Published : 29 Jul 2019 07:41 AM
Last Updated : 29 Jul 2019 07:41 AM

சமூகத்திடமிருந்து குழந்தைகளைப் பிரித்துவைக்கும் கல்விக் கொள்கை இது! 

புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு வெளியான நாளிலிருந்தே தொடர்ந்து அதைக் குறித்து விவாதித்துவருபவர் ‘பொதுக் கல்விக்கான மாநில மேடை’ அமைப்பின் பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு. கட்டுரைகள், அறிக்கைகள், கருத்தரங்குகள், அறைக் கூட்டங்கள் என்று இடைவிடாமல் புதிய கல்விக் கொள்கையைக் குறித்த தனது விமர்சனங்களை முன்வைத்துவருகிறார். பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த விரிவான நேர்காணலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்:  

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆட்சிக் காலங்களிலும் மத்திய அரசு கல்விக்கொள்கையை வகுத்திருக்கிறது. இப்போது மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பலைகள்? 

கல்வித் துறை மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் பொதுவான ஒத்திசைவுப் பட்டியலில்தான் இருக்கிறது. இந்நிலையில் கல்வி குறித்த எல்லா முடிவுகளையும் மத்திய அரசுதான் எடுக்கும் என்பது அரசமைப்புச் சட்டத்தின்படி நியாயம் அல்ல. 1968-ல் முதன்முதலாக முதலாவது தேசியக் கொள்கை வகுக்கப்பட்டது. அந்தக் கொள்கைக்கு ஆதாரம் கோத்தாரி கமிஷன் அளித்த பரிந்துரைகள். 1968 கல்விக் கொள்கையானது இந்தியா முழுக்கவும் கல்வித் துறை சார்ந்து ஒரு சட்டகத்தைத்தான் கொடுத்தது.

அனைத்து மாநிலங்களும் இந்தந்த விஷயங்களைப் பின்பற்றலாம் என்கிற வழிகாட்டுதலைத்தான் தந்தது.  அவற்றைச்  செயல்படுத்துவது எப்படி என்கிற முழுச் சுதந்திரத்தையும் மாநிலங்களுக்கே கொடுத்துவிட்டார்கள். உதாரணத்துக்கு, 1968 கல்விக் கொள்கையிலேயே 10+2+3 முறை அறிமுகப்படுத்துவிட்டது. +2 படிப்பானது சில மாநிலங்களில் இன்டர்மீடியேட் என்ற பெயரில் கல்லூரியோடு இணைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அது பள்ளிக்கல்வியுடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் +2 முறை அறிமுகமானது 1977-78ம் ஆண்டில்தான்.

ஆக, கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் அது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டது. பள்ளிக்கல்வியோடு இணைத்தால்தான் நிறைய பேரைப் படிக்கவைக்க முடியும் என்பதால் தமிழ்நாட்டில் +2 முறையை மேனிலைக் கல்வியில் வைத்தார்கள். அதுதான் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆண்களும் பெண்களும் மிகப் பெரிய அளவில் படிப்பதற்குக் காரணமாயிற்று. இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர்கல்வியில் முதன்மை நிலை வகிப்பதற்கும் அதுவே காரணம். கல்வித் துறையில் மாநிலங்களுக்கும் உரிமை வழங்கப்பட்டதால்தானே அது சாத்தியமானது?  

1986 கல்விக் கொள்கையும்கூட மாநில அரசின் அதிகாரங்களின் மீது கைவைக்கவில்லை.  ஆனால், தற்போதைய கல்விக் கொள்கை வரைவில் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசே தன் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறது. மாநிலங்களுக்கு எந்த உரிமையையும் கொடுக்கவில்லை. கல்வித் துறை சார்ந்த அனைத்து முடிவுகளையும் பிரதமர் தலைமையிலான ராஷ்டிரிய சிக்ஷ ஆயோக் மட்டும்தான் எடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தேசிய ஆராய்ச்சி அமைப்பு என்ற பெயரில் தொடங்கப்பட இருக்கும் புதிய அமைப்பின் உறுப்பினர்களைக்கூட ராஷ்டிரிய சிக்ஷ ஆயோக்தான் நியமிக்கும். எனவே, புதிய கல்விக்கொள்கையின்படி மத்திய அரசாங்கம் சொல்கிற வேலைகளைச் செய்யக்கூடிய இடத்தில்தான் மாநில அரசுகள் இருக்குமேயொழிய தமக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இல்லை. 

