Published : 26 Jul 2019 10:32 AM
Last Updated : 26 Jul 2019 10:32 AM

கிரேக்கத்தின் புத்தெழுச்சி ஐரோப்பாவுக்கு மகிழ்ச்சி

ரோஜர் கோஹென்

ஐரோப்பியக் கண்டத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி ஏதாவது உண்டா என்று தேடுகிறீர்களா? கிரேக்கம் பற்றிப் படியுங்கள். நாலில் ஒரு பங்கு பொருளாதாரத்தை இழந்த கிரேக்கம் இப்போது வளர்ச்சியுற்று நிலைமையை அப்படியே மாற்றிவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களில் தீவிர நிலையை எடுக்க வேண்டும் என்ற முனைப்பு தோல்வி கண்டிருக்கிறது, அமெரிக்க எதிர்ப்பும் வலுவிழந்துவிட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அரசியல் நிலையற்ற தன்மையும் முடிவுக்கு வந்துவிட்டது. நாட்டை மோசமான பொருளாதார நிலைக்குக் கொண்டுசென்ற இடதுசாரித் தலைவர் அலெக்சி சிப்ராஸ் மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டார். புதிய நாஜி கட்சியான ‘கோல்டன் டான்’ படுதோல்வி அடைந்து நாடாளுமன்றத்திலிருந்தே விரட்டப்பட்டுவிட்டது.

சாமானிய மக்களின் ஆதரவைப் பெற, அவர்களுக்குத் திருப்தி அளிக்கும் கொள்கைகள், செயல்களில் ஈடுபட்ட கிரேக்கம் இப்போது அதிலிருந்து விலகிவிட்டது. அதற்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி சில பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. தேசியவாதமும், வெளிநாட்டவர் மீது வெறுப்பும் வளர்வது மட்டும் ஐரோப்பாவில் நிகழ்வதல்ல; சுதந்திர ஜனநாயகக் கருத்துகளும், உள்ளூர் மக்களின் சுதேசக் கருத்துகளும் தொடர்ந்து வளர்வதும் வடிவதுமாக உள்ள கண்டம்தான் ஐரோப்பா.

கிரேக்கத்தின் குட்டிக்கரணம்

வேலையில்லாதோர் எண்ணிக்கை 30% என்ற அளவை நெருங்கியபோதும், ஈரோ செலாவணிப் புழக்கத்திலிருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டது என்ற குழப்பமான தகவலுக்கு இடையிலும், திவாலாகிவிடாமல் தடுக்க ஏராளமான மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும், நிலைமையைச் சமாளிக்கப் பல சிக்கன நடவடிக்கைகள் கட்டாயம் என்று வலியுறுத்தி சிரியாவிலிருந்து அகதிகள் அலையலையாக வந்த குவிந்தபோதும் கிரேக்கம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டுவிட்டது. கிரேக்கத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது என்ற தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது தெளிவாகிவிட்டது.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து கிரேக்கத்தை மீட்க சர்வதேச அளவில் மீட்பு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டன. அதற்கான நிபந்தனைகளை ஏற்க மாட்டோம் என்று 2015-ல் கிரேக்க மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தெரிவித்தனர். மக்களின் முடிவை ஏற்காதீர்கள் என்று பன்னாட்டு நிறுவனங்கள் கிரேக்க ஆட்சியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தன. மிகவும் தவறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முடிவுகளை எடுக்கும் மக்கள், அதன் மோசமான விளைவுகளை அனுபவித்ததும் தங்களுடைய முடிவுகளை மாற்றிக்கொள்கின்றனர். இதுதான் ஜனநாயகத்தின் சிறப்புத்தன்மை. இதை பிரிட்டனும் புரிந்துகொள்ள வேண்டும்.
கிரேக்கத்தின் குட்டிக்கரணம் இப்போது முழுமையடைந்துவிட்டது. மிட்சோடாகிஸ் பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். ஹார்வர்டிலும் ஸ்டான்ஃபோர்டிலும் படித்தவர். அமெரிக்கத் தன்மை மிகுந்தவர், தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறவர் என்ற விமர்சனங்களையும் மீறி மிட்சோடாகிஸ் வெற்றிபெற்றுப் பிரதமராகியிருக்கிறார்.
நிறுவனங்கள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைப்பேன், தனியார்மயமாக்குவதற்குள்ள தடைகளை அகற்றுவேன், தொழில் துறை முதலீட்டை ஊக்குவிப்பேன், பொருளாதாரத்தை டிஜிட்டல்மயமாக்குவேன், அரசுத் துறை நிறுவனங்களில் திறமையை மேம்படுத்துவேன், முதலீட்டைப் பெருக்குவேன் என்றெல்லாம் வாக்குறுதி அளித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்திருப்பதால், தன் திட்டங்களை முன்னுரிமை தந்து விரைந்து நிறைவேற்ற அவருக்குத் தடையில்லை.

வலிமைமிக்க ஐரோப்பிய அமைப்புகள்

வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றுவது எளிதல்ல. வேலையில்லாத் திண்டாட்டம் 18% என்ற அளவுக்குக் குறைந்துவிட்டாலும், மிதமான பொருளாதார வளர்ச்சியை எட்டியிருந்தாலும் கடன் கொடுத்த ஜெர்மனியும் பிற நாடுகளும் விதிக்கும் நிதிக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியாக வேண்டும். அரசின் செலவைவிட வரவு அதிகரிக்கும் வகையில் உபரி காட்டியாக வேண்டும். தொழில் துறை முதலீட்டையும் வளர்ச்சியையும் அதிகரிப்பேன் என்று அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும். தொழில் நிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரியையும் குறைத்தாக வேண்டும். தொழில் முனைவோர்களையும் புதிய தொழில் துறைக் கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்க வேண்டும். பழைய வளர்ச்சி மாதிரிகள் இனி பயன்படாது.

