பதால்தான் நிறைய பேருக்கு கல்லூரிப் படிப்பே கிடைத்திருக்கிறது. இன்று அந்தப் பொறியியல் கல்லூரிகள் தடுமாற்றத்தில் இருக்கின்றன என்பது வேறு கதை. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை கலை, அறிவியல் கல்லூரிகளை தமிழக அரசு உருவாக்கியிருக்கிறது? ஒன்றிரண்டு பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான். தனியார் கல்வித் துறையில் விருப்பத்தோடு பங்கேற்கிறார்கள்.

உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறிக்கும் ஜிஇஆர் குறியீட்டை அதிகரிக்க வேண்டும் என்றால்,இப்போது நமக்கு இருக்கிற கல்லூரிகள் போதாது. அப்படியென்றால், இன்னும் நாம் பலப் பல கல்லூரிகளை உருவாக்கியாக வேண்டும். எனவே, தனியார் இல்லையென்றால் நாளை நமக்குக் கல்லூரிப் படிப்புக்கு வாய்ப்பே இல்லை.

நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் ஒரு சதவீதத்தைக்கூட கல்வித் துறைக்காக ஒதுக்கத் தயாராக இல்லாத அரசு, சரிபாதிப் பேர் உயர்கல்வி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பது முரண்பாடு இல்லையா?

இரண்டும் வேறு வேறு. குழந்தைகளைக் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோர்களின் விருப்பம். அதை அரசு நிறைவேற்ற முடியவில்லை என்பதற்காக அந்தக் குழந்தைகளைப் படிக்க வைக்காமல் வேலைக்கு அனுப்பிவிடுவார்களா என்ன? பிள்ளைகளின் கல்வி மீது பெற்றோர்களுக்கு அக்கறை இருக்கிறது. அதை நிறைவேற்ற அரசால் முடியவில்லை. அரசு தோற்றுத்தான்விட்டது. கல்வி அரசிடமே இருக்க வேண்டும் என்று முழங்குபவர்களின் ஆட்சிக்காலத்தில்தான் நிறைய தனியார் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அரசு தன்னுடைய வேலையைச் சரியாகச் செய்யவில்லை. தனியாராவது தங்களது விருப்பத்தின்படி செய்கிறார்கள். இந்தக் கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை அரசு கல்வி கொடுப்பதைத்தான் விரும்புகிறோம் என்று சொல்கிறார்கள். இந்த வரைவு அரசுக்காக உருவாக்கப்பட்ட ஆவணமாகத்தான் இருக்கிறது. ஆனால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு, எவ்வளவு கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது? அதைச் செய்யத் தவறினால் மனித வளத்தில் எவ்வளவு சரிவைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி இந்த ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. அது இந்த வரைவின் மிக முக்கியமான குறைபாடு.

தேசிய ஆராய்ச்சி அமைப்பு என்பது அமெரிக்க மாதிரியைப் போலத் தோன்றுகிறதே?

ஆமாம். அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பைப் பின்பற்றியது. அமெரிக்காவின் கூட்டாட்சி அரசு மிகப் பெரிய அளவில் அந்த அமைப்புக்காக நிதி ஒதுக்குகிறது. ஆனால், அது நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு இல்லை. பேராசிரியர்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

இங்கும் பல்கலைக்கழக மானியக் குழு அதைத்தானே செய்துவருகிறது?

எப்படி பள்ளிக்கல்வியில் பல்வேறு மாற்றங்களை இந்த வரைவு கூறியிருக்கிறதோ, அப்படி உயர்கல்வியில் கூறப்பட்டிருக்கும் முக்கியமான மாற்றம், தற்போது இருக்கும் பல்வேறு அமைப்பு களையும் நீக்கிவிட்டு, ஒரே ஒரு உயர்கல்வி ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும். அப்படியென்றால், பல்கலைக்கழக மானியக் குழு என்பது மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கும் ஒரு அமைப்பாக மட்டும்தான் இருக்கும். நாம் முன்பு பேசிய தேசிய ஆராய்ச்சி அமைப்பானது, ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி செய்கிற அமைப்பாக இருக்கும்.

இவ்வளவு அதிகாரம் வாய்ந்த ஒரு தேசியக் கல்வி அமைப்பு, கல்வியாளரின் தலைமையில் இயங்குவதுதானே முறை? கல்வித் துறை உயர் அமைப்புக்கும் பிரதமரைத் தலைவராக்குவது எப்படிச் சரியாகும்?

கல்வித் துறையில் அரசியல் தலையீடே இருக்கக் கூடாது. கல்வி அமைப்புகள் தன்னாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும்.

- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x