இலவசக் கட்டாயக் கல்வியை மூன்று வயது தொடங்கி பதினெட்டு வரைக்கும் நீட்டிக்க வேண்டும் என்கிறது இந்த வரைவு. இது வரவேற்கப்பட வேண்டிய அம்சம் அல்லவா? 

இன்றைக்கு இருக்கிற கல்வி உரிமைச் சட்டமே நீர்த்துப்போன ஒன்று. அந்தச் சட்டத்தை இந்த வரைவு நிர்மூலமாக்கிவிட்டது. குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் பள்ளிகளில் இருக்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டம் சொல்கிறது.  ஆனால், புதிய கல்விக்கொள்கை வரைவில் அதையெல்லாம் குறைத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சுற்றுச்சுவர் போன்ற குழந்தைகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தினால் போதும் என்று சொல்கிறார்கள். சமமான கல்வி வாய்ப்பை மறுத்துவிட்டு அதன் பிறகு இலவசக் கல்விக்கான வயதை நீட்டிப்பதில் மட்டும் என்ன அர்த்தம் இருக்க முடியும்? 

ஆசிரியர்களுக்கு அவர்களது பணிக்காலம் முழுவதும் தொடர்ச்சியான பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்பதும் சரியானதாகத்தானே தோன்றுகிறது? 

ஆசிரியர்களுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் பயிற்சியளிக்க முடியுமோ அதையெல்லாம் அளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், ஒருவர் ஆசிரியராவதற்கு பல்கலைக்கழகங்களில் நான்காண்டு படிப்பை முடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நிச்சயமாக, வசதியில்லாதவர்கள் நான்காண்டு கால ஆசிரியர் படிப்புக்குச் செல்ல முடியாது. பணம் இருப்பவர்கள் மட்டும்தான் ஆசிரியர்களாக முடியும். இன்னொரு பக்கம் தேசிய ஆசிரியர் திட்டம் என்பதையும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

பள்ளிக்கூடங்களில் முதலிடம் பெறும் மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களை தேசிய ஆசிரியர் திட்டத்துக்குப் பரிந்துரைப்பார்கள். பெற்றோர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் தேசிய ஆசிரியர் திட்டத்தில் பங்கேற்கலாம். அவர்கள், படிப்பில் பலவீனமாக இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவார்கள் என்கிறார்கள். இது எப்படி நியாயமான அணுகுமுறையாக இருக்கமுடியும்? பள்ளிகளிலிருந்து இடைநிற்கும் மாணவர்களை அழைத்துவந்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளித்து அவர்களது முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் ஆர்வலர்களை உள்ளூர்க் கதாநாயகர்கள் என்று வர்ணிக்கிறது இந்தக் கல்விக்கொள்கை.

உண்மையில் இதெல்லாம் ஆசிரியருடைய வேலை. ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் தவிர வேறு எந்த வேலையும் கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு ஆசிரியர் செய்யவேண்டிய வேலையை எல்லாம் தன்னார்வலர்களிடம் செய்யச் சொல்வது என்ன நியாயம்?
மேலும், பணிவாய்ப்பு, பதவி உயர்வு இரண்டிலுமே இட ஒதுக்கீட்டைப் பற்றி பேசவே இல்லை. விளிம்புநிலை மக்களின் வேலையின்மைக்கு இட ஒதுக்கீடுதான் காரணம் என்று குறிப்பிடுவதிலிருந்தே இவர்களின் மனப்போக்கு புரியவில்லையா? ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுப்பது வேறு. ஆனால், அவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். பணியனுபவத்தைக் கணக்கிலெடுத்துக்கொள்ள மாட்டேன், தேர்வு நடத்தித்தான் பதவி உயர்வைத் தீர்மானிப்பேன் என்பதெல்லாம் அநீதி. 