புதிய பிரதமர் இத்தகைய சவால்களுக்குப் பழக்கப்பட்டவர்தான். 2013-ல் அவர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சராக இருந்தார். கிரேக்கத்துக்குக் கடன் கொடுத்த நாடுகளின் நிபந்தனைப்படி, பொது ஊழியர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்தது. இதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டக்காரர்கள் அப்போது அவருடைய அலுவலகத்தையும் சூழ்ந்துகொண்டனர். அங்கே நான் இருந்தேன். “கிரேக்கம் தாங்கக்கூடிய சுமைக்கும் அதிகமாக பாரம் ஏற்றப்பட்டிருக்கிறது” என்றார். வெய்மார் குடியரசைப் போல கிரேக்கமும் நொறுங்கியிருக்கக்கூடும். அப்படியாகாமல் தாக்குப்பிடித்ததற்கு ஒரே காரணம், தேசியவாதக் கூச்சல்களை எதிர்த்து நிற்கும் வலிமையுடன் ஐரோப்பிய அமைப்புகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

வேதனையான இந்தச் சமயத்தில் கிரேக்கத்துக்கு அமெரிக்கா செய்த உதவிகள், 1967 முதல் 1974 வரையில் கிரேக்கத்தை ஆண்ட ராணுவ சர்வாதிகார அரசுக்கு அமெரிக்கா அளித்த ஆதரவால் மக்களுக்கு ஏற்பட்டிருந்த கசப்புகளை நீக்கிவிட்டன. பராக் ஒபாமா நிர்வாகம், இதற்கு முன்னர் ஆட்சிசெய்த அலெக்சி சிப்ராஸ் நிர்வாகத்துக்கு உதவிசெய்து, அதை இடதுசாரி சித்தாந்தத் தீவிரத்திலிருந்து மையவாதத்துக்கு அருகில் கொண்டுவந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பொதுச் செலாவணியான ‘ஈரோ’வைக் கைவிட்டுவிட வேண்டாம் என்று அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடேன் அவருக்கு ஆலோசனை கூறினார். அப்படி விலகிவிட்டால், பிறகு அந்த முடிவைத் திரும்பப் பெற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதனால், ஐரோப்பிய மண்டலம் பிளவுபடுவதும் தடுக்கப்பட்டது.

புதிய பூச்சாண்டி

கிரேக்கர்களிடையே அமெரிக்க எதிர்ப்புணர்வு பெருமளவுக்கு மறைந்துவிட்டது. 2018 நவம்பர் 17-ல் அது தீவிர வடிவம் கொண்டு, பெரும் வன்முறைக்குக் காரணமானது. அப்போது ஏராளமான படுகொலைகளும் நடந்தன. ‘அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும், சிக்கனம் வேண்டும்’ என்று கிரேக்கத்துக்கு அடிக்கடி அறிவுறுத்திய ஜெர்மனி, புதிய பூச்சாண்டியாகிவிட்டது, முன்னர் பூச்சாண்டியாக இருந்த அமெரிக்கா நண்பனாகிவிட்டது. துருக்கியுடன் ஏற்பட்ட புதிய பதற்றங்களால் அமெரிக்காவின் ஆதரவு நமக்கு அவசியம் என்று கிரேக்கர்கள் உணர்ந்தனர். மிகவும் நெருக்கடியான இத்தருணத்தில் அமெரிக்கா நம்மை ஆதரிக்கிறது என்ற புரிதலே, மக்களின் எதிர்ப்பை ஆதரவாக மாற்றிவிட்டது. அந்த மாற்றத்துக்கு ஏற்பத்தான் மிட்சோடாகிஸ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் கடலில் உள்ள பெட்ரோலிய எண்ணெயையும் நிலவாயுவையும் அகழ்ந்தெடுப்பதில் துருக்கி மற்றும் கிரேக்க சைப்ரியாட் அரசுகளுக்கிடையே பூசல் முற்றிக்கொண்டிருக்கிறது. மிட்சோடாகிஸின் முதல் கடமை இதற்குத் தீர்வு காண்பதாகிவிட்டது. தனது பகுதி என்று சைப்ரஸ் கூறும் இடத்தில் துரப்பண வேலையைச் செய்ய துருக்கி திட்டமிடுவது குறித்து ஆழ்ந்த கவலையேற்பட்டிருப்பதாக கிரேக்க வெளியுறவுத் துறை கடந்த மே மாதமே கூறியிருக்கிறது. இந்த சீண்டல் வேலையை நிறுத்துமாறு துருக்கி அதிகாரிகளுக்கு கிரேக்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

துருக்கி, கிரேக்கம், சைப்ரஸ் பகுதிகளில் அமைதியைப் பராமரிக்க வேண்டிய கடமை கிரேக்கத்தின் புதிய பிரதமருக்கு ஏற்பட்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியுள்ளனர். கிரேக்கப் பொருளாதாரத்துக்கு இந்த வருமானம் மிகவும் அவசியமானது. துருக்கியும் மேற்கத்திய நாடுகளுடன் உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; ரஷ்யாவை நாடக் கூடாது என்று கிரேக்கம் இப்போது விரும்புகிறது. கிரேக்கத்தில் புதிய நாள் உதயமாகியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இப்போதைய தேவையெல்லாம் பிரிட்டனும் தன்னுடைய (பிரெக்சிட்) முடிவிலிருந்து குட்டிக்கரணம் அடிப்பதுதான்.

© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x