Published : 23 Jul 2019 10:20 AM
Last Updated : 23 Jul 2019 10:20 AM

பத்திரிகை சுதந்திரம் ஜனநாயகத்தின் குறியீடு

உலகெங்கும் பத்திரிகையாளர்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கின்றனர் என்று 2019-க்கான ‘உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டெண்’ அறிக்கை தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது. இந்தக் குறியீட்டெண் ‘எல்லை கடந்த செய்தியாளர்கள்’ (ஆர்.எஸ்.எஃப்) என்ற அமைப்பால் 180 நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் குறைந்துகொண்டே வருகிறது என்று இந்தக் குறியீட்டெண் தெரிவித்திருப்பது நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணியாக ஒலிக்க வேண்டும். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தியாவில் 2018-ல் மட்டும் குறைந்தபட்சம் ஆறு பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை ஆற்றியதால் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று மேற்கண்ட அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் இடம் 138-லிருந்து 140-க்கு என்று இரண்டு இடங்கள் இறங்கிவிட்டது. 2016-ல் இந்தியாவின் இடம் 133, இதுவே 2017-ல் 136. 2014-ல் 140 ஆக இருந்தது என்றாலும் தற்போதைய வருடத்தில் அடைந்திருக்கும் பின்னடைவானது மிகவும் துலக்கமானது. எதிர்த் தரப்பினரையும், விமர்சிப்போரையும் தேசத் துரோகிகள், நாட்டுப்பற்று அற்றவர்கள் என்று கூறி ஒடுக்கவும் ஒழிக்கவும் நினைக்கும் இந்துத்துவவாதிகளின் செயல்பாடுகள், பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கிறது. பெண் பத்திரிகையாளர்களின் நிலை இன்னும் மோசம். அதேபோல, ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதம், மாவோயிஸப் பிரச்சினை போன்றவற்றைப் பற்றி செய்தி சேகரிக்கச் செல்வதென்பதே பெரும் ஆபத்தாகியிருக்கிறது. ஒரு பக்கம் அரசுத் தரப்பு, பத்திரிகையாளர்கள் மீது காலத்துக்கு ஒவ்வாத தேசத் துரோக வழக்கு பதிவுசெய்கிறது என்றால், இன்னொரு பக்கம் பயங்கரவாதிகள், புரட்சிகர அமைப்பினர், குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் ஆகியோரின் கோபத்துக்கும் பத்திரிகையாளர்கள் இலக்காகின்றனர்.

ஊடகங்களின் மீது வெறுப்பு காட்டுவதென்பது பல நாடுகளில் அதீத தேசியவாதத்தின் அடையாளமாக இருக்கிறது. இந்தியாவில் மத்திய அரசும் பல மாநில அரசுகளும் விருப்புவெறுப்பற்ற, விமர்சனபூர்வமான இதழியல் மீது முன்னுதாரணமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, இதழியலையே முடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. சமீபத்தில் செய்தியாளர்களை அமைச்சகத்தின் வளாகத்துக்குள் அனுமதிக்காமல் தடுத்துவிட்டதென்பது தனிப்பட்ட ஒரு நிகழ்வு கிடையாது. பத்திரிகையாளர்களுக்குத் தடை விதிப்பது, தகவல் தர மறுப்பது, பத்திரிகையாளர்கள் குறித்து அரசு அதிகார வட்டத்தில் மோசமான மொழியாடலை உருவாக்கிவைத்திருப்பது என்று பத்திரிகையாளர்களை முடக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

மனித உரிமைகள், மத அடிப்படை வன்முறைகள், ஊடகச் சுதந்திரம் போன்றவற்றைப் பற்றி வெளிநாடுகளும் சர்வதேச அமைப்புகளும் அக்கறை தெரிவிக்கும்போதெல்லாம் அவற்றை இந்திய இறையாண்மைக்குள் தேவையில்லாத தலையீடு என்று அரசு புறந்தள்ளிவிடுகிறது. ஆனால், இது இறையாண்மை பிரச்சினை அல்ல; ஒரு நாட்டின் பத்திரிகை சுதந்திரம் என்பது அந்த நாட்டின் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்துக்கான அடிப்படைக் குறியீடுகளில் ஒன்று. அங்கே நடக்கும் சரிவு ஒட்டுமொத்த ஜனநாயகத்தையும் சரிவில் தள்ளும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x