Published : 29 Jul 2019 07:03 AM
Last Updated : 29 Jul 2019 07:03 AM

செபியின் தன்னாட்சி நீடிப்பது அவசியம்

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) உபரி நிதியில் 75%-ஐ மத்திய அரசின் தொகுப்பு நிதியில் சேர்த்துவிட நிதி மசோதாவில் வகைசெய்யப்பட்டிருக்கிறது; இந்த நிதி மிகவும் கணிசமானது அல்ல. இந்த நிதியைக் கொண்டு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிதிப் பற்றாக்குறையைக் குறைத்துவிட முடியாது. பிறகு ஏன் இந்த முயற்சி என்றால், ‘செபி’ அமைப்பைக் கட்டுக்குள் வைப்பதற்காகத்தான் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. ‘உபரி நிதியை மத்திய அரசு கேட்டுப் பெறுவதால் எங்கள் அமைப்பின் சுயேச்சையான செயல்பாடு பெரிதும் பாதிக்கப்படும்’ என்று ‘செபி’ தலைவர் அஜய் தியாகி மத்திய அரசுக்கு ஜூலை 10-ல் கடிதம் எழுதியிருக்கிறார்.

மேலும், ‘செபி’ அமைப்பின் வருடாந்திர வரவு-செலவுகளுக்குப் பிறகு எஞ்சும் உபரி நிதியில் 25% தன்னுடைய கையிருப்பு நிதியுடன் சேர்த்துவிட்டு, எஞ்சிய 75%-ஐ மத்திய அரசின் தொகுப்பு நிதியில் சேர்த்துவிட, நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ‘செபி’ தன்னுடைய மூலதனச் செலவுகளுக்கு மத்திய அரசிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் என்றும் ‘செபி’ சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு ஒழுங்காற்று முகமை இப்படி தனது நிதித் தேவைக்காகவும் நிர்வாக நடவடிக்கைகளுக்காகவும் அரசின் கையையும் ஒப்புதலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை வந்தால், அதனால் சுயேச்சையாகச் செயல்பட முடியாது. சட்டபூர்வமான அமைப்பான செபியின் சுதந்திரத்தில் அரசு கை வைப்பது ‘செபி’ அமைப்பை மட்டுமல்ல, அது கண்காணிக்கும் நிதிச் சந்தையையும் பாதிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. பங்கு வெளியீட்டாளர்களையும் நிறுவனங்களையும் கண்காணிக்க வேண்டிய ‘செபி’ அமைப்பே இன்னொரு அமைப்புக்கு நேரடியாகக் கட்டுப்பட நேரும்போது அதனால் திறமையாகவும் நடுநிலையாகவும் செயல்படுவது கடினம்.

பங்குச் சந்தைகளில் நடைபெறும் தில்லுமுல்லுகளைத் தடுக்கவும் முதலீட்டாளர்களின் நலனைக் காக்கவும் பங்குச் சந்தை மீது நம்பகத்தன்மை அதிகரிக்கவும்தான் ‘செபி’ அமைப்பே உருவாக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியிடமும் நிதி அமைச்சகம் உபரி நிதியைக் கேட்டு, தொடர்ந்து வலியுறுத்துவதையும் இத்துடன் இணைத்துப் பார்ப்பது அவசியமாகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, தேசிய மாதிரி கணக்கெடுப்பு முகமை ஆகியவற்றின் சுதந்திரத் தன்மையை மதிக்காமல், அவை அரசுக்குக் கட்டுப்பட்டவைதான் என்பதை நிலைநாட்டும் முயற்சிகளாகவும் இவற்றைப் பார்க்க வேண்டியிருக்கிறது. செபி போன்ற அமைப்புகளுக்கு முழு அதிகாரத்தை அளிக்க வேண்டும், அதேசமயம் அவற்றின் சொத்துகள், உபரி நிதி போன்றவற்றை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாறாக, இத்தகு அமைப்புகளின் அதிகாரங்களையெல்லாம் எடுத்துக்கொண்டுவிட்டால் கூடுதல் நிர்வாகத்துக்கு உதவும் என்று அரசு நினைத்தால் அம்முயற்சி பெரும் ஆபத்தில்தான் போய் முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x