இதற்கு முந்தைய கல்விக் கொள்கைகளில் இல்லாத அளவுக்கு தொடக்கநிலைக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கத்திருக்கிறார்கள் அல்லவா? 

எல்கேஜி, யுகேஜி என்பதெல்லாம் முறைசாராக் கல்வி. பள்ளிகளில் அவை நடத்தப்பட்டாலும்கூட அவற்றைப் படிக்கவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. முறைப்படி எழுதப் படிக்கத் தொடங்குவது என்பது ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் தொடங்குகிறது. எல்கேஜி, யுகேஜி என்ற வகுப்புகளை குடும்ப அமைப்பிலிருந்து பள்ளி அரவணைப்புக்கு மாறக்கூடிய ஒரு காலகட்டமாகத்தான் பள்ளிகளும் பெற்றோர்களும் பார்க்கிறார்கள். ஆனால், இப்போது ப்ரீகேஜியில் தொடங்கி ஒன்றாம் வகுப்பையும் இரண்டாம் வகுப்பையும் ஒன்றுசேர்த்து ஐந்தாண்டுகள் அடிப்படைக் கல்வியை அறிமுகப்படுத்துகிறார்கள். அதன் உடனடி விளைவு, தற்போது 17 வயதில் ப்ளஸ் டூ முடிக்கிற குழந்தை இனிமேல் 18 வயதில்தான் ப்ளஸ் டூ முடிக்க முடியும். 

பள்ளியிலேயே தொழிற்கல்வி அறிமுகம் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

மூன்று வயது குழந்தைக்குத் தொழிற்கல்வியை அறிமுகப் படுத்துவது என்பது எந்த வகையிலும் ஏற்கக்கூடியது அல்ல. உழைக்கிற மக்கள் உடலுழைப்பு சார்ந்தவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தாங்கள் படும் கஷ்டங்களைத் தங்களது பிள்ளைகள் படக் கூடாது என்றுதான் நினைப்பார்கள். அந்தப் பிள்ளைகளை உயர்கல்வியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தாமல் தொழிற்கல்வியை நோக்கி நகர்த்துவது நல்லதல்ல.

கல்வியைப் பொறுத்தவரைக்கும் உள்ளீடு (இன்புட்) முறையைத்தான் பின்பற்ற வேண்டும். அப்துல் கலாமோடு படித்த மற்ற மாணவர்கள் எங்கே போனார்கள், மயில்சாமி அண்ணாத்துரை முப்பது மாணவர்களில் ஒருவராகப் படித்தேபோது அவரை உங்களால் கண்டுபிடித்திருக்க முடியுமா, என்றெல்லாம் நாம் கேள்வியெழுப்பலாம். எனவே, எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் உள்ளீட்டு முறைதான் சரியானதாக இருக்கமுடியும்.

ஒருவேளை, பத்தாம் வகுப்பில் ஒரு குழந்தை தோல்வியடைந்தால் அதற்காகத்தானே தனியாக ஐடிஐ என்று தனியாக வைத்திருக்கிறோம்? அப்போது தொழிற்கல்வியைப் பயிற்றுவிப்பதுதானே சரியானதாக இருக்க முடியும்? பதினான்கு வயதாகும் முன்பே ஒரு குழந்தைக்குத் தொழிற்கல்வியைப் பயிற்றுவிப்பது எப்படி நியாயமாக இருக்கமுடியும்?
அதைவிடவும் முக்கியமாக ஒன்பதாம் வகுப்பிலேயே படிக்கப்போவது கணிதமா அல்லது உயர்சிறப்பு கணிதமா என்று எப்படி தீர்மானிக்க முடியும்?  பதினான்கு வயது என்பது என்ன படிக்க வேண்டும் என்று தீர்மானிக்கிற வயதே கிடையாது. இன்றைய சூழலில் கல்லூரிப் படிப்பில் அடியெடுத்துவைத்த பிறகுதான் மாணவர்கள் உயர்கல்விப் படிப்புகளையும்  உயர்கல்வி நிறுவனங்களைப் பற்றியும் தெரிந்துகொள்கிறார்கள்.

அப்படியிருக்க 14 வயதில் தான் படிக்க வேண்டிய பாடம் எதுவென்று ஒரு கிராமப்புற மாணவரால் எப்படி தீர்மானிக்க முடியும்? 
10+2 முறை நன்றாக இயங்குகிறது என்று இந்த வரைவு ஏற்றுக்கொள்கிறது. ஒரு கல்வி முறையானது நன்றாக இயங்குகிறது என்னும்போது அப்படியே வைத்துக்கொண்டு அதை மேலும் எப்படி மேம்படுத்துவது என்றுதானே யோசிக்க வேண்டும்? அதற்குப் பதிலாக, அந்த முறையையே மாற்றுவதில் எந்த நியாயமில்லை. புதிய கல்விக் கொள்கையானது குடும்பங்களிலிருந்தும் சமூகத்திடமிருந்தும் குழந்தைகளை முற்றிலுமாகப் பிரித்துவிடும், சமூகத்துடன் குழந்தைகள் ஊடாடுவதற்கான நேரமே இருக்காது. சமூகத்தில் தன்னுடைய பொறுப்பை உணராமலேயே ஒரு வேலைக்கான தேவை, அந்த வேலைக்கான திறன்களை வளர்த்துக்கொள்வது என்பதற்கே  ஒரு குழந்தைக்கு நேரம் சரியாக இருக்கும்.

மும்மொழித் திட்டத்தில் தாய்மொழியைத் தவிர்க்காதபட்சத்தில் இன்னொரு இந்திய மொழியைக் கற்றுக்கொள்வதில் என்ன தவறு? 

தாய்மொழியின் வழியாகத்தான் ஒரு குழந்தை கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. மூன்று வயது வரை ஒரு குழந்தை எந்த மொழியில் குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டிருந்ததோ, அதே மொழியில் பள்ளியிலும் கற்பிக்கப்பட வேண்டும். தற்போது சந்தைத் தேவைக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் கூடுதலாக ஆங்கிலமும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக ஒரு மூன்றாவது மொழியைப் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படி மூன்றாவது மொழிக்காக அந்தக் குழந்தை செலவுசெய்ய வேண்டிய நேரத்தை அறிவியலுக்கோ கணிதத்துக்கோ அல்லது விளையாட்டுக்கோ செலவிடலாமே. எந்த வயதில் எந்த மொழி தேவையோ அந்த மொழியை அந்தக் குழந்தை கற்றுக்கொள்ளலாமே.

மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இந்தியைத் திணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானதுதான். தொழிற்கல்வி, மூன்றாவது மொழி என்பதெல்லாம் குழந்தைகளின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகத்தான் அமையும். மேலும், தொடக்க நிலைக் கல்வியிலேயே மாநில அளவிலான தேர்வுகளை இந்த வரைவு பரிந்துரைக்கிறது. தற்போது பள்ளிக்கூடங்களில் தொடர் மற்றும் முழு மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட்டுவருகிறது. இந்த முறைப்படி ஒவ்வொரு நாளும் குழந்தையின் நடவடிக்கைகளை மதிப்பிடுவார்கள்.

நேற்றுவரைக்கும் குழந்தை எழுதவில்லை, இன்று எழுதுகிறது. நேற்றுவரைக்கும் கேள்விகள் கேட்கவில்லை, இன்று கேள்வி கேட்டிருக்கிறது என்று குழந்தைகள் தினந்தோறும் மதிப்பீடு செய்யப்படும். தற்போதைய வரைவில் மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்படும் என்கிறார்கள், அதற்கான கற்றல் தகுதிகள் அனைத்திந்திய அளவில் இருக்கும் என்கிறார்கள். அப்படியென்றால் தேர்வு முடிவுக்கேற்ப மாணவர்களை அதே வகுப்பில் நிறுத்திவைப்பார்களா இல்லை அடுத்த வகுப்புக்குச் செல்ல அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை.

நான்காண்டு உயர்நிலைக் கல்வியில் அறிவியல் படிப்பவர்கள் கலைப் பாடங்களையும் கலைப் பிரிவுகளில் படிப்பவர்கள் அறிவியல் பாடங்களையும் விருப்பப் பாடமாக படித்துக்கொள்ளலாம் என்று  கூறப்பட்டிருக்கிறதே... 

24 அடிப்படைப் பாடங்களைச் சொல்லியிருக்கிறார்கள். கூடுதலாக 16 விருப்பப் பாடங்கள். ஆக மொத்தம், 40 பாடங்கள். 16 விருப்பப் பாடங்களில் ஏதாவது ஒரு தொழிற்கல்வியும் இருக்க வேண்டும். தொழிற்கல்வி இல்லாமல் +2 முடிக்க முடியாது. அப்படியென்றால், இது குழந்தைகளுக்கு கூடுதல் மன அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியது இல்லையா? பாடங்கள் குறைக்கப்படும், பாடச் சுமை குறைக்கப்படும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியில் மேனிலைக் கல்வியில் தேர்ச்சி பெறுவது உயர்கல்வி பெறுவதற்குத் தகுதியல்ல என்கிறீர்கள். பள்ளிக்கூடங்களில் இவ்வளவு நெகிழ்வுத் தன்மையோடு படித்த குழந்தைகள் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எப்படி எதிர்கொள்வார்கள்? அப்படியென்றால் சாதாரணமான பி.ஏ, பிஎஸ்ஸி, பி.காம் படிப்பவர்களைக்கூட  தடுக்கிற ஏற்பாடுதானே இது?  

அருகிலுள்ள பள்ளிகள் ஒரு வளாகமாக ஒருங்கிணைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த முயற்சி எந்த அளவுக்குப் பயனுள்ளதாக அமையும்? 

பள்ளி வளாகம் எப்படி இருக்க வேண்டும் என்று கோத்தாரி கமிஷன் பரிந்துரை செய்தது. ஆனால், கோத்தாரி கமிஷனுக்கு முன்பே தமிழ்நாட்டில் காமராஜர் காலத்தில் 3 கி.மீ.க்கு ஒரு தொடக்கப் பள்ளிக்கூடம் தொடங்கியிருக்கிறோம். 5 கி.மீ.க்கு ஒரு உயர்நிலைப் பள்ளி தொடங்கியிருக்கிறோம். கருணாநிதி முதல்வராக இருந்தபோது குடியிருப்புப் பகுதிகளில் 1 கி.மீ.க்கு ஒரு ஒரு தொடக்கப்பள்ளி, 3 கி.மீ.க்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ.க்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 கி.மீ.க்கு ஒரு மேனிலைப்பள்ளி என்று தொடங்கினார். எனவே, கல்வித் துறையைப் பொறுத்தவரை தேசிய அளவில் ஒரு கொள்கையே இருக்க முடியாது. பள்ளிக்கூடமே அதிகம் இல்லாத மாநிலங்களுக்கு வேண்டுமானால் இந்தக் கொள்கை பொருந்திப் போகலாம். தமிழகத்துக்கு இந்தக் கொள்கை தேவையே இல்லை. 

பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எங்கு வேண்டுமானாலும் சென்று படித்துக்கொள்ளலாம். ஏழைப் பிள்ளைகளாக இருந்தால் பள்ளி வளாகங்கள் அருகில் எங்கு இருக்கிறதோ அங்கு சென்றுதான் படிக்க வேண்டும். பக்கத்தில் இருக்கிற பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அந்தப் பள்ளிக்கூடத்தை மூடிவிடுவார்கள். இது சமத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானது. உளவியல்ரீதியாகவும் குழந்தையை பாதிக்கும். பெண் குழந்தைகள் படிப்பைப் பாதியில் நிறுத்துவது என்பது நிச்சயமாக அதிகரிக்கும்.

- செல்வ புவியரசன், 
தொடர்புக்கு: puviyarsan.s@hindutamil.co.in

